திருமலை முருகன் பிள்ளைத்தமிழ்
கவிராச பண்டாரத்தையா
காப்புப்பருவம்2 / 10
திருமலை முருகன் பிள்ளைத்தமிழ் · கவிராச பண்டாரத்தையா
காப்புப்பருவம்
1திருமால்✓
சீரார் கமலத் திருசன்ற
தெய்வப் பிடியுங் குறக்கொடியுஞ்
சேரும் பெருமாள் வேற்பெருமாள்
செந்திற் பெருமாள் மயிற்பெருமாள்
காரார் குடுமித் திருமலையிற்
கருணைப் பெருமாள் குகப்பெருமாள்
கந்தப் பெருமாள் முத்தொழிலுங்
காக்கும் பெருமாள் தனைக்காக்க
பார்ஆ யிழையைத் திருமகளைப்
பாரப் புயத்தில் திருமார்பிற்
பதிக்கும் பெருமாள் வேயின்இசை
பாடும் பெருமாள் பசம்பெருமாள்
ஆரா அமுதங் கடைந்தமரர்க்
கருளும் பெருமாள் திகிரிசங்கம்
அணியும் பெருமாள் முதலைதடிந்
தானை காத்த பெருமாளே.
2சிவபெருமான்
வேறு✓
வனநதி அறுகு சிறுபிறை இதழி
வளர்சடை முடியின் மீதினில் சேர்த்திய
வரதனை நடன பரதனை இமய
மடமயில் தழுவும் வாமனைப் பாற்கடல்
வரமுனி மதலை அழஅருள் புரியும்
மழவிடை உடைய பாகனைக் கார்க்கடு
மணிமிட றொளிரும் அமலனை நமனை
வதைசெய்த சரண மாமலர்ச் சேர்ப்பனை
✓
இனமுனி வரர்கள் தவமுயல் இடமு
மினியபண் மொழியும் ஆரணக் கூட்டமும்
இருநில வனிதை முலையணி தரளம்
எனவிழும் அருவி நீர்உகத் தூற்றிய
இயல்பெறு வளமை பழமையும் உடைய
எழில்வரை எழிலி தோயுமுக் கோட்டினில்
இலகிய பலவின் நிழலமர் கடவுள்
எழுதிய சபையில் ஈசனைப் போற்றுதும்
✓
அனகனை எமது குலகுரு பரனை
அருள்பெறும் அமரர் சேனையைக் காத்துமுன்
அடையலர் மனது படபட படென
அடலயில் நடவு வீரனைக் கார்த்திகை
அழகிய புளக களபமென் முலையின்
அமுதுணும் இளைய பாலனைத் தீர்த்தனை
அருமறை முடியில் நடமிடு பரனை
அறுமுக குகவி சாகனைத் தேர்ப்பொலி
✓
தினகரர் ஒருபன் னிருவரும் ஒளிகள்
திகழ்உடு பதியும் ஏகுதற் கேக்குறு
சிகரியின் அழகு சினகர மருவு
திருமதி னெயிலின் மேற்றிசைப் பாற்படு
தெரிவையர் எழுபெண் அரசியர் தமது
திருவருள் புரியும் வாவியிற் பூத்திடு
தினமொரு குவளை மலர்தனை உதவு
திருமலை விசய வேலனைக் காக்கவே.
3உமையம்மை
வேறு✓
நிறம்வ ளர்த்திடு நீலிசொற் பாத்தரு
நிமலி மட்டவிழ் தாமரைத் தாள்துணை
நினைப வர்க்கருள் கோமளக் கோல்தொடி
நிலைமை பெற்றிடு நாழிநெற் சேர்த்துல
கறம்வ ளர்த்தவள் தூயபொற் கோட்டிம
அசல புத்திரி யாமளை கார்த்திகை
அருளு டைக்குழல் வாய்மொழிப் பார்ப்பதி
அடியி ணைப்புகழ் தானெடுத் தேத்துதும்
மறம்வ ளர்த்தநி சாசரச் சீற்றர்கள்
வலிதொ லைத்தசு ரேசனைத் தாக்கியோர்
மயில்ந டத்திய வீரனைச் சூர்ப்பகை
மறவ னைக்கதிர் வேலனைத் தேக்குறு
திறம்வ ளர்த்தசி வாகமப் பாற்கடல்
தனைம தித்ததி லேஎடுத் தூற்றிய
தெருள்ஒ ழுக்கமு தீசனுக் கூட்டிய
திரும லைக்குரு நாதனைக் காக்கவே.
உச்சிப்பிள்ளையார்வேறு✓
சுரரை வளைத்துத் தலைமிசை குட்டித்
தொகைலோகக் காப்பினர்
தொழிலை அடக்கிக் கொடுமை செலுத்தித்
தொலையாமைத் தேக்கொடு
செருவில் எதிர்த்துப் பொருத தயித்தியத்
திறலாளைப் போர்ப்புரி
திருமலை யுச்சிக் கணபதி பற்பச்
சிறுதாளைப் போற்றுதும்
அரவுபிடித்துச் சடைஅணி கொற்றத்
தரனார்கண் தீப்பொறி
அறுவகை முற்றிச் சரவண முற்றிட்
டடியாரைக் காத்தொரு
பிரணவ நுட்பப் பொருளை விரித்துப்
பிரமாவைத் தாக்கிய
பிரச மலர்க்கண் குவளை மலைக்குள்
பெருமாளைக் காக்கவே.
5திருமகள்
வேறு✓
இச்சைக் கிசைந்த வரங்கொடுக்கும்
எங்கள் குவளைத் திருமலையை
ஏத்தும் அடியார் வீட்டகத்தில்
எங்கோன் மாமன் மார்பகத்திற்
பச்சைப் பசுந்தாள் செங்கமலப்
பனிப்பூம் பொகுட்டில் குடியிருக்கும்
பவளத் துருவத் திருமடந்தை
பாதத் துணையைப் பணிந்திடுவாம்
கொச்சைக் குறவர் குலச்சிறுமி
குமரி குறத்தி பசுநிறத்தி
கொங்கைக் குவட்டிற் குடைந்துமற்றக்
குவட்டுக் கிரியைத் தகர்த்துழக்குஞ்
செச்சைப் புயபூ தரத்தழகன்
செழிக்கும் திருச்சண் முகத்தழகன்
செவ்வேல் அழகன் பண்பைநகர்ச்
செவ்வேள் பனுவல் தழைக்கவே.
6நாமகள்✓
உதரத் திடையின் உலகொடுக்கி
உமிழ்ந்தோன் இருவர்க் கொருகொழுநன்
உந்தி மலரின் வந்துதித்த
ஒருநான் முகத்தன் திருமனையாள்
அதரச் சிவப்பி குழல்விழிகள்
அழகு கறுப்பி உடலிடம்பூண்
ஆடைமுறுவல் வெள்ளைநிறத்
தம்மை வாணி பதம்பணிவாம்
மதுரக் கவிதை மழைபொழியும்
வரத அருண கிரிமேகம்
வழங்குந் தமிழ்மா ரியில்ஸ்தோய்ந்து
வளர்பன் னிருபொன் வரையின்மிசை
கதிர்நித் திலமும் செம்மணியும்
கடம்பும் குரவும் வள்ளிகொங்கை
களபப் புழுகும் கமழ்ந்திலகும்
கந்தன் கவிதை செழிக்கவே.
7பிரமதேவன்✓
படிஏழுலகும் படைத்துயிர்க்கும்
பலவேறுருவம் படைத்ததிலே
பரிந்துமுகபே தமும்படைத்துப்
பாராய்பனுவ லாட்டியென்று
பகர அதற்கு நிகராக
முடியாவாணி அவன்படைத்த
முகங்கள்தோறும் இருந்திருந்து
மொழியும்பேதங் காட்டமின்னை
முழுதுமகிழ்ந்து நாவில்வைத்த
முளரிப்பிரமன் சரண்பணிவாம்;
வடியாக்கடலைச் சிறைபுரிந்து
மழலைச்சீதை சிறைமீட்ட
மாயன்மருகன் வச்சிரத்தால்
மலையின்சிறையைத் தடிந்தவிண்ணோன்
மதலைசிறையைத் தீர்த்தசுரக்
கொடியோனுடற்கே நான்குசிறை
கொடுத்துநடத்திக் கொடியுயர்த்த
குமரக்கடவுள் திருமலையில்
குடிகொண்டிருந்து விளையாடுங்
குரிசில்பனுவல் தழைக்கவே.
8காளி
வேறு✓
பண்அம் பணத்திகிரி சூலிகௌ மாரியொரு
பாலைக் கிழத்திநீலி
பச்சைப் பசுங்குமாரி கொற்றப் பெரும்படைப்
பசாசுவே தாளம்உடையாள்
கண்ணன் திருத்துணைவி கைச்சக் கரக்கௌரி
கல்வா கனக்கபாலி
கதிகொடுத் தாளும்என் திருமலைக் காளிசெங்
கமலசர ணம்பணிகுவாம்
வண்ணம் கறுத்ததிரு மேனியொரு பாதியின்
வடிவக் கருங்கடலின்நீர்
மட்டுமிஞ் சிப்பெருகி அப்புறச் செம்மையில்
வழிந்தொழுகும் வாறிதெனவே
கண்ணுந் திருக்கந்த ரத்தில்விடம் வைத்தருளும்
நகர்ஈசர் மார்பிலணியும்
நாமவெள் ளைப்பொடிப் புழுதிஆ டுங்குமர
நாயகன் கவிபெருகவே.
9வள்ளிதேவயானை, கன்னிமார், சத்தமாதர்கள்
வேறு✓
தருவிற் சிறையும் குறவர்களும்
தவளக் களிறும் செம்மானும்
தலைமை பெறவந் துதித்தருளுந்
தாய்மார் இருவர் சரண்போற்றி
மருவிட் டொழுகும் பைங்காவி
வாவிக் கரையின் மேவுகன்னி
மார்கள்எழுவர் சத்தகுல
மாதர் இவர்கள் சரண்பணிவாம்
துருவைப் பரியிற் பேரடலைத்
துணைவன் கரத்தால் துடைத்தேறின்
சூரைத் துடைத்தங் கவன்செனனத்
துயரைத் துடைத்துச் சொல்அவுணர்
கருவைத் துடைத்தோர் அயிராணி
கண்ணீர் துடைத்து மெய்யடியார்
கவலை துடைத்த திருமலையிற்
கந்தன் கவிதை விளங்கவே.
10வீரபத்திரர், வயிரவர், சாஸ்தா, அட்டவசுக்கள், ஏகாதச ருத்திரர், அசுவினி தேவதைகள், சந்திரன், ஆதித்தர், பதினெண்கணம், சப்தரிஷிகள்
வேறு✓
வட்ட நிலத்தொ டடுக்குல கத்துள
வஞ்சம் ஒழிந்திடவே
மலைதக ரும்படி மயில்நட வுஞ்சிறு
மதலையை எந்தையையே
சிட்டர்கள் உத்தம பத்தி மிகுத்திடு
சிந்தை மகிழ்ந்திடவே
திருமலை யின்குவ டதனில் உறைந்தருள்
சிவசுக கந்தனையே
துட்டன் மகத்தை உழக்கிய விக்ரம
தும்மி நிரம்பியசீர்
தொலைவறு திண்திறல் வயிரவர் இம்பர்கள்
தொழுமணி கண்டனுமே
அட்ட வசுக்கள் உருத்திரர் மருத்துவர்
அம்புலி செங்கதிரோன்
அருள்பதி னெண்கண முனிவர் புரந்தரன்
அமரர் புரந்திடவே.