முருகன் App
பழனிப் பிள்ளைத்தமிழ்
சின்னப்ப நாயக்கர்
சிற்றிற்பருவம்10 / 11
பழனிப் பிள்ளைத்தமிழ் · சின்னப்ப நாயக்கர்

சிற்றிற்பருவம்

26✓
பருமுத் தரிசி தனையாய்ந்து
பசுந்தே னதனை வடித்தெடுத்துப்
பவழக் குடத்தி லுலையேற்றிப்
பரிவு தரும்பாற் சோறாக்கி
ஒருமைப் படியே பூந்தளிரை
ஒன்றாய்ப் பறித்துக் கறிசமைத்தே
உண்ணும் படிக்கிங் குபசரிக்கும்
உரிமைப் பருவத் திளங்கோதைப்
பெருமை மடவார் நாங்களின்று
பிரியத் துடனே வெண்பளிங்காற்
பிரிய வகைக்குக் கட்டுவித்த
பெரிய மனையெம் மனையுன்றன்
அருமைச் சிறுகிண் கிணிக்காலால்
ஐயா சிற்றி லழியேலே
அமலா பழனிச் சிவகிரிவாழ்
அரசே சிற்றி லழியேலே.
27✓
களப முலைகள் புடைத்தெழுந்த
காலப் பருவத் துணைநினைப்போம்
கட்டி யணைத்துச் சிவனருளும்
கனியே யென்று வாழ்த்தல்செய்வோம்
பிளவு மிலையும் பகிர்ந்துனது
பேரைப் பாடித் துதிசெய்வோம்
பிரியத் துடனே யருகிருத்திப்
பிரசத் துடனே யமுதளிப்போம்
பழகி யிருந்து மெங்கண்முகம்
பாரா திருக்க வழக்குண்டோ
பாத மலர்கள் சிறுமணலின்
பரல்பட் டழுந்திச் சிவந்திடுமே
அழகு துரையே வைகாவூர்க்
கதிபா சிற்றி லழியேலே
அமலா பழனிச் சிவகிரிவாழ்
அரசே சிற்றி லழியேலே.
28✓
உம்பர்க் கிடர்செய் துலகனைத்தும்
ஒன்றாய்த் தனது வசப்படுத்தி
ஒருமை தவறிக் கடுங்கொடுங்கோல்
ஓச்சி நிருதர் புடைசூழ
வம்பத் தனமே மேற்கொண்ட
வலிசேர் சூரன் மனையிதன்று
மதுரைப் பதியி லரசுபுரி
மாற னறியக் கழுவேறும்
தம்பச் சமணர் மனையன்று
தமியேம் யாங்கண் மெய்வருந்தித்
தங்கத் தகட்டாற் செய்தமனை
தானே யறிந்து மறியார்போல்
அம்பொற் றிருந்தா மரைப்பதத்தால்
ஐயா சிற்றில் சிதையேலே
அமலா பழனிச் சிவகிரிவாழ்
அரசே சிற்றி லழியேலே.