திருமலை முருகன் பிள்ளைத்தமிழ்
கவிராச பண்டாரத்தையா
முத்தப்பருவம்6 / 10
திருமலை முருகன் பிள்ளைத்தமிழ் · கவிராச பண்டாரத்தையா
முத்தப்பருவம்
41✓
நித்தங் குவளைச் சுனைஆடி
நெடுஞ்சோ லையிற்பூக் கொய்துகல்லும்
நெகிழச் சிலம்பின் எதிர்கூவி
நெடிய வேங்கை நிழல்மேவி
அத்தஞ் சிவக்க அம்மனைபந்
தாடிக் கழங்கும் எடுத்தாடி
அரத்த மணியின் போலுரசல்
ஆடி ஆடி உடலிளைத்துச்
சித்த மதனுக் கிளையாத
செவ்வாய்க் கருங்கண் எயிற்றியர்கள்
சிற்றில் விளைத்து விளையாடத்
திரிகண் மதமால் கரிக்கோடு
முத்தங் கொடுக்குங் குறிஞ்சிநில
முதல்வா முத்தம் தருகவே
முத்துக் குமரா திருமலையின்
முருகா முத்தம் தருகவே.
42✓
அழிந்து புவனம் ஒழிந்திடினும்
அழியாத் தோணி புரத்தின்மழ
வர்கள் குலத்தி னுதித்ததொரு
மடந்தை தோன்றி அளித்தவள்ளச்
செழுந்தண் முலைப்பால் குடித்துமுத்தின்
சிவிகை யேறி மதுரையில் போய்ச்
செழியன் பிணியுஞ் சமண்பகையுந்
தேவி துயருந் தீர்த்தருளி
வழிந்து நறுந்தேன் உகுவனபோல்
மதுரங் கனிந்து கடைதுடிக்க
வடித்துத் தெளிந்த செந்தமிழ்த்தே
வாரப் பாடல் சிவன்கேட்க
மொழிந்து சிவந்த கனிவாய்ச்சண்
முகனே முத்தம் தருகவே
முத்துக் குமரா திருமலையின்
முருகா முத்தம் தருகவே.
43✓
தலைமுத் தொழிலும் இயற்றும்அயன்
தனமால் ஈசன் எனுமூவர்
தால மிசைப்பொன் உரத்தின்மிசைத்
தலையின் மிசையின் தயவாகக்
கலைமுத் தமிழ்வா ணியைத்திருவைக்
கங்கை தனையுந் தரித்ததல்லால்
காத லுடன்வேட் டகத்தில் இன்னங்
கருத்து நாணா திருப்பதற்கே
சிலைமுத் துதிரப் பூவாளி
செலுத்து மதனும் இரதியுமே
செவ்வாய் முத்தம் இடும்போது
சேர்ந்து நெருங்கும் அவர்முடிநேர்
முலைமுத் தழுந்த வள்ளிபுணர்
மோகா முத்தம் தருகவே
முத்துக் குமரா திருமலையின்
முருகா முத்தம் தருகவே.
44✓
தகட்டிற் சிறந்த இதழ்க்கமலத்
தடத்தில் குளத்தில் தண்பணையில்
தழங்குந் துழனிப் பெருமதகில்
சயிலப் புதுநீர் தத்துதொறும்
பகட்டு முரட்டுப் பருவாளை
பணைத்துப் பாய்ந்து செழும்பலவின்
பழத்தைத் தகர்த்து மாங்கனியின்
படுவைச்சிதறிப் பசிய முகில்
அகட்டைக் கிழிக்க முகில் வெருவி
அழகஞ் சொரிந்து மடவார்கள்
அளகத் தழகுக் குடைந்தன போல்
அங்கம் வெளிறி அணிமாட
முகட்டிற் கிடக்கும் பண்பைநகர்
முதல்வா முத்தந் தருகவே
முத்துக் குமரா திருமலையின்
முருகா முத்தம் தருகவே.
45✓
தொழுது புலவர் புகழ்ந்ததண்டைத்
துணைத்தா மரையி லிருமுத்தந்
தூய கணைக்கான் முழந்தாள்செந்
துடையி லிடையி லேழுமுத்தம்
எழுத அரிய தொந்தியுந்தி
இலங்கு மார்பின் மூன்றுமுத்த
மேய்ந்த மரங்கந் தரம்புயத்தில்
இருபத் தைந்து திருமுத்தம்
அழுது சிரித்து மழலைசொல்லு
மருமைத் துகிரி லாறுமுத்தம்
அழகு கதுப்புக் கண்குடுமி
அனைத்தும் அந்தப் படியுடல
முழுதும் உமையாள் முத்தம்இடு
முத்தே முத்தம் தருகவே
முத்துக் குமரா திருமலையின்
முருகா முத்தம் தருகவே.
46✓
வேலைப் புனலைக் கலக்கினட்டு
வெற்பைப் பிடுங்கிப் பந்தாடி
மேருக் குடுமி திருகிஉம்பர்
வேந்து தனையுங் கொன்றெழுப்பித்
தூலத் துருவம் எடுத்தயனைத்
தொடரிட் டிரங்கிப் புரந்துசிவத்
துரகம் அனைத்தும் விளையாட்டால்
தொலைத்துத் துணைவரு டன்மேவிக்
கோலச் சடிலத் தரன்செவியின்
குலவண் டினங்கள் அருந்துதற்குக்
குழந்தை வயதில் பெருமதியால்
குமுதம் நெகிழ்த்துப் பிரணவத்தின்
மூலச் செழுந்தேன் உகுத்தருளும்
மூர்த்தி முத்தம் தருகவே
முத்துக் குமரா திருமலையின்
முருகா முத்தம் தருகவே.
47வேறு✓
திருந கர்ப்பண் பையில் இருக்குஞ்
செழியன் முத்தம் தருகவே
தெருள்கொ டுத்திங் கெனைஉ ருக்குஞ்
சிறுவன் முத்தம் தருகவே
கருதி மொய்க்குஞ் சமண் அழிக்குங்
களிறு முத்தம் தருகவே
களிறி னுக்கும் குறம கட்கும்
கணவன் முத்தந் தருகவே
பருவ ரற்கங் குலைஒழிக்கும்
பரிதி முத்தந் தருகவே
பரம னுக்கும் பொருளு ரைக்கும்
பவள முத்தந் தருகவே
தருப ரைக்கும் புனல்ம கட்குந்
தனையன் முத்தம் தருகவே
சதும றைக்குந் திரும லைக்குந்
தலைவன் முத்தம் தருகவே.
48✓
தொந்த மிட்டின் பங்கு திக்குந்
தொண்ட சித்தம் குளிரவே
சுந்த ரப்பொங் கங்கொ டுக்குந்
தொந்தி வட்டஞ் சரியவே
கெந்த மொய்க்குஞ் செம்ப தத்தின்
கிண்கி ணிப்பொன் குலவவே
கிஞ்சு கத்தின் சந்திரன் ஒக்கும்
கிம்பு ரிக்கொம் பொளிரவே
சிந்து ரத்தின் செஞ்சி வப்புந்
திண்செ விக்குந் திகழவே
செங்க னிக்கன் பும்க ளிப்பும்
சிந்தை முற்றும் பெருகவே
தந்தை சுற்றுந் தும்பி மெய்ச்சுந்
தம்பி முத்தம் தருகவே
சதும றைக்கும் திரும லைக்கும்
தலைவன் முத்தம் தருகவே.
49வேறு✓
சினவாள் அரிக்குருளை அனையாய் எனக்குனது
திருவாயின் முத்தமருளே
சிதவா ரணக்கடவுள் மருகா எனக்குனது
திருவாயின் முத்தமருளே
மனமாயை யைப்பொடிசெய் தருள்வாய் எனக்குனது
மணிவாயின் முத்தமருளே
வரதா குறச்சிறுமி விரகா வெனக்குனது
மணிவாயின் முத்தமருளே
சுனைவா சமைக்குவளை யணிவாய் எனக்குனது
துகிர்வாயின் முத்தமருளே
துடியாய் நடத்துதகர் உடையாய் எனக்குனது
துவர்வாயின் முத்தமருளே
கனகா சலக்குமரி குமரா எனக்குனது
கனிவாயின் முத்தமருளே
கனமேக மொய்த்ததிரு மலையாய் எனக்குனது
கனிவாயின் முத்தமருளே.
50✓
சலியாது பற்பபத நடையாய் வனத்தின்இடை
தனியே தனித்துலவியே
தடிமேல் நடக்குமொரு முதியோன் எனக்குறவர்
தருமான் இடத்தணுகியே
மலியா தரத்தினொடு மயல்தீர்வ தற்குமொரு
வழிநீ யுரைத்திடெனவே
வகைபேசி அத்திமுகன் வரவே நினைத்தவளை
மறைவாய் மணந்தகலவே
புலிபோன் மலைக்குறவர் பிறகே தொடுத்தும்எதிர்
பொரவே செயித்தவர்முனே
பொருமா மயிற்பரியின் அறுமா முகத்தினொடு
பொலிவாய் உதித்தருளியே
கலியாண இட்டமுறு முருகா எனக்குனது
கனிவாயின் முத்தமருளே
கனமேக மொய்த்ததிரு மலையாய் எனக்குனது
கனிவாயின் முத்தமருளே.