முருகன் App
பழனிப் பிள்ளைத்தமிழ்
சின்னப்ப நாயக்கர்
தாலப்பருவம்4 / 11
பழனிப் பிள்ளைத்தமிழ் · சின்னப்ப நாயக்கர்

தாலப்பருவம்

8✓
கங்கைக் கொருமா மகனே குகனே
கனியே கண்மணியே
கருணா லயமே மறையோர் தவமே
கருதும் பெருவாழ்வே
திங்கட் சடிலன் மகிழுங் குருவே
தேவர்கள் பணிகோவே
தெய்வச் சுருதிப் பொருளே பொருளின்
றெளிவே களிகூரும்
துங்கப் புயனேர் திருமான் மருகா
சோதிச் சுடரொளியே
தோகைக் குடையாய் நீபத் தொடையாய்
சொல்லுக் கினியானே
சங்கத் தொருவா பழனித் தலைவா
தாலோ தாலேலோ
தமிழா லுயருஞ் சிவமா மலையாய்
தாலோ தாலேலோ.
9வேறு✓
குவளைக் கருங்கட் கடைசியர்கள்
குடித்துக் களித்துக் கள்விலைக்குக்
குவையல் குவைய லாக்குவித்துக்
கூட்டி மணிநித் திலமளந்த
பவள வள்ளந் தனையிடுக்கிப்
பரிவி னுடனே குரவைபல
பாடு மிசையான் பள்ளர்குழாம்
பகட்டுக் கழுத்திற் பரம்பிணக்கித்
துவள வுழுத கருஞ்சேற்றிற்
றுலங்க விளைந்த செஞ்சாலித்
தொகையுங் கரும்பு முத்தீனச்
சோதிப் பிறைபோற் பணைகடொறுந்
தவளங் கொழிக்குந் திருப்பழனித்
தலைவா தாலோ தாலேலோ
சைவந் தழைக்கப் பிறந்தருளுஞ்
சதுரா தாலோ தாலேலோ.
10வேறு✓
தகறிற் பரியினின் மயின்மிசை பவனிகள்
வருவாய் தாலேலோ
சதுரிற் றுறைபல நிறுவிய மறைதொழு
சரணா தாலேலோ
புகரைக் குருவெனு நிருதரை விறல்கொளு
நிபுணா தாலேலோ
புதனைப் பெறுமதி நிலவிய சடையினன்
மதலாய் தாலேலோ
குகனைத் துணையெனு மரிமன மகிழ்தரு
மருகா தாலேலோ
குலவிப் பலபல திசையினு மிசைபெறு
குமரா தாலேலோ
பகரற் கரியன பொருடமிழ் முனிபெற
வருள்வாய் தாலேலோ
பழனிப் பதிவளர் சிவகிரி மருவிய
முருகா தாலேலோ.