திருமலை முருகன் பிள்ளைத்தமிழ்
கவிராச பண்டாரத்தையா
சப்பாணிப்பருவம்5 / 10
திருமலை முருகன் பிள்ளைத்தமிழ் · கவிராச பண்டாரத்தையா
சப்பாணிப்பருவம்
31✓
அடித்துணை நினைப்பவர் மனத்திருள் விளக்க
அனற்பூ டுதித்தசுடரே
அகத்தினின் மிகக்கிருபை செனித்தருள் கொடுக்குமயில்
அப்பா இனிக்கும் அமுதே
தொடிக்கைகள் சிவக்கம ழலைக்குரல் பிறக்கநிறை
சொற்பாக முற்றபுலவோர்
துதித்திடு புயக்கிரி துளக்குற இதழ்க்குலவு
துப்புடு முத்தொளிரவே
மடப்பிடி நடைத்துடி இடைக்குட முலைக்குமரி
மட்டூறி நெய்த்தகுழலாள்
மதித்திரு முகத்தினள் குறச்சிறுமி மிக்கவடி
வப்பாவை மைக்கண் எனவே
தடத்தினில் முளைத்தகுவ ளைத்திரும லைக்குமர
சப்பாணி கொட்டியருளே
தடக்கிரி பொடிப்பட அயிற்படை விதிர்த்தகுக
சப்பாணி கொட்டியருளே.
32✓
வேய்தொறும் எயிற்றியர்கள் தொட்டில்சுட் டிச்சிகியின்
மென்பீலி யுள்விரித்து
வெம்முலை அருத்திவாய் முத்தாடி மதலைகளை
மெல்ல அதன் மேல்வளர்த்தி
நேயமுறு கொழுநருடன் மலைவிட் டிறங்கிவளர்
நீள்சோலை யில்புணர்ந்து
நினைவழிய உடைகுலைய மனதுபர வசம்உருகி
நித்திரை தெளிந்துவரும்முன்
தூயபூ ரணமதி தவழ்ந்தேறி ஏறியத்
தொட்டிலின் கிட்டஅணுகித்
துண்ணென விழித்துக் குறச்சிறார் மழலைமொழி
சொல்லிவிம் மிப்பொருமியே
தாய்முகம் எனக்கண்டு மகிழ்திரு மலைக்குமர
சப்பாணி கொட்டியருளே
தடக்கரி பொடிப்பட அயிற்படை விதிர்த்தகுக
சப்பாணி கொட்டியருளே.
33✓
இருநில வரம்பையொரு குடைதனில் அமைத்தர
சியைந்திடு பெருஞ்செல்வமும்
இயலாதி முத்தமிழ்ச் செஞ்சொல்முத லானபதி
னெட்டுவகை யில்பாடவும்
மருமலர் உகுத்துலவை குலவுதரு விற்சசிதன்
வனமுலை திளைத்த மார்பும்
வாலமா மதிசூடி பாலகோ சனம்உறா
மன்மதன் விரும்பும் அழகும்
அருமறை விரித்துரைசெய் சதுமுகமும் வெற்றிபுனை
ஐம்படை தரித்தகரமும்
அம்புயக் கண்களும் பரமபத முத்தியுடன்
அத்தனையும் அன்பர் பெறவே
தருபனிரு கட்கருணை புரிதிரு மலைக்குமர
சப்பாணி கொட்டியருளே
தடக்கிரி பொடிப்பட வயிற்படை விதிர்த்தகுக
சப்பாணி கொட்டியருளே.
34✓
வண்டுமொய்த் திலகுவெண் கேதகைப் பூவினை
மடப்பெடைக் குருகிதெனவே
வண்மைப் பெருஞ்சேவ லங்குகுரு கண்டிரு
மணிச்சிறகி னால்அணைத்துக்
கொண்டுதுயி லப்பேடு பார்த்துப் பதைத்துக்
கொதித்துக் கொதித்துவிம்மிக்
கோபமுற் றங்கங் குழைந்தேகி உம்பர்தங்
குளிர்பொதும் பரின்ஒதுங்க
அண்டருல கத்துள அரம்பையரும் ஆடவரும்
அதிசயம் இதென்றுகாண
அச்சேவல் பின்தொடர்ந் தோடியு டற்குறைகள்
அகலப் புணர்ந்து மீளுந்
தண்டலைப் பண்பைப் பதித்திரு மலைக்குமர
சப்பாணி கொட்டியருளே
தடக்கிரி பொடிப்பட வயிற்படை விதிர்த்தகுக
சப்பாணி கொட்டியருளே.
35✓
கந்தமிகு முண்டகக் கண்ணனும் கருணைஎண்
கண்ணனும் உடற்கண்ணனும்
கதிதனை வழங்குமுன் திருமுன்பு வந்துசெங்
கதிர்வேல் புகழ்ந்திரந்து
சுந்தரக் குங்குமக் கொங்கைஒரு மங்கைநஞ்
சுதையைவேட் டருளுகெனவே
சுடர்முடி துளக்கிவெகு மகிழ்வுடன் நகைத்தருள்
சுரந்துள மிசைந்துமறுநாள்
அந்தரத் தமரர் முகுந்தன்முதல் இம்பர்கள்
அருந்தவர் பெருந்திசையினோர்
அணிமணக் கோலத்தின் அதிசயம் கண்டுய்ய
அப்பரங் குன்றின்மிசையே
தந்தியை மணந்தகுவ ளைத்திரு மலைக்குமர
சப்பாணி கொட்டியருளே
தடக்கிரி பொடிப்பட வயிற்படை விதிர்த்தகுக
சப்பாணி கொட்டியருளே.
36வேறு✓
வம்பொன்றுஞ் சந்தொடு குரவு
மணத்த புயக்காரா
மஞ்சுந்துஞ் சுங்குல கிரியை
மடித்த வயிற்காரா
அம்பஞ்சுங் கண்பெறு குறமகள்
அத்தி நயக்காரா
அன்பும்பண் புங்கொடு தொழும்அடி
யர்க்கெளி மைக்காரா
செம்பைம்பொன் தந்திடு மொழிதிகழ்
சித்ர மயிற்காரா
செம்பொன்கொள் சுந்திரு மலைவளர்
செக்கர் நிறக்காரா
கும்பன்கண் டின்புறு குருபர
கொட்டுக சப்பாணி
குன்றெங்குந் தங்குஞ் சிவசுத
கொட்டுக சப்பாணி.
37வேறு✓
துட்ட அரக்கர்கள் பட்ட பிணக்குவை
சுற்றுக டற்பூமி
தொக்கு மறைக்கவி ழிக்கன லைக்கொடு
சுட்டட லைப்பூதி
இட்டுல கத்துள சட்சம யத்தரும்
இச்சம யத்தாக
இப்படி யுத்தம் விளைத்த களத்தில்
எதிர்த்து மறுத்தோடி
நெட்டை மரத்தியல் பைக்கொ டுரத்தொடு
நிற்கும தச்சூரன்
நெட்டுரு வத்துடல் பட்டுரு வத்தசை
நெய்த்தவு டற்சோரி
கொட்ட அயிற்படை தொட்ட திறற்குக
கொட்டுக சப்பாணி
குக்குட மெய்த்துவ சத்திரு மலைமுகில்
கொட்டுக சப்பாணி.
38✓
அளவில் அரக்கர்கள் கதறு தொனிக்குரல்
அசனி இடித்திடவே
அங்கவர் செம்மணி யணிமுடி சிந்தி
யழற்பொலி மின்னோட
இளமதி ஒத்தில கெயிறெனு மாம்பிணம்
எங்கும் உறச்சோரி
இந்திர கோப மலிந்திட வேபுவி
யில்அவிர் வில்லிடவும்
வளமை ஒழித்திட அழுத அரக்கியர்
மண்டு கம்போல
வானுல கென்னும் வயிற்பயிர் உய்ந்திட
வந்து ரனகால்வாய்
குளமுடை யச்சர மழைபொழி புயலே
கொட்டுக சப்பாணி
குக்குட மெய்த்துவ சத்திரு மலைமுகில்
கொட்டுக சப்பாணி.
39✓
துடித்த தரத்தைய துக்கியு றுக்கிய
சுழல்கண் தீயவுணர்
சோரிகு டைந்துகு ளித்திகல் வெற்பைத்
துண்ணென நீறிட்டுப்
பிடித்தக ரத்திரி சூலிஇடாகினி
பேழ்வாய் வெம்பூதம்
பேய்நரி கழுகுப ருந்துக ருங்கொடி
பெரிய விருந்தாக
வடித்தஉ வர்த்ததி பாகொடு பால்நெய்
மதுப்புனல் ஏழ்கடலும்
மாறுப டாமல் அளாவிநி ணத்தொடு
மாவுட னுங்கூட்டிக்
குடித்து மதத்தஅ யிற்படை யானே
கொட்டுக சப்பாணி
குக்குட மெய்த்துவ சத்திரு மலைமுகில்
கொட்டுக சப்பாணி.
40✓
நெஞ்சுகு ழைந்துகு ளிர்ந்தப கீரதி
நீராட் டிப்போற்றி
நீறொடு திலகமொர் ஆறுசெ மும்பிறை
நெற்றிதொ றுந்தீட்டி
அஞ்சனம் அன்பொடு கண்களில் எழுதியோர்
ஐம்படை யும்பூட்டி
அரைவடம் ஆழிசி லம்புகு தம்பைஅ
ணிந்துமு கம்பார்த்து
வஞ்சிதி கம்பரி கொங்கைக ரந்தும
கிழ்ந்தும கிழ்ந்தூட்டி
வாய்தொறு முத்திம டிக்குள் இருத்திமென்
மழலைச் சொற்கேட்டுக்
கொஞ்சிம கிழ்ந்தருள் பிள்ளைப் பெருமாள்
கொட்டுக சப்பாணி
குக்குட மெய்த்துவ சத்திரு மலைமுகில்
கொட்டுக சப்பாணி.