முருகன் App
பழனிப் பிள்ளைத்தமிழ்
சின்னப்ப நாயக்கர்
வருகைப்பருவம்7 / 11
பழனிப் பிள்ளைத்தமிழ் · சின்னப்ப நாயக்கர்

வருகைப்பருவம்

17✓
கந்தா வருக கயவனிதை
கணவா வருக வனமடந்தை
காந்தா வருக விரைகொழிக்குங்
கடம்பா வருக கடவுளர்கள்
சிந்தா குலங்க டவிர்க்கவந்த
சேயே வருக மறைதுதிக்கும்
தேவே வருக பெரியவுமை
செல்வா வருக செகத்திலின்பம்
தந்தாய் வருக தவம்புரிவோர்
தவமே வருக வைகாவூர்த்
தலைவா வருக வோராறு
சமயா வருக சரவணத்தில்
வந்தாய் வருக சிவனருள்கண்
மணியே வருக வருகவே
வளஞ்சேர் பழனிச் சிவகிரிவாழ்
வடிவேல் முருகா வருகவே.
18✓
சீரார் நலஞ்சேர் பூவுலகிற்
றேவா சுரரின் மற்றையரிற்
றினமு முனது கொலுக்காணச்
செல்லா தாரார் இறைவளங்கள்
தாரா தாரா ருனதுபதந்
தனையே வணங்கித் தொழவேண்டித்
தழுவா தாரா ரெவ்வேளை
சமயங் கிடைக்கு மெனநினைந்து
வாரா தாரா ருனதருளை
வாழ்த்திப் புகழ்ந்து துதிக்கமனம்
வசியா தாரார் பணிவிடைகள்
வரிசைப் படியே நடத்தாதார்
ஆரா ரெனத்தா லாட்டுகின்ற
வரசே வருக வருகவே
அருள்சேர் பழனிச் சிவகிரிவா
ழையா வருக வருகவே.
19✓
பொன்னே வருக பொன்னரைஞாண்
பூட்ட வருக சிறுசதங்கை
புனைய வருக மணிப்பதக்கம்
பூண வருக தவழ்ந்தோடி
முன்னே வருக செவிலியர்கண்
முகத்தோ டணைத்துச் சீராட்டி
முத்த மிடற்கு வருகவெதிர்
மொழிகண் மழலை சொலவருக
தன்னே ரில்லா நுதற்றிலதந்
தரிக்க வருக விழியினின்மை
சாத்த வருக மேலாகத்
தானே வருக தேவர்தொழு
மன்னே வருக மாமாலின்
மருகா வருக வருகவே
வளஞ்சேர் பழனிச் சிவகிரிவாழ்
வடிவேல் முருகா வருகவே.