பழனிப் பிள்ளைத்தமிழ்
சின்னப்ப நாயக்கர்
சப்பாணிப்பருவம்5 / 11
பழனிப் பிள்ளைத்தமிழ் · சின்னப்ப நாயக்கர்
சப்பாணிப்பருவம்
11✓
அரியமறை முடியிலுறை யுபநிடத நிலைதெரியும்
அந்தணர்க ளாசிகொட்ட
ஆவலங் கொட்டநின் றயிராணி கேள்வன்முத
லமரருள முவகைகொட்டப்
பெரியநா யகியெனு முமைத்தாய் மகிழ்ச்சியொடு
பேரின்ப முறுவல்கொட்டப்
பேறான கலைமங்கை மகதியா ழிசையொடும்
பேர்பெற்ற மொழிகள் கொட்ட
உரியமதி வெண்குடைச் சிலைவேள் பணிந்துநின்
றோங்கியே துதிகள்கொட்ட
உன்மத்த ரானகயி லாசபதி முத்தமிட்
டுன்னைவாழ்த் தொலிகள்கொட்டத்
தரியலர்க ளெனுமவுணர் நெஞ்சுபறை கொட்டவே
சப்பாணி கொட்டியருளே
சதுமறைகள் பரவவரு பழனிமலை முருகனே
சப்பாணி கொட்டியருளே.
12✓
நெடுவரைகள் புடைபரவு வடகிரியு மிமமலையும்
நெறுநெறென வயிரமிட்ட
நிகளத்தை மெட்டி மெட்டிப்பொடி படுத்தியொரு
நினைவுகொண் டார்த்தெழுந்து
நிலைபெற்ற கந்ததனை வேரொடு மிடந்துமத
நீர்வழிந் தொழுகவெற்றி
நீள்புழைக் கையதனில் வச்சிரத் தாற்செய்த
நெடியசங் கிலியையேந்திப்
✓
படவரவி னெடுமுதுகி னிடைபரவு புடவிகிழி
படவுமிரு கோட்டிலெற்றிப்
பாய்ந்துதன் னிழலைச் சுளித்துமேற் கொண்டுவரு
பாகனைச் சீறியுதறிப்
பரிதியைக் கனியென்று மேக்குயரு மதிதனைப்
பாற்கவள மென்றுதாவிப்
பகிரண்ட கூடத்தை யெட்டிமைக் காரினைப்
பற்றிப் பிடித்துவாரிக்
✓
குடகுடென வேநீரை மொண்டுண்டு கடலிற்
குளித்தழன் றுன்னைமுதுகிற்
கும்பத் தலத்திலிட் டெண்டிசைக ளெங்குங்
குலாவியக ரப்படையெலாம்
கொன்றுழக் கிச்சென்று திருநீறி டாச்சமணர்
குடர்தனைச் சிதறியமரர்
கூட்டமிடு மினியகற் பகநிழலி லேநின்று
கோபந் தணிந்தறிவுசேர்
✓
தடவிகட நால்வாய் மருப்புப் பகுப்பதத்
தந்தியயி ராவதமுதற்
றந்தியெட் டுந்தாங்கு முலகைவல மாகவே
தான்வந்து சிவன்மார்பினிற்
சாய்ந்துகைக் கனியினைத் தாவென்று கேட்டிடத்
தந்தோ மெனக்கொடுப்பத்
தயவினுட னேகொள்ளு மீராறு கையினாற்
சப்பாணி கொட்டியருளே
சதுமறைகள் பரவவரு பழனிமலை முருகனே
சப்பாணி கொட்டியருளே.
13வேறு✓
நறைகம ழிதணிற் கவணெறி பவள்பா
னட்பு மிகுத்தோனே
நலமலி கருணைச் சிவனுமை புதல்வா
நற்றவர் மெய்ப்பேறே
பிறைமிலை சடிலற் குரையருள் துரையே
பெற்றி படைத்தோனே
பெருமலை யெனவுற் றருண்மயி லுடையாய்
பெட்புயர் வித்தாரா
விறன்மிகு மகரர்க் குறுபகை யுடையாய்
வெற்றி நிறைத்தோனே
விகசித கமலத் திருமகள் மருகா
வெட்சி மலர்த்தாமா
குறுமுன பரவத் தமிழுரை பகர்வோய்
கொட்டுக சப்பாணி
குலவிய பழனிச் சிவகிரி முருகா
கொட்டுக சப்பாணி.