திருமலை முருகன் பிள்ளைத்தமிழ்
கவிராச பண்டாரத்தையா
சிறுபறைப்பருவம்10 / 10
திருமலை முருகன் பிள்ளைத்தமிழ் · கவிராச பண்டாரத்தையா
சிறுபறைப்பருவம்
81✓
சங்குற்ற செங்கைதொட் டழல்கரிய தாகவே
சயமா முடித்து மேவுந்
தவிராத கற்புடைய தையலர்கள் பூண்முலைச்
சையோக மேத ணந்து
பொங்குற்ற பள்ளியுட் சப்ரமஞ் சத்தினிற்
பூவணையு மேது றந்து
பொதுமாதர் சேரியில் இராப்பகல் நடந்தவர்கள்
போகம்வேட் டிடும்வி டர்கள்போற்
கொங்குற்ற சோலையும் புனினமும் இகழ்ந்துபைங்
கூழ்ச்செந் நெலைத்து கைத்துக்
கோடுகொண் டிக்குக் குலங்களையு முறித்திளங்
கொடிவள்ளை யைக்க றித்துச்
செங்கட் கரும்பகடு சேறாடும் வளநாட
சிறுபறை முழக்கி யருளே
செழுமறை முழக்கமுறு திருமலை யருட்குமர
சிறுபறை முழக்கி யருளே.
82✓
வள்ளிமலை தனில்முதிய சிவமுனிவன் முன்னர்ஒரு
மான்வந் துலாவ மானை
மாமுனிவன் நயனத்தி னாற்புணர்ந் திடஅதன்
வயிற்றிடைக் கருப்ப மாகித்
துள்ளிஅயர் வோடுவயி ற்றுளைந் தீன்றெயினர்
தொட்டகுழி இட்ட கலவுந்
துங்கச் சிலைக்குறவர் மரகதச் சிலையெனத்
தோகையைக் கண்டெடுத்து
விள்ளுமுவ கைக்கடல் படிந்தவர்கள் சிற்றூரில்
விரைவினொடு கொண்டு வந்து
வீறுடன் வளர்த்துத் தினைப்புனத் தினில்வைத்த
வேட்டுவ மடந்தை கையால்
தெள்ளுதினை மாவுக் கவாவுற்ற மோகனே
சிறுபறை முழக்கியருளே
செழுமறை முழக்கமுறு திருமலை அருட்குமர
சிறுபறை முழக்கியருளே.
83✓
பெண்கள்சங் கத்தினோ டிலவைநகர் விட்டுப்
பெயர்ந்துதிரு மலையின் மேவிப்
பிரசவேர் கல்விப் பிடுங்கிவிளை யாடிஒரு
பேதைமடி யில்து யிலவுந்
தண்புனற் சுனையுண்டு பூவுண்டு நாளும்வட
சாரலிடை வைகு மெனவே
சண்முகப் பிள்ளைநீ யருள்புனைந் திடவுனைத்
தயவினொடு கண்டு போற்றிப்
பண்புபெற் றிடுசுப்ர மணியனொடு விக்கிரம
பாண்டியன் செங்கை யாலும்
பங்கயக் கண்ணனருள் குஞ்சரி குறத்திஇரு
பாவையர்கள் பார்வை யாலுந்
திண்புயத் தைந்துகட் குவளைசூ டுங்குளக
சிறுபறை முழக்கியருளே
செழுமறை முழக்கமுறு திருமலை யருட்குமர
சிறுபறை முழக்கியருளே.
84✓
வனமுழங் குங்கவிகள் தாவவளர் தெங்கின்மிசை
மலிமுப் புடைக்கனிகளும்
மாங்கனி பலாக்கனிகள் சம்பீர மென்கனிகள்
மாறாமல் வீழோசையும்
இனமுழங் கும்பழைய சேவர்கள் சிவாகமமும்
இன்னிசைத் தேவாரமும்
எங்கணும் பரவச முடன்பரவும் அடியவர்
இயம்பும்ஆ கரசத்தமுங்
கனமுழங் குங்கன முழக்கமும் வடவருவி
கல்லென ஒலிக்குமொலியுங்
கரகமுனி முதலினோர் வேதபா ராயணக்
கம்பலையும் உம்பர்முரசுந்
தினமுழங் குஞ்சித்திர சபைநடனன் அருள்புதல்வ
சிறுபறை முழக்கியருளே
செழுமறை முழக்கமுறு திருமலை அருட்குமர
சிறுபறை முழக்கியருளே.
85✓
தண்டைகள் சிலம்புகள் சதங்கைகள் பதங்களில்
சரிகலந் திசைமுழங்கத்
தாமரைப் பன்னிரு தடக்கையில் வியப்பொடு
தரித்தபொன் வளைமுழங்கத்
தொண்டர்கள் விருப்பொடு தெருட்பெறு திருப்புகழ்
துதித்திடு துதிமுழங்கச்
சுந்தரத் திருவரையில் அரைவடக் கிண்கிணிச்
சோதிமணி தான்முழங்க
அண்டருல கம்புவி அனந்தனுல கெவ்வுலகும்
அணிமணப் பறைமுழங்க
அறுசமயம் அல்லாத பரசமய வாதிகள்
அகத்தொடு மிகுந்த அவுணர்
திண்திறன் மனத்திற் பெரும்பறை முழங்கநீ
சிறுபறை முழக்கி யருளே
செழுமறை முழக்கமுறு திருமலை அருட்குமர
சிறுபறை முழக்கி யருளே.
86✓
பொருவரிய கயிலைமலை அண்ணல்கைச் சூலமும்
போராழி யுங்குலிசமும்
பொங்குந் திருப்புகழ்ச் சாணைதீட்டிக்கதிர்
பொலிந்திலகு கூர்மைபெறவே
ஒருபெரிய வீரவேல் சூரனூர முங்கிரியும்
ஊடுருவி ஓடிமீள
ஒல்லையில் எறிந்துபகை வென்றுசே வற்கொடி
உயர்த்தசே வகமிருந்துந்
தருநிழலில் அரசுபுரி அரசனருள் குஞ்சரி
தடங்கண்வேற் கஞ்சியுஞ்சித்
தையலவள் குங்குமச் சந்தனச் சேறுடன்
தகரமிரு மதமொழுகிய
திருமலைக ளென்னுஇரு மலையரண் அடைந்தவன்
சிறுபறை முழக்கியருளே
செழுமறை முழக்கமுறு திருமலை அருட்குமர
சிறுபறை முழக்கியருளே.
87✓
கத்துபுனல் அருவிசொரி பொதியமலை யில்திகழ்
கடத்தினில் இருந்தெழுகையாற்
கடலகு புகுதலான் மலையையு முறித்துக்
கயற்புலம் அழுத்திவிடலால்
அத்தர்திரி கூடத்தர் திருமவுலி தீண்டிநின்
றிபிடேக மாட்டுகையினால்
அன்புட னெடுத்தவர்க் கருள்புரிந் திடுகையால்
அழியாத சாபமிடலால்
பத்திமிகும் உத்தமத் தவமுனிவர் பாலிகல்
படைத்தகரை மீறிவரலால்
பாரமா கிச்சிறிய நாமமுற லால்கலை
படித்தகுறு முனியைமானுஞ்
சித்திர நதித்தலைவ முத்தமிழ் முதற்புலவ
சிறுபறை முழக்கியருளே
செழுமறை முழக்கமுறு திருமலை அருட்குமர
சிறுபறை முழக்கியருளே.
88✓
உறுநாக மும்கமட மும்கனக மேருவுடன்
ஓரேழு திரைவாரியும்
உட்புறப் போராழி யும்சக்ர வாளகிரி
யும்திசை சுமந்தகளிறும்
இறுநாளில் அவையவை படும்பாடு படஅமரர்
ஏங்கிக் குதித்தாடவே
இப்படி மிகுத்தபகி ரண்டமு நடுங்கஅசு
ரேசன்மன முஞ்சலிப்ப
நறுநான வார்குழற் பதுமைமுதல் அவுணர்குல
நங்கையர்கள் மங்கலப்பொன்
நாணற் றுதிர்ந்துவிழ வேணுப் பெருஞ்சிலையில்
நாண்வளை தேற்றிவாங்கிச்
சிறுநாண் முழக்கிநிசி சரர்தள முழக்குநீ
சிறுபறை முழக்கியருளே
செழுமறை முழக்கமுறு திருமலை அருட்குமர
சிறுபறை முழக்கியருளே.
89✓
தையலர்கள் ஊடியெழும் ஊடறீர்ந் திடஅவர்கள்
தாளையிளை ஞோர்கள் வருடிச்
சந்திரதில கங்குழைத் திந்துநுத லுக்கழகு
தருதிலக மேபுனைந்து
தொய்யில்எழு திக்கொங்கை மேலுத்த ரீபமுஞ்
சுடர்மணிக் கலனும்வீக்கிச்
சுந்தரப் பொன்மேனி யணிபணி திருத்திவேல்
துணைக்கஞ் சனங்கள் தீட்டி
மையொழுகு குழன்முடித் தவர்முடித் திடவுமதில்
வண்டுமொய்த் திடுதல்கண்டு
வஞ்சியிடை முறியுமென அம்மலர் கழித்தும்பர்
வனமலர்கள் கொய்து சூட்டுஞ்
செய்யமணி மேடைதிகழ் பண்பைநக ருக்கதிப
சிறுபறை முழக்கியருளே
செழுமறை முழக்கமுறு திருமலை யருட்குமர
சிறுபறை முழக்கியருளே.
✓
மருவாத பாலையிற் பொய்யா மொழிக்குமுன்
வந்தொரு செழுங்கவிதையு
மாறான சூரன்முன் தம்பிநீ தூதுபோய்
வாவென் றியம்புமொழியுங்
குருவாக வந்தருண கிரியைத் திருப்புகழ்
கூறென முதற்சந்தமுங்
கும்பமுனி இருசெவி மனத்தொடு சரீரமுங்
குளிரமுத் தமிழின் இயல்பும்
அருவாய் மிகுந்தபல வுருவாய் நிறைந்தருளும்
அப்பனுக் கொப்பிலாத
ஆனந்த மதுரரசம் ஒழுகுதே வாரமுடன்
அழியாத ஒருவாய்மையுந்
திருவாய் மலர்ந்துரைசெய் குமரகுரு நாதனே
சிறுபறை முழக்கியருளே
செழுமறை முழக்கமுறு திருமலை யருட்குமர
சிறுபறை முழக்கியருளே.
91✓
இசைக்குழலும் வீணையுங் கஞ்சமும் பல்லியமும்
எல்லாம் பயின்றுபாடி
ஏறுதக ரானைபரி தேருகைத் துங்கடல்கள்
ஏழையுந் துளியாக்கியே
வசைத்தொழி லரக்கர்கள் துணுக்கென மலைத்தமரர்
வஞ்சகமி தென்றயிர்ப்ப
வானவர்கள் தானவர்கள் செய்கையென் றேமதி
மருண்டுளம் வெருண்டுசோர
மிசைப்படு முடுக்கதிர் களைத்தலை மயக்கிமக
மேருவை முறித்துழக்கி
விண்டுவிண் டண்டங் குலுங்கக் குலுங்கநவ
வீரர்கள் இலக்கர்சூழத்
திசைக்கிரி யனைத்தையும் உருட்டிவிளை யாடுநீ
சிறுதே ருருட்டியருளே
சிவஞான முத்திதரு திருமா மலைக்கடவுள்
சிறுதே ருருட்டியருளே.
92✓
புவியுலகு துயரகல அசுமேத யாகம்
புரிந்துபல வேள்வி ஆற்றிப்
புண்ணியமும் வீரமுஞ் செல்வமுங் கல்வியும்
பொன்றாத ஆடவர்களால்
அவியுணவை அனுதினம் விழைந்தும்பர் வாய்வயி
றனைத்துந் தெவிட்டஒட்டி
ஆனந்த மதுபெருகி மனதுருகி விழிசொருகி
அசையாமன் மேடைதோறுங்
குவிஉபய முலையின்மிசை வீணைசேர்ந் துச்சுருதி
கூட்டிஎழு கரமுமுட்டிக்
கோதையர் குயிற்குதலை மழலைமொழி அமுதினொடு
கூடவா சிக்கும் இசையாற்
செவியுணவு மன்னவற் குதவுபண் பைக்கதிப
சிறுதே ருருட்டியருளே
சிவஞான முத்திதரு திருமா மலைக்கடவுள்
சிறுதே ருருட்டியருளே.
93✓
உகமும் பரித்தொகை கரித்தொகைபல் இரதமுடன்
ஒளிரும்வாள் அவுணர்மாள
உன்னுடைய போர்ஆழி சென்றுறுப் பச்சூரன்
ஒருவனே நின்றுநெஞ்சை
அகமும் பெருங்கவலை கொண்டதி சயித்துவிழி
அழலுகுத் தெயிறதுக்கி
அப்படி அவன்படையும் இப்படி முடிப்பனென
அன்னவன் முன்னியேவப்
புகழ்கொண்ட திறல்வீர வாகுவுடன் நவவீரர்
பூதர்கள் இலக்கர்தம்மைப்
புந்தியை மயக்கியொரு கொடியில்வா ரிக்கொண்டு
போயண்ட கோளகையின்மேல்
திகழிந்திர ஞாலப் பெருந்தேர் பறித்தநீ
சிறுதேர் உருட்டியருளே
சிவஞான முத்திதரு திருமா மலைக்கடவுள்
சிறுதேர் உருட்டியருளே.
94✓
உருத்தார வாரித் திடுங்கொடிய நிசிசரர்
உமாபதி வலக்கண்எதிரும்
ஒருமருக னடவுகளி றொத்திருந் தோடவே
உம்பர்கோ மான்புரக்குந்
தருத்தாம நந்தனவ னஞ்செழித் ததிலுறு
சராசரம் எலாந்தழைப்பச்
சாபநா னும்பூணு மாபரண முந்திகழ்
சரக்கறை மிகத்தழைப்ப
மருத்தா மரைத்தவி சுடைப்பாக னுஞ்சிலை
வளைத்தெய்தி டாதகணையும்
வாசியும் பேசிய திருப்புகழ் விருப்புடன்
வழுத்தித் துதிக்கவந்த
திருத்தாதை ஏறும் பெருந்தேரும் வாழ்கவே
சிறுதேர் உருட்டியருளே
சிவஞான முத்திதரு திருமா மலைக்கடவுள்
சிறுதேர் உருட்டியருளே.
95✓
கனந்திகழ் கிரிக்குலம் இரண்டையும் எறிந்துவெங்
காஞ்சனத் தளிர்மாவையும்
கண்டதுண் டப்பட முறித்திரு வகைப்புலவர்
காரகந் தூள்படுத்தி
இனந்தனை முடிந்தவன் இவன்றனையும் வெல்வதற்
கிதுசமயம் என்றுமலைகள்
எல்லாந் திரண்டுபய மாகிமா வடுவுடன்
இணங்கிஅம ராடுவனபோல்
வனந்தனை விருப்பொடு புரந்தருள் குறத்திமான்
மதம்ஒழுகு வனமுலைகளும்
வள்ளைச் செழுங்குழையில் வாசக் கருங்குழலில்
வாவிவிளை யாடுவிழியுந்
தினந்தின முரத்தொடு பொரக்குழையும் விரகனே
சிறுதேர் உருட்டியருளே
சிவஞான முத்திதரு திருமா மலைக்கடவுள்
சிறுதேர் உருட்டியருளே.
96✓
பெருககரு ணைக்கடல் உவட்டெறிந் தருளொழுகு
பெரியபன் னிருவிழிகளும்
பேரழகு பெறுநுதல் கருந்திலத முந்தெருட்
பிரணவம் சொலும்வாய்களும்
இருவனிதை யர்க்குமயல் செயுமந்த காசமுடன்
இலகும்ஈ ராறுகுழையும்
ஏரிலகு நாசிகள் கபோலங்கள் அத்தனையும
எழில்சிறந் தொளிததும்பி
முருகுகமழ் சண்முகத் தாமரைக ளேபின்னு
முன்னும்விக சித்திடுதலால்
முத்தமிழ்ப் புலவர்க்கும் அடியர்க்கும் அமரர்க்கு
முனிவரொடு சூரனுக்குந்
திருமுதுகு தாராத தண்ணளிச் சேவகன்
சிறுதேர் உருட்டியருளே
சிவஞான முத்திதரு திருமா மலைக்கடவுள்
சிறுதேர் உருட்டியருளே.
97✓
அரிக்கும்அய னுக்கும்வெரு வாதசூர் வென்றதுகை
அயிலோஅன் னோர்கள்படையோ
அப்பனுக் கும்பொருள் நிரப்பிய குருக்களென்
றாரணத் தொகைபுகலுமே
பரிக்குமயி லுக்குமொரு சேவற் கொடிக்கும்இணை
பகரஒரு பொருளும்இல்லை
பதினா யிரங்கோடி மன்மதன் அழகுநின்
பாததூ ளிக்குநிகரோ
புரிக்குளுயர் பொன்னுலகு நின்னுடைய பண்பா
புரிக்குநிகர் ஒப்பாகுமோ
பூதரம் எலாமிருந் துஞ்சனையி லோர்குவளை
பூத்திரு மலைக்குமோ
தெரிக்கில்உலக கத்துவமை இல்லாத தெய்வநீ
சிறுதேர் உருட்டியருளே
சிவஞான முத்திதரு திருமா மலைக்கடவுள்
சிறுதேர் உருட்டியருளே.
98✓
பாரோடு பதினாலு லோகத்தில் உள்ளவெம்
பழியோடி பாவம்கெடப்
பஞ்சம்கு டக்கொடுமை யஞ்சிஓ டத்தமிழ்ப்
பாவலர்கள் வறுமை ஓடச்
சூர்ஓட அவுணர்கள் பயந்தோட வானவர்கள்
துன்பங் கலங்கியோடச்
சொல்லோடு பழகாத புலவரோ டப்பழைய
தொண்டர்மன மாயைஓட
வாரோடு கொங்கைமட வாரோடு மிளைஞர்தம்
மனையோடு மேவிவாழ
வந்துதெரி சித்துளோர் பிணிஓட அங்கவர்
மனத்துயர் அனைத்தும்ஓடத்
தேரோடி வரும்வீதி திகழ்பண்பை வாழவே
சிறுதேர் உருட்டியருளே
சிவஞான முத்திதரு திருமா மலைக்கடவுள்
சிறுதேர் உருட்டியருளே.
99✓
பொன்மெல்லி யும்கருணை பொழிவதன மும்திருப்
புருவமும் நெற்றியழகும்
புண்டரிக நயனஅரு ளும்குழைக ளும்தமிழ்ப்
புத்தமுத மொய்த்தவாயும்
வின்மலிந் திலகுகூ ரியதுண்ட மும்கவின்
விளங்கியக போலங்களும்
வெண்தரள மாலையணி கண்டமுந் திண்புயமும்
வேலுமுள ரிக்கைகளும்
பன்மணியு நூலுமணி மார்பமுந் தோயாத
பட்டுடையும் மிக்கதண்டைப்
பாதமுந் தோகைமயி லும்சிந்தை யுள்ளே
பதித்துத் துடிக்கும்அடியார்
சென்மஇருள் முழுதும்விடி யக்கூவு சேவலாய்
சிறுதேர் உருட்டியருளே
சிவஞான முத்திதரு திருமா மலைக்கடவுள்
சிறுதேர் உருட்டியருளே
100✓
மங்கல மடப்பிடி குறக்கொடி இடத்தினும்
வலத்தினும் இருந்துவாழ்க
மாமயிலும் வாழ்கஅதன் மேலிலகு நூபுரம்
வனைந்தசே வடியும்வாழ்க
பொங்கொளி தயங்குதிரு ஆபரண முந்நூல்
புனைந்திடுபொன் மார்பும்வாழ்க
போர்வேலும் ஈராறு செங்கையும் பன்னிரு
புயங்கள்சுந் தரமும் வாழ்க
தங்குகரு ணைக்கண்கள் ஆறிரண் டுந்திருச்
சண்முகத் தருளும்வாழ்க
தாழ்குழைமுந் நான்கினொடு பவளவா யாறுடன்
றடமகுட மினிதுவாழ்க.
திங்கண்மும் மாரிபொழி யச்சேவல் வாழ்கநீ
சிறுதேர் உருட்டியருளே
சிவஞான முத்திதரு திருமா மலைக்கடவுள்
சிறுதேர் உருட்டியருளே.