முருகன் App
திருமலை முருகன் பிள்ளைத்தமிழ்
கவிராச பண்டாரத்தையா
செங்கீரைப்பருவம்3 / 10
திருமலை முருகன் பிள்ளைத்தமிழ் · கவிராச பண்டாரத்தையா

செங்கீரைப்பருவம்

11✓
மனத்தினில் நினைத்துருகும் உத்தமர் உளத்தின்மிசை
மங்காத வேதமுடிமேல்
மயிற்பரி திருப்பொலி புறத்தென தகத்தினொடு
வன்போரின் மேடமிசையே
புனற்சடை முடிக்கடவுள் அற்புத மடிக்குள்உமை
பொங்கார மார்புதனில்நீ
பொருப்பினை முதற்சிறை அறுத்தவுச. யத்தினொடு
பொன்றாத தேவர்தலைமேல்
அனத்தினை உயர்த்தவன் முடித்தலை யினிற்சுரர்கள்
அன்பான வாறுதலைமேல்
அனிச்சமும் உருத்திய பதச்சிறு குறச்சிறுமி
அம்பாகு நீலவிழியாள்
தினைக்கதிர் வனத்திலும் மலர்ச்சரணம் வைத்தகுக
செங்கீரை ஆடியருளே
திருக்கிளரும் உற்பல மலர்த்திரு மலைக்குமர
செங்கீரை ஆடியருளே.
12✓
கூராடும் வேல்விழிகள் குழையில் ஆடக்குழைகள்
கொண்டாடு தோளில்ஆடக்
குறுவியர்வு திருநுதற் சிலையில் ஆடச்சுட்டி
கூடத்து வண்டாடவே
வாராடு பொன்மார்பின் மாலைஆ டத்தரள
மாலையொடு சேலைஆட
மலராடு செங்கைதனில் வெள்வளைகள் ஆடநின்
மனதுநின் றூசல்ஆடத்
தாராடு மைக்குழல் சரிந்தாட வல்லிஇடை
தள்ளாட நகையாடியே
தளிராடு கற்பகச் சோலையிற் பந்தாடு
தனியானை முலையானைமேற்
சீராடு மான்மதச் சேறாடும் ஒருகளிறு
செங்கீரை ஆடியருளே
திருக்கிளரும் உற்பல மலர்த்திரு மலைக்குமர
செங்கீரை ஆடியருளே.
13✓
மங்காத கற்பகக் காவினில் செந்தினையின்
வனசர மிசைப்பிறந்து
வண்மைச் செழுஞ்சர வணப்பொய்கை நதிசரமும்
வாழவே தவமுயன்று
பொங்கார முங்குரவும் நீபமுஞ் செச்சையும்
பூங்குவளை யும்கோடலும்
பூத்துப் பொலிந்தழகு வாய்த்திலகு பன்னிரு
புயக்கிரி சரத்தைமேவுங்
கொங்கார் கதுப்பிளங் குஞ்சரியும் மஞ்சரிக்
கோதைக் குறப்பிடியுமே
குணபேத மில்லா திடத்தினும் வலத்தினுங்
கூடப் பிணைக்கநடுவோர்
சிங்கார வச்சிரத் தூண்போல் இருப்பவன்
செங்கீரை ஆடியருளே
திருக்கிளரும் உற்பல மலர்த்திரு மலைக்குமர
செங்கீரை ஆடியருளே.
14✓
கொந்துகமழ் சரவணப் பொய்கையின் மருங்கில்இரு
கோட்டொருவெள் ஏற்றிளேறிக்
கூர்மழுக் கையனும் தையலும் திருவுளங்
கூடக் கசிந்துருகியே
வந்துமக வாறுருவும் ஓருருவம் ஆகவே
மங்கைபார்ப் பதிஎடுத்து
மடியில்வைத் துச்சியின் முகந்துபுற நீவிமணி
வாய்தோறும் முத்தமிட்டே
இந்துமுக மண்டலத் துமைமங்கை கொங்கையின்
இழிந்தொழுகு பாலைவள்ளத்
தேந்திக் கொடுக்கக் குடிக்கும்அப் போதுபனி
ரண்டுகடை வாயின்வழியே
சிந்திவழி கின்றதென முத்தணியு மார்பனே
செங்கீரை ஆடியருளே
திருக்கிளரும் உற்பல மலர்த்திரு மலைக்குமர
செங்கீரை ஆடியருளே.
15✓
கால்பெயர்த் தசைநடைக் கொண்டுநளி னத்திலை
கறித்துக் குதட்டுமேதி
கன்றுக் கிரங்கிக் கனைத்துநீர் விட்டுமுற்
கால்வாரி நின்றுமுலையின்
பாலுகுத் திடஅது பரந்தோடி முப்பழப்
பங்கச் செழுங்கழனியிற்
பாய்ந்தொழுக அதனிடை கிடந்து சேறாடும்
பருங்கரும் பகடுபூட்டிச்
சாலடித் துழும்உழவர் மார்பினில் தோளினில்
தலைதொறும் முகங்கடோறும்
தளிரடிப் பிடிநடைச் சாதிக் கடைசியர்கள்
தங்கள்நய னங்கள்போலச்
சேல்குதிக் குந்திருப் பண்பைநக ராதிபதி
செங்கீரை ஆடியருளே
திருக்கிளரும் உற்பல மலர்த்திரு மலைக்குமர
செங்கீரை ஆடியருளே.
16வேறு✓
இனமுனி வரர்கள் குறுமுனி குருபரன்
என்றே கொண்டாடும்
இவைஅவ ரொடுபொரு பகைநிசி சரர்பதி
எங்கே என்றேகி
மனவலி புயவலி படைவலி தவவலி
மஞ்சா ருஞ்சூரன்
மதலைகள் துணைவர்கள் கிளையுடன் அவனுடல்
வன்பா ரம்தீர
நனைமலர் சிதறியும் அரிஅயன் முதலினர்
நண்போ டும்பாட
நகைமணி வளையணி கரதல வயிறொடு
நம்பா சங்ராமா
தினகரர் விழியையும் அருள்செயும் ஒருமணி
செங்கோ செங்கீரை
திருமலை அறுமுக சரவண பவகுக
செங்கோ செங்கீரை.
17✓
பசைஅறு நெஞ்சுடை அவுணர் பெரும்படை
பஞ்சாய் நொந்தேழு
பரவையின் மிசைபுக அலைகெட வடகிரி
பந்தாய் நின்றாட
விசையின் நொறுங்கிய திகிரி நெடுங்கிரி
விண்டே செந்தூளாய்
விடவிட அரவொடு கமடமு மசைவுற
வெந்தீ யும்காலும்
இசைபெறு மண்புனல் வெளியுடன் ஐந்தெனும்
எண்பூ தம்சோர
இமையவர் முனிவர்கள் துயரொடு மகிழஇ
ரண்டோ டொன்றேழு
திசைசுழ லும்படி மயில்நட வும்பதி
செங்கோ செங்கீரை
திருமலை அறுமுக சரவண பவகுக
செங்கோ செங்கீரை.
18✓
கொந்து கமழ்ந்திடு குஞ்சியு மூவிரு
குலமணி மௌலிகளும்
கோக நகங்களொர் ஆறு மலர்ந்தன
குளிருந் திருமுகமுஞ்
சந்த மணங்கமழ் கந்தர மும்கிரி
தண்டிய திண்புயமும்
தனிஅயி லும்கர தலமும் இலங்கிய
சந்துறு தடமார்பும்
தொந்தி தருஞ்சிறு பண்டியும் மேலணி
சுந்தர அரைஞாணும்
துகிலும் பரிபுர பதமும் கொடுதுயர்
தொலையும் படிஅடியார்
சிந்தையின் நின்று நடம்புரி யுங்குக
செங்கோ செங்கீரை
திருமலை அறுமுக சரவண பவகுக
செங்கோ செங்கீரை.
19✓
மகரக் கடலிற் கடுவிட முண்டவன்
வளையா வலியாலு
மாயக் காலுக் குடைபட் டுருளா
மணிமுடி பெறலாலும்
நிகரொப் புவமை இலாத சுதந்தர
நீவிளை யாடியநாள்
நெரிபட் டடிபட் டுன்னால் நிலைகுலை
யாதுவி ளங்கியதால்
தகரக் கருமைக் கோதைஅ ரம்பையர்
தயவுறு கொழுநருடன்
தடவட வரையினும் இவைபெரி தெனவே
தங்கி இருந்தேகுஞ்
சிகரிப் பண்பைத் திருநக ரதிபதி
செங்கோ செங்கீரை
திருமலை அறுமுக சரவண பவகுக
செங்கோ செங்கீரை.
20✓
காயொடு பூவொடு கனிஉறு மாவு.
கண்டம்இ ரண்டாகக்
கண்டகர் நெஞ்சம் உலைந்துகு லைந்து
கலங்கி மலங்கிஅழப்
பேயொடு காளி நடஞ்செய உம்பர்
பிழைத்தோம் என்றாடப்
பேருல குய்ந்து சராசர கோடி
பிராணி தழைத்தாடத்
தாயொடு தமரும் இலாத அதீதன்
தழல்விழி வழிதோன்றித்
தண்டிய அண்டம் நிரம்பிய காலின்
தலைஒரு வாகனமாய்த்
தீயொடு நீரொடும் வரும்இடி ஏறே
செங்கோ செங்கீரை
திருமலை அறுமுக சரவண பவகுக
செங்கோ செங்கீரை.