திருமலை முருகன் பிள்ளைத்தமிழ்
கவிராச பண்டாரத்தையா
தாலப்பருவம்4 / 10
திருமலை முருகன் பிள்ளைத்தமிழ் · கவிராச பண்டாரத்தையா
தாலப்பருவம்
21✓
பண்டைக் கொடிய தீவினையும்
பழிக்குங் குலமும் நானெனும்ஓர்
பகையும் தீர்ந்திட் டிம்மையிலே
பரிந்து மனது குழைந்துருகுந்
தொண்டைத் தொகையி னுடன்கூடித்
தொனிக்க இனிக்குந் திருப்புகழைச்
சொல்லித் துதிக்க நல்இயலாந்
தொலையா வாழ்வு கொடுத்தருளி
அண்டத் திறைவன் பொன்முடிக்கும்
அமலாக் கமலன் மணிமுடிக்கும்
அமரர் முனிவர் தலைகளுக்கும்
அணியப் பணியக் கிடையாத
தண்டைப் பதத்தை எனக்களித்த
தலைவா தாலோ தாலேலோ
தாமக் குவளைத் திருமலைவித்
தகனே தாலோ தாலேலோ.
22✓
மையற் குறவர் குறத்தியர்கண்
மருளு மடம்போய்த் தெருளெய்த
மான்கள் பசியும் மனப்பயமும்
மறந்து சுரந்த மடிப்பாலைப்
பையப் பதுங்கும் புலிப்பிணவின்
பறழுக் கருத்திக் கொலைமறந்த
பாரப் புலிதன் முலைப்பாலைப்
பன்றிக் குருளைக் கினிதூட்டக்
கையில் கவணில் பதித்தமணிக்
கல்லும் உருகக் கிளிகள்தினை
கவரா திருந்து கசிந்துருகக்
கனிவாய் ஆலோ லம்புகலும்
தையற் குறத்தி மனம் உருக்குஞ்
சமர்த்தா தாலோ தாலேலோ
தாமக் குவளைத் திருமலைவித்
தகனே தாலோ தாலேலோ.
23✓
நீடுங் கருணைத் திருவருளால்
நீதூ தனுப்ப விடைவாங்கி
நெடிய கடலைக் கடந்திலங்கை
நீரில் அழுந்தக் குதித்தவுணர்
கூடும் பதிம கேந்திரத்தின்
குணபால் காக்குங் கயமுகனைக்
கொன்று சயந்தன் சிறைச்சாலை
குறுகிக் குகஉன் வரவுரைத்துச்
சூடு மகுடச் சூரன்முன்போய்த்
தூது பகரச் சூரன் எதிர்
சொல்லிச் சீற வல்லையிலோச்
சுடர்க்கோ புரத்தால் அயன்கொலுவைச்
சாடும் வீர வாகுதுணைத்
தமையா தாலோ தாலேலோ
தாமக் குவளைத் திருமலைவித்
தகனே தாலோ தாலேலோ.
24✓
செப்பா மோனப் பரமசுகச்
செங்கைக் கருநெல் லியங்கனியே
திருக்கார்த் திகைபார்ப் பதிமுலைப்பால்
தேக்கும் ஒருசெம் பொற்குடமே
கொப்பார் குழைச்சி குறத்திகொங்கைக்
குவட்டில் அணியுஞ் செம்மணியே
குளிருஞ் செழுங்கங் கையில்பிறந்த
கோமே தகமே கூர்வடிவேல்
அப்பா அரசே உமைமடந்தைக்
கருமைக் குருந்தே கண்மணியே
அமரர் விருந்தே யுலகினுயிர்
அனைத்தும் புரக்கும் அருமருந்தே
தப்பா விரதப் பெருமான்சந்
ததியே தாலோ தாலேலோ
தாமக் குவளைத் திருமலைவித்
தகனே தாலோ தாலேலோ.
25✓
கன்னங் கரிய மால் இடத்தே
கலந்து விளங்குந் தாணுவின்மேல்
கண்ணில் உதித்தோர் ஆறுருவாய்க்
கால்மே லேறிக் குளம்புகுந்து
மன்னும் உயிருக் குயிராகி
வடிவொன் றாகிப் பலமுகமாய்
வளர வயலுஞ் சோலையினும்
வாவிதொறும் விளையாடி
அன்னம் இருபால் இருக்கஇசைந்
தார்க்கும் வேலை நடத்திமகிழ்ந்
தன்பு புரிந்து பரிந்துபுரிந்
தடுத்தோர் பரவச் சூர்தடிந்துன்
தன்னைப் பொருவும் அனுமாதித்
தலைவா தாலோ தாலேலோ
தாமக் குவளைத் திருமலைவித்
தகனே தாலோ தாலேலோ.
26✓
குமரன் சரணம் சரணமென்று
கூறிச் சுரர்கள் சரண்புகுதக்
கொடியோர் மனத்தில் பயம்புகுதக்
கொலையும் களவும் கெடிபுகுத
அமரர் உலகம் குடிபுகுத
அவுணர் பதியில் எரிபுகுத
அடையார் உயிர்கள் சொர்க்கமுடன்
அழல்வாய் நரகம் போய்ப்புகுதத்
துமிர்த அலையா ழியில்அவுணர்
சோரிக் கடல்போய்ச் சுரந்துபுகத்
துங்க வீர வாகுசொன்ன
சொல்லுப் புகுதாச் சூரன்நெஞ்சில்
சமர வடிவேல் புகளறிந்த
சதுரா தாலோ தாலேலோ
தாமக் குவளைத் திருமலைவித்
தகனே தாலோ தாலேலோ.
27வேறு✓
மதமலை துணைவா குறமகள் கணவா
வானோர் கோமானே
மலைமகள் புதல்வா அறுமுக முதல்வா
வாகா மேகாரா
பதபரி புரனே முகவசி கரனே
பாலா சீராளா
படைபொர அசையா ரணமுக விசையா
பாராள் சூரேறே
சிதமுறு குழகா அதிசய அழகா
தேனே பாலாறே
சிவகுல திலகா அவகுல கலகா
தேவே சேயோனே
சதமகன் மருகா திருமலை முருகா
தாலோ தாலேலோ
தமிழறி புலவா தனிஅயில் வலவா
தாலோ தாலேலோ.
28வேறு✓
இந்து நெடுஞ்சிலை சந்திர திலகம்
இரண்டும் உரிஞ்சிடவே
இந்துவொ டுஞ்சிறு தென்றல் வருந்தொறும்
இளகி நறுஞ்சேறாய்க்
கொந்து கமழ்ந்து வழிந்ததை ஆவின்
குழுவிடும் எருவெனவே
கூடைகள் தோறும் எயிற்றியர் வாரிக்
குடில்மெழு கக்குறவர்
செந்தினை யோடு கருந்தினை அள்ளிச்
சிதறு புனங்கள்தொறுஞ்
செல்உகு நீரான் ஐவனம் விளையுஞ்
செய்தொறும் உரம் இடவே
சந்த மணங்கமழ் திருமலை முருகா
தாலோ தாலேலோ
தமிழறி புலவா தனிஅயில் வலவா
தாலோ தாலேலோ.
29✓
தொண்டர் தொழுந்தொறும் இன்ப மிகுந்துதி
சொல்லிய நல்ஒலியும்
தும்புரு நாரதர் இங்கித வீணை
மீட்டிடும் ஏழிசையும்
அண்டர் அரம்பையர் மங்கல கீதம்
அறைந்திடு துழனிகளும்
அந்தர துந்துமி யும்குட முழவும்
அதிர்ந்திடும் ஓதைகளும்
மண்டிய வன்புடை முனிவர் சிவாகம
வகையும் சதுமறையும்
வாய்க்கும் புலவர் செவிக்கும் இனிக்க
வடித்த திருப்புகழின்
தண்டமி ழின்தொனி தருதிரு மலையா
தாலோ தாலேலோ
தமிழறி புலவா தனிஅயில் வலவா
தாலோ தாலேலோ.
30✓
கங்குலும் மங்குலும் ஒருரு வாகிக்
கானில் நடந்ததெனுங்
காட்டெரு மைக்குலம் வேட்டுவ ரேனல்
கதிரை மிகப்பருகிக்
கொங்கவிழ் குவளை நறுஞ்சுனை நீர்கள்
குடித்து மதர்ப்புதனே
குகரக் குடுமி முழைக்குள் விடுத்த
குழக்கன் றைத்தேடிச்
செங்கண் மருண்டு கனைப்ப முலைப்பால்
சிந்தி வழிந்தோடிச்
சேரந னைந்து வெளுப்புற லாலும்
தெய்விக நீராலும்
சங்கரன் மலைநிக ருந்திரு மலையா
தாலோ தாலேலோ
தமிழறி புலவா தனிஅயில் வலவா
தாலோ தாலேலோ.