முருகன் App
ஸ்ரீ வள்ளி நாயகன் நாடகக் காவியம்
சீ. விநாசித்தம்பி புலவர்
நம்பி வரம் வேண்டல்4 / 55
1வாழ்த்து2நாட்டுச் சிறப்பு3நம்பிராசன் அரசியல்4நம்பி வரம் வேண்டல்5திருமால் சிவமுனியாகவும் திருமகள் மானாகவும் உருவெடுத்தல்6திருமால் புத்திரிகளில் சுந்தரவல்லி மான்வயிற்றில் கர்ப்பமாதல்7வள்ளி பிறத்தல்8நம்பிராசன் வருகை9நம்பிராசன் வள்ளிக் குழந்தையைக் கண்டெடுத்தல்10வள்ளி புனங்காத்தல்11முருகன் திருத்தணிகை வருதல்12பஜனை13தினைப்புனத்து-நாரதர் வருகை14முருகனிடம் நாரதர் வருகை15முருகன் தினைப்புனம் வருதல்16வள்ளியின்முன் வேடன்17வள்ளியை முருகன் மன்றாடுதல்18முருகன் வேங்கைமரமாதல்19வேங்கை நீங்கி வேடுவனாகிறான்20வேடர் வருகை21முருகன் கிழவனாகிறான்22முருகன்—நம்பிக்கு திருநீறு கொடுத்தல்23கிழவரும் வள்ளியும்24பஜனை25வள்ளி அமுது கொடுத்தல்26வள்ளி—திருச்சுனை காட்டல்27கணபதி வருதல்28வள்ளிக்கு உபதேசம்29முருகன் காட்சி30முருகன் விட்டகல, வள்ளி தினைப்புனம் போகிறாள்31பாங்கிக்கு வள்ளி கூறுவது32முருகன் வினவுதல்33முருகன் பாங்கியைக் கேட்கிறார்34மடலேறுவேன் என்கிறார்35பாங்கி வள்ளியைக் கொணர்தல்36வள்ளி மனம் வருந்தல்37முருகா....உனக்கு38வள்ளி சிற்றூர் சேர்ந்தாள்39வள்ளியின் நிலை40வள்ளியைக் கொணர்தல்41வேடர் வள்ளியைத் தேடுதல்42வேடர் வருவதைக் கண்ட வள்ளி பயப்படுதல்43வேடுவர் மடிதல்44நாரதர் வருகை45நாரதர் தோத்திரம்46வள்ளியம்மையார், வேடரை எழுப்புதல்47முருகனும் வள்ளியும் சிற்றூரில்48நாரதர் வேதவிதி செய்தனர்49திருமண வாழ்த்து50முருகன் அருள்புரிதல்51திருத்தணிகைச் சிறப்பு52வேறு53தெய்வ குஞ்சரி வள்ளிநாயகன் திருப்பொன்னூஞ்சலில்54பயன்55மங்களம்
ஸ்ரீ வள்ளி நாயகன் நாடகக் காவியம் · சீ. விநாசித்தம்பி புலவர்

நம்பி வரம் வேண்டல்

✓
வடிவேல னருளாலே வாழுகிற நம்பிமன்னன்
மைந்தர் மனைவியொடு மனமகிழ்ந்து வாழ்ந்திருந்தும்
படிமீதில் ஓங்காரப் பச்சைமயில் வாகனனைப்
பாடித் தவங்கிடப்பான் பகலிரவு வேளையெலாம்.
✓
தேவி கொடிச்சியுடன் சித்திரவே லாயுதனைத்
திருவிழாப் பூசைகொண்டு தியானத் தவமிருந்தான்
மேவுபல ஆண்மகவை வேலவனே நீதந்தாய்
விளங்குமோர் பெண்குழந்தை விருப்பமுடன் தாரும்மென்பான்.
பல்லவி✓
இராகம்: பைரவி தாளம்: ஆதி
நீதரவில்லை என்றால் யார் தருவார்—அருள்
நீலமயி லேறும் கோலக் குமரையனே. (நீ)
அனுபல்லவி✓
ஆதர வுன்னையன்றி ஆருமிங் கில்லை
ஆறு முகத்தரசே அம்பிகை பாலகனே. (நீ)
சரணம்✓
சரவண பவனைச் சந்ததம் பாடுவார்
தங்குமுன் சந்நிதி வந்துவந் தாடுவார்
அருகினில் நின்றிடும் ஆனந்த வேலா
அறுபடை மேவிய அற்புத சீலா. (நீ)
✓
ஆறுமுகன் சந்நிதியில் அருந்தவமுஞ் செய்தார்கள்
அன்னதானங்களொடு பெருந்தருமஞ் செய்தார்கள்
கூறுகிற சோதிடமுங் குறியாகக் கேட்டார்கள்
குமரன் வெறியாட்டம் கொண்டமுது வைத்தார்கள்.
✓
இராகம்: உசேனி தாளம்: ஆதி
எங்கள் வேலா எங்கள் வேலா
ஈராறு கையனே எங்கள் வேலா
சங்கரன் மைந்தனே எங்கள் வேலா
தமியேற் கிரங்குவாய் எங்கள் வேலா.
✓
பெண்மகவொன் றீந்தருள் எங்கள் வேலா
பெருந்துயரம் தீர்த்தருள் எங்கள் வேலா
வண்மைமிகு கையனே எங்கள் வேலா
வண்ணமுரு கையனே எங்கள் வேலா
✓
இந்த விதமாக இருக்கின்ற போதினிலே
இனிஎன்ன வாகுமென இயம்புவேன் கேட்டிடுமின்
முந்தையொரு காலம் முத்திக்கு வித்துரைக்கும்
முனிவராம் கண்ணுவனார் மொழிந்தசா பத்தாலே.