முருகன் App
திருமலை முருகன் பிள்ளைத்தமிழ்
கவிராச பண்டாரத்தையா
அம்புலிப்பருவம்8 / 10
திருமலை முருகன் பிள்ளைத்தமிழ் · கவிராச பண்டாரத்தையா

அம்புலிப்பருவம்

61✓
கலைஏறி மேலேறி வந்திலகு வாய்இவன்
கலையேறி மேலேறினான்
காமனுக் கேகவிகை யாய்விரிந் தாய்இவன்
காமனுக் கேகவிகையான்
நிலையாத கோட்டைகொண் டோடிவரு வாய்இவன்
நிசிசரர்கள் கோட்டைகொண்டான்
நீடுகுவ ளைக்குரிமை யாகிவரு வாய்இவன்
நித்தமொரு குவளை புனைவான்
தொலையாத வேலையு டுருவிவிடு வாய்இவன்
சுடர்வேலை உருவிவிடுவான்
சொல்லில்இவ னுக்குவமை யாரும்இலை நீசிறிது
தொழில் உவமை பெற்றதாலே
அலைஆழி யில்துயில்கொள் அரியருமை மருகனுடன்
அம்புலீ ஆடவாவே
அருட்டிரு மலைக்குடுமி யிற்கொலு இருப்பவனொ
டம்புலீ ஆடவாவே.
62✓
கொஞ்சமதி யிற்பெரிய மதியுடையொர் காண்ஒணாக்
குற்றமொரு நாள்படைத்தாய்
கூற்றிவி னாலறிஞர் ஆவலொடு காணக்
குழந்தையில் உயர்ந்ததிவனே
நஞ்சுபொதி வாளெயிற் றரவுபொர வேயுடல்
நடுங்கிப் பயந்தொளிப்பாய்
நாகப் பெரும்பகை துணுக்குற மயிற்பரி
நடத்திய சமர்த்தன் இவனே
கஞ்சமல ராளிசுதன் இடுசாப மேகொண்டு
கலையிழந் தேதிரிந்தாய்
கமலனைக் குடுமிகள் பிடித்துப் புடைத்துக்
கடுஞ்சிறை புரிந்ததிவனே
அஞ்சுமுக நாதனருள் ஆறுமுக நாதனுடன்
அம்புலீ யாடவாவே
அருட்டிரு மலைக்குடுமி யிற்கொலு இருப்பவனொ
டம்புலீ யாடவாவே.
63✓
ஒழியாத மறுவெனுங் குட்டரோ கத்தினால்
உடல்கூனி வீங்கிவாடி
உற்பலத் திருமலைதொ ழாதவர்கள் போலவே
உலகிடை பிறந்திறந்து
பழியால் வரும்பகைப் பாம்புனை விழுங்கவும்
பதைபதைத் தேசுழன்றாய்
பரிவினொடு சந்நிதி புகுந்தவர் பெரும்பிணி
பறத்துவது நீயும் அறிவாய்
விழியால் இவன்சிறிது கருணைபுரி யக்கூனும்
வெப்புந் தவிர்ந்ததுன் தன்
மேன்மைக் குலஞ்சொல்லும் வெந்துயர் ஒழிந்திடுவை
வெய்யபகை யும்துடைப்பாய்
அழியா வரம்பெறுவை அருள்பெறுவை முருகனுடன்
அம்புலீ ஆடவாவே
அருட்டிரு மலைக்குடுமி யிற்கொலு இருப்பவனொ
டம்புலீ ஆடவாவே.
64✓
தமராகி ஆயிரத் தெட்டண்ட மேவிய
தைத்திய ரொடுஞ்சூரனுந்
தம்பிமார் மைந்தர்கள் மகிழ்ந்திட இரத்தச்
சமுத்திரம் எழுந்துபொங்க
எமராயன் ஆகுமொரு நுளையன்வலை வீசியுயிர்
என்னுமீ னைப்பிடிக்க
ஈராறு செங்கதிர்கள் வனசமல ராகவே
எழுமுகில்சை வலமாகவும்
உமராக வேசூழ் உடுத்திர ளெலாமதில்
உதித்தபுற் புதமாகநீ
ஒருதோணி யாய்மிதந் தோடிக்க ளேபரத்
தோங்கல்தொறு மேங்கிமோத
அமராடு திண்டிறற் சேவகப் பெருமான்முன்
அம்புலீ ஆடவாவே
அருட்டிரு மலைக்குடுமி யிற்கொலு இருப்பவனொ
டம்புலீ ஆடவாவே.
65✓
புத்திதனில் இரவிநீ அட்டமம் செவ்வாய்
பொருந்திய களத்திரத்திற்
புதன்நாலின் முன்றினிற் பொன்வெள்ளி ஆறினிற்
போற்றுசனி சென்மமாகத்
துத்திதிக ழும்படப் பாம்புகள்ஓர் ஒன்பதில்
தோன்றிப் பகைத்தபகையுந்
துட்டமிரு கங்களும் பேயுநோ யுங்கலித்
துன்பமும் வெம்புபடையுங்
கத்துபுன லுங்கனலு மவமிருத் துங்கொலைக்
காலனுஞ் செய்வினைகளுங்
கண்டதுண் டப்படக் கூவுசே வற்கொடிக்
கட்டியழி யாதசெல்வம்
அத்தனையு மேகொடுத் தன்பருடன் வாழ்பவனொ
டம்புலீ ஆடவாவே
அருட்டிரு மலைக்குடுமி யிற்கொலு இருப்பவனொ
டம்புலீ ஆடவாவே.
66✓
மிடலொடு திசைகமக் கின்றவே ழங்கவள
வேழஞ் சுமப்பதாக
மேதினியை முதலான புவனங்கள் தாங்குமக
மேருவே தூணதாகக்
கடலேழை யுங்குடித் தெழுமேகம் ஏழுங்
கடம்பொழி கவுட்களாகக்
காஞ்சனச் சுவர்சுற்றும் அண்டமொரு கூடமாய்க்
கந்தமலை யிற்பிறந்து
திடமான தடைமீறி யேபூத வெளிஎலாந்
தெருவீதி யாய்நடந்து
திங்களுன் தலைகளைக் கொம்புக்கு மாறெனச்
செங்கைநீட் டிப்பிடிக்கும்
அடல்ஆனை ஏறுங்கு மாரரா வுத்தனுடன்
அம்புலீ ஆடவாவே
அருட்டிரு மலைக்குடுமி யிற்கொலு இருப்பவனொ
டம்புலீ ஆடவாவே.
67✓
என்றைத் தடுத்துவெளி எல்லா மறைந்திட
எழுந்தசூர் மாவொர் அயிலா
லேறுபட் டிருதுண்ட மாகவொரு துண்டம்இவன்
ஏறுமயி லாகவொன்று
வென்றித் துணைச்சிற கடித்தண்ட கூடமும்
வெடித்திடக் கூவிவானின்
மீனைநெற் பொரியெனக் கொத்தித்
கொறித்துனையும்
வெண்சோறி தென்றுதாக்கிக்
குன்றக் குறத்தியெம் பெருமாட்டி யைப்பெறுங்
குலமான் இருத்தல்கண்டுங்
கோமளக் குகன்இவன் விருப்பொடு தரித்திடுங்
குவளைச் சகாயன்என்றும்
அன்றைக்கு நின்னுயிர் கொடுத்தசர ணாயுதனொ
டம்புலீ ஆடவாவே
அருட்டிரு மலைக்குடுமி யிற்கொலு இருப்பவனொ
டம்புலீ ஆடவாவே.
68✓
பணிலமுத் தும்பவள முஞ்சாலி னூடெழும்
பசும்பொன்னு நீலமணியும்
பன்னிறக் கதிர்விரித் தந்தநிலத் தரசன்விற்
பான்மைகாட் டக்குரண்டம்
பிணிமுகத் துருவடைந் தருகுறுஞ் சேவலைப்
பேடுதே டப்பெடையினைப்
பேராத சேவற் பெருங்குருகு தேடவது
பேதைக் கடைச்சியர்கள்கண்
மணிநிழற் கதுவுறப் பார்த்துமகி ழக்கண்கள்
வாய்ந்தசிறை யும்படைக்க
மள்ளரது கண்டுகண் டேமுருகன் ஏறுமயில்
வாகனமிதென்று போற்றும்
அணிவயற் பண்பைப் பதிக்குமர நாயகனொ
டம்புலீ ஆடவாவே
யருட்டிரு மலைக்குடுமி யிற்கொலு இருப்பவனொ
டம்புலீ ஆடவாவே.
69✓
வன்புடைய கண்டக ரெனுங்கொடிய நிசிசரர்கள்
வாழ்பதிம கேந்திரத்தின்
மாமதி ளிடித்தவுண ரைக்கொன்று கொன்றுதிரை
வாரியிற் பிணநிரப்பித்
தென்புலத் தெப்புரமும் வீரசொர்க் கத்தினுஞ்
செறுநருயி ரேநிரப்பித்
தேவலோ கத்தினிற் கற்பகச் சோலையில்
தெய்வச் செழும்பிடியுடன்
என்புநெக் குருகவுட லம்புளகம் வரமனமும்
இளகியிள கித்தெணீராய்
இருவிழியி னுந்தரள மாலைவர மால்கொண்
டிசைந்துதொழும் ஏழை அடியார்
அன்பெனுஞ் சேவகம் அடைந்தமத யானையுடன்
அம்புலீ ஆடவாவே
அருட்டிரு மலைக்குடுமி யிற்கொலு இருப்பவனொ
டம்புலீ ஆடவாவே.
70✓
திருமலைக் கயிலையில் பரமனுமை நடுவினில்
சேர்ந்திவன் இருக்குநாளில்
திருமால் அயன்சதக் கிருதுமுதல் அமரர்சூர்
செய்குறை இரந்துரைப்பப்
பொருபடைத் தலைவருந் தம்பிமா ருந்திறற்
பூதப் பெரும்படைகளும்
புடைவரத் திண்தேர் யாபுரி
புகுந்தொரு பொருப்பினோடும்
ஒருதனித் தாரகனை வென்றவலி கண்டுகண்
டுரிமைபெறு தேவகிரிமேல்
உம்பரிறை யுங்கமல னுந்தேவர் யாவரும்
உவப்புடன் அருச்சனைசெயும்
அருமணிப் பரிபுரத் திருபதத் தொருவனுடன்
அம்புலீ ஆடவாவே
அருட்டிரு மலைக்குடுமி யிற்கொலு இருப்பவனொ
டம்புலீ ஆடவாவே.