முருகன் App
தரங்கை வீரவேலாயுதசுவாமி பிள்ளைத்தமிழ்
அம்புலிப்பருவம்7 / 10
தரங்கை வீரவேலாயுதசுவாமி பிள்ளைத்தமிழ்

அம்புலிப்பருவம்

59✓
கண்டுநேர் தேமொழிக் கவுரியை கன்றுட்
கண்ணின் மணியாத லானுங்
கருதினோர்க் கின்னமுத வுருவினான் மாதர்கட்
காவியை யலர்த்த லானும்
மண்டலங் கொண்டிசையி னில்வெறித் திடுதலான்
வள்ளியோ னாதலானும்
வானவர்க் கினிய வமிழ்தளித் திடுதலான்
மன்பதை புரத்தலானும்
விண்டவத் தரசனா வெழித்திடு தலான்
வேண்டினோர்க் கினியனாலும்
விரைமலர்க் காந்தளந் தொங்கலான் றன்னொடும்
விரும்பிநீ நிகர்த்தல் கூடும்
அண்டர்நா யகனெங்கள் மாசிலாமணி மகவோ
டம்புலி யாட வாவே
யலையெறி தரங்கைவரு வீரவே லவனுட
னம்புலி யாட வாவே.
60✓
வெம்பிக் கொடுஞ்சிறைப் பட்டநா ஞன்றனை
விடுக்குங் கடாட்ச விழியான்
வெந்திவன் மாதுலன் உன்னைச் செழுங்கவிகை
யாமெனக் கொண்ட வீரன்
நம்பிக்கு மைத்துன நீவந் துதித்திடு
நல்லிடமு மிவன் மாமனை
நற்றாய் பிறந்தகந் தக்கன் புகன்றசொன்
னல்லுடல் குறைப்ப உன்னை
உம்பர்க்கு மேலாக வார்சடையில் வைத்துன்
னுயிர்க்கருளி டித்தேவு முத்
தமனிவன் றாதையாமா கையால் உன்னுடற்
கூறு மொழித் தருளுவா
னெம்பொற் செழுங்கையால் வாவென் றழைத்தன
னம்புலி யாட வாவே
யலையெறி தரங்கைவரு வீரவே லவனுட
னம்புலி யாட வாவே.
61✓
கோரமுறு நெட்டுடற் றுளைவா ளெயிற்றுக்
கொடும்புகை யுணக் குண்டுகாண்
குப்புற்று நெட்டரா மணிக்கக்கிடக் கொத்து
கூர்மயி லிவர்க்குண்டு கா
ணீரமிர்த மதியொன்றுனக் கிங்கிவர்க்கு முக
மிருமூன்று மதியுண்டு காண்
எட்டிரட்டின் கலையுனக் குண்டிவர்க்கு வரும்
எட்டெட் டிருங்கலைகள் காண்
வாரமுறு கங்குலிற் குவலைய மலர்த்துவை
வருபகற் கங்கு லிடையு
மறிகடற் குவலைய மலர்த்துவ னுனதுகுறை
மதியால் மறுத்தி டாதே
யாரமணி தந்திமுக னேரிளையகந்த னொடு
மம்புலி யாட வாவே
யலையெறி தரங்கை வருவீர வேலவனுட
னம்புலி யாட வாவே.
62✓
கற்பகக் கொம்பினிற் கனிந்தொழுகு மழகுவளர்
கானக் குறத்தி யவடன்
காதற் கியைந்துகுழ னீவிப் புணர்ந்தினிய
கலவிய முதுண்ணு ஞான்றிற்
பொற்புறக் கொங்கைத் தடங்குங்குமக் கலவை
புளகமொடு தீட்டி வாட்டும்
பொற்படைக் கட்டுணைக் கஞ்சனமு மிட்டுநுதல்
பொட்டு மெதிர்நின்று தீட்டி
விற்பொலியு மென்கவுட் கனிகளை நெரித்திடும்
வேலைநன் னுதலி லொப்பும்
வெண்டரள மணிநகைக் கொப்புஞ் செழுங்கமல
மென்முகத் தொப்பு மாக்கி
யற்பினிற் கைபுனைய வல்லவ னிவனுட
னம்புலி யாட வாவே
யலையெறி தரங்கைவரு வீரவே லவனுட
னம்புலி யாட வாவே.
63✓
நெடிபடு பெருங்கானி லூரழ்ஒரு சருகிடிற்
பொலனெடுந் தருவி னீழற்
நிகழ் குடங்கைப் புனலி லாட்டிடிற் பாற்றொகும்
நெடுந் திரைக்கட ளளிப்பான்
கடிகமழ் நறும்புவி னிதழொன் றிடிற்பெருங்
கனககோ கனக மீவான்
கருத்திடை யிருத்திடி லிருத்துவன் செம்பொனின்
கனவண் டகத்தி னுச்சி
முடியினடி மலர்வணங் கில்லிந்தி ராதிபர்கண்
முடிதொழு மிருக்கை யீவான்
முன்னவர்க் கும்மவன் முன்னவ னுன்குறையு
முடியா திரான் கருணையா
னடியவர்க் கெளியவன் குமரனா யகனுட
னம்புலி யாட வாவே
அலையெறி தரங்கைவரு வீரவே லவனுட
னம்புலி யாட வாவே.
64✓
முருக்கிதழ்க் கவுரியைக் கனியிடக் கண்ணினீ
முன்னிளம் பிள்ளை யிவனோ
முதிர்வலக் கண்ணிடக் கண்ணுக்கு மேலான
முழுவிழியில் வந்த வீரன்
இருட்பி ழம்பள்ளி யுண்டிடுதி சின்னாளில்வவ்
விருட் கடலமிழ்ந்தி நிற்பான்
வெருக்கொள வழுத்திடும் பசியா லிரக்குமருள்
விண்ணவர்க் கமுதளித்து
மெய்குறைந் திடுதிநீ யிவனருட் கடலமுதின்
வெள்ளம்வற் றாதளிப்பான்
எழுமல மிருட்டுமல வண்டமூலத் திருளு
மிரியவோ கக்கு மிவன்வே
லருட்டுறையி லுன்னையுமோர் பொருளா யழைத்தன
னம்புலி யாட வாவே
அலையெறி தரங்கைவரு வீரவே லவனுட
னம்புலி யாட வாவே.
65✓
பாகசா தனனிவ னூழியஞ் செய்யுமொரு
பையல்செந் தாமரைக் கட்
பங்கயாசனன் கேள்வர் பெண்கொடுக்குங்குடிசொல்
படர்சடைக் காட்டு வானோன்
ஓகைகூர் பக்குவப் பட்ட மாணாக்கன்மா
லுந்தி வந்தா னிவன்கை
யுறுக்குமோர் குட்டுண்ட வோசை யண்டத்தினின்
றுறவறத் திறந்த தன்றி
ஏகநாயகனிவன் மேலுமோர் கடவுளர்க
ளில்லை யென்பது முணர்ந்து
மெய்தாதிருத்தி யோர்மதியிலாய் புகலிட
மிவனலா தில்லை கண்டா
யாகுவர் கண்ணிளங் கோவள்ளி னாதனுட
னம்புலி யாடவா வே
அலையெறி தரங்கைவரு வீரவே லவனுட
னம்புலி யாட வாவே.
66✓
குருகுகிரி தவிடுபட நேககுல கிரிகள்
……… சக்ரகிரியும்
குதுகுதுப் பக்கடல்க ளேழுங் குடித்துப்
புறக்கட லையுங்குடித்துப்
பெருகுசிவ கங்கைப் பெருக்குச் சுவற்றியப்
பிரதியண்ட பகி ரண்டமும்
பிட்டுவட். டக்கமல வட்டணைக் கடவுளும்
பேரொளிச் சக்கரதரனும்
வெருவக் கொடுந்துரை நிர்த்தூளி கண்டவேல்
வீராதி வீர னிவனே
விருப்புற் றழைத்தான் மறுக்கிலுன் காரிய
மெத்தவும் மோசம் வருமா
லருகுறக் கிட்டவந் தறுமுகக் குழவியோ
டம்புலி யாட வாவே
அலையெறி தரங்கைவரு வீரவே லவனுடன்
அம்புலி யாட வாவே.
67✓
பூவிரி மடற்செழுந் தாமரைக் கடவுடன்
பொன்முடி குலுங்க வெற்றிப்
புடைத் தவனிதேவனென் ற்றிநீ கடவுட்
புலோமிசை யுயிர்க்கு நாதன்
பாவிரி கலாபப் பசுந்தோகை யென்னப்
பரித் தனன்னழற் கடவுளும்
படர்சிறைக் குக்குடக் கொடியா யுடுக்கணம்
பரிவிற் கொறித்த தறிவை
தாவிவெண் குண்டலப் பூச்சியென் றுன்னையுந்
தவிப்பக் கொறிக்கி லம்மா
தவிப்பவர்களே கடவுள் பிள்ளைமதி தன்னாற்
றரிக்கா தழைக்கில் வருவாய்
ஆவியென வெவ்வுயிர்க்குஞ் சூழ்ந்துநின் றோனுட
னம்புலி யாடவா வே
அலையெறி தரங்கைவரு வீரவே லவனுட
னம்புலி யாடவா வே.
68✓
பாடகச் சிற்றடிச் சேர்ந்திரு மணாளனும்
பங்கயப் போது மேவும்
பழமறைக் கிழவனும் நாற்கோட்டு வாரணப்
பாகனும் நிற்க மற்றை
நீடருட் கண்மலர்ந் தொண்ணிறக் கனிகொலென
நின்றுனை யழைத் தருளினா
நீபுரி தவங்கொலோ வுன்கூனி மிர்க்கவோ
நிமலனரு ளுணர்கிலே மால்
வேடகச்சிறு குடிற் பேரமர்க் கட்கரிய
மென்குழற் சிறுபிடியுடன்
வெம்முலைக் களியாளை விளையாட மகிழ்கூர்ந்து
விரிகதிர்க் கற்றை சுற்று
மாடகச் செங்குன்று பன்னிரண் டுள்ளவனோ
டம்புலி யாட வாவே
அலையெறி தரங்கைவரு வீரவே லவனுட
னம்புலி யாட வாவே.