முருகன் App
திருமலை முருகன் பிள்ளைத்தமிழ்
கவிராச பண்டாரத்தையா
சிற்றிற்பருவம்9 / 10
திருமலை முருகன் பிள்ளைத்தமிழ் · கவிராச பண்டாரத்தையா

சிற்றிற்பருவம்

71✓
கூண்ட மாயப் பரசமயக்
குழியின் வீழ்ந்தங் குழியாமற்
கொங்கை மலையும் மடவார்கள்
குழற்காட் டினும்போய்ச் சுழலாமற்
பூண்ட விரதச் சைவநெறி
புகுந்து சரியை கிரியையொடும்
புனிதச் சிவயோ கமும்புரிந்து
பூத வீட்டைச் சுத்திபண்ணி
ஆண்ட குரவன் உனதருளால்
அருள்முப் பொருளும் பிரித்தறிந்தங்
கத்து விதத்தின் உருவடைந்த
அடியார் சிரத்தின் அயன்பொறியைத்
தீண்டி அழிக்குஞ் சேவடியால்
சிறியேஞ் சிற்றில் சிதையேலே
செல்லுத் தவழுந் திருமலையிற்
செல்வா சிற்றில் சிதையேலே.
72✓
நேய முடைய அடியவர்க்கு
நிகழுஞ் செனனப் பிணியல்ல
நித்தம் பரவும் கடவுளர்க்கு
நிருதர் புரிந்த சிறையல்ல
மாய முடைய கிரவுஞ்ச
மலையுங் கடலுஞ் சூரும்அல்ல
வலிய குறவர் காவல் அல்ல
மழலைக்குறத்தி குமரும் அல்ல
தூய வமரர் முனிவர்சிவத்
துரோக மல்ல மேருவல்ல
துங்கச் சிலைவேள் உடலம் அல்ல
துதிக்கும் புலவர் வறுமையல்ல
தீய புரமும் அலஅவைபோற்
சிறியேஞ் சிற்றில் சிதையேலே
செல்லுத் தவழுந் திருமலையிற்
செல்வா சிற்றில் சிதையேலே.
73✓
பாடக் கிடையாப் புகழைவெள்ளைப்
பாட்டிற் புனைந்து புகழ்ந்திடுவேம்
பவனி வரும்போ தயினிசுற்றிப்
பரவிப் பரவிக் கடன்கழிப்பேங்
கூடக் கிடையாத் திண்புயத்தைக்
கூடுங்குறத்தி குஞ்சரிக்குங்
குலவு மாய ரிகுளையராய்க்
குற்றே வலிலே சஞ்சரிப்பேஞ்
சூடக் கிடையாத் தண்டையந்தாள்
துகளைத் துடைத்துத் தாலாட்டித்
தொட்டில் உழைவைத் தாட்டிடுவேஞ்
சோதிக் கடவு ளுமைமடந்தை
தேடக் கிடையாத் திரவியமே
சிறியேம் சிற்றில் சிதையேலே
செல்லுத் தவழுந் திருமலையிற்
செல்வா சிற்றில் சிதையேலே.
✓
வருநா மகட்குத் திருமடந்தை
மாமிக் கொடுமை புரியாமல்
மாமி தனக்குக் கலைவாணி
மருகிக் கொடுமை செய்யாமல்
ஒருநாட் கொருநாள் உவகைபொங்கி
ஒருவர்க் கொருவர் களிப்பெய்தி
ஒளிர்செங் கமல வெண்கமலத்
துறையும் பான்மை போன்மகிழ்ந்து
தருநா கரிகத் தாடவர்கள்
தன்மார் பினுநா வினுமேவித்
தவிராச் செல்வத் தொடுகல்வி
தழைத்துச் செழிக்கும் வடவாரித்
திருநா டுடைய குகப்பெருமாள்
சிறியேம் சிற்றில் சிதையேலே
செல்லுத் தவழுந் திருமலையிற்
செல்வா சிற்றில் சிதையேலே.
75✓
தொனிக்குந் தொடிக்கைக் கடைசியர்கள்
துண்ணென் றெழுந்து குரவைசெய்து
துள்ளிப் புதுநீர்ச் செழுங்கழனி
தொறுநாள் நடவு தொடங்கிநட்டுத்
தனிக்கு மனத்தான் மருதநிலத்
தலைவர்ப் போற்றிக் கடமதுவைத்
தடக்கை வள்ளத் தினில்வார்த்துத்
தயவா யருந்த அம்மதுவுட்
பனிக்குங் கருணை முகம்அளக
பாரந் தோன்றப் பகைஇரவு
பரந்த தெனமள் ளரைநினைந்து
பகற்போ தினுமள் ளியர்க்காசை
செனிக்கும் பண்பை நகர்க்கரசே
சிறியேம் சிற்றில் சிதையேலே
செல்லுத் தவழுந் திருமலையிற்
செல்வா சிற்றில் சிதையேலே.
76✓
அல்வைத் திடுங்கூந் தலம்பிடித்தெய்
வானைத் திருவைப் பரங்குன்றில்
அயிரா ணியும்விண் ணவர்க்கிறையும்
அளிப்ப மணஞ்செய் தருளினவன்
வல்வைத் திடும்பூண் முலைச்சிறுமி
வள்ளிதனையுந் தினைப்புனத்தில்
வரிவிற் குறவன் குறத்திதர
மணந்தான் என்று மொழிந்தேமோ
கல்விச் செருக்கால் விளையாட்டுக்
களிப்புச் செருக்கால் சூர்தடிந்த
கடிய செருக்கால் சமண்பகையைக்
கடந்த செருக்கால் இளஞ்செருக்கால்
செல்வச் செருக்கான் மனச்செருக்காற்
சிறியேம் சிற்றில் சிதையேலே
செல்லுத் தவழுந் திருமலையிற்
செல்வா சிற்றில் சிதையேலே.
77✓
காவிச் சுனைநீர் குடைந்தாடிக்
கரையி லிருந்த தொழுத்தைமனங்
கரையக் கருதி உருவேற்றிக்
கன்னி மாரை யும்பரவி
ஆவிப் புலனின் றுகமகிழ்ந்
தாடிப் பாடி அங்கைகொட்டி
அருமைப் புகழைப் புகழ்ந்துபுகழ்ந்
தங்கம் பிரதக் கிணமாகத்
தூவிச் சிகரச் சினகரத்தைச்
சுற்றிப் பரிந்து கந்தசஷ்டி
சோம வாரங் கார்த்திகைநாள்
சுக்கிர வாரந் தோறும்வந்து
சேவித் துனையே தெரிசிப்பேஞ்
சிறியேஞ் சிற்றில் சிதையேலே
செல்லுத் தவழுந் திருமலையிற்
செல்வா சிற்றில் சிதையேலே.
78✓
மருமா லிகைப்பூங் குழல்மடவார்
வாவி குடைய அவர்துகிலை
வாரிக் குருந்தின் மிசையேறி
மடநாண் விரகம் தலைக்கொண்டு
கருமா நாகஞ் செந்நாகங்
கலந்த தெனஅவ் வனிதையர்கள்
கையால் நிதம்பத் தலம்பொதிந்து
கருத்துந் துகிலு நின்றிரப்பப்
பெருமா யைகள்செய் திடைச்சியர்கள்
பின்னே தொடர வேயிசைத்துப்
பேய்ப்பெண் முலையுண் டுயிர்வாங்கிப்
பெண்க ளிடத்திற் குறும்புசெயுந்
திருமால் மருகன் அலவோநீ
சிறியேம் சிற்றில் சிதையேலே
செல்லுத் தவழுந் திருமலையிற்
செல்வா சிற்றில் சிதையேலே.
79✓
கந்தப் பதுமச் சரவணமும்
கந்த புரியும் கந்தவெற்பும்
கழுநீ ருதிக்குந் திருத்தணியும்
காஞ்சி புரத்தின் மாவடியும்
சொந்தப் புரிஏ ரகத்துடனே
சோலை மலையும் பரங்குன்றும்
துங்கத் திருவா வினன் குடியும்
சோதித் திருவேங் கடமலையும்
சந்தப் பொதியும் குற்றாலத்
தலமும் இலஞ்சித் தமிழ்ப்பதியுந்
தழைக்குங் கதிர்கா மத்தடமுஞ்
சயிலந் தோறும் விளையாடிச்
செந்திற் பதியும் புரந்தபிரான்
சிறியேஞ் சிற்றில் சிதையேலே
செல்லுத் தவழுந் திருமலையிற்
செல்வா சிற்றில் சிதையேலே
80✓
பொன்னி னிறமாய்ச் சிவந்துமுளை
புறப்பட் டெழுந்து மரகதத்தின்
பொலிவு பெறவே குருத்துவிட்டுப்
பூத நாதன் படைபோல
மன்னு மருங்கிற் கிளைகிளைத்து
வள்ளற் குணத்தோர் செல்வமென
வளர்ந்து தூணி வனப்பிதென
வசியப் பசிய பாம்பிதெனத்
துன்னும் பொதியாக் கதிர்ஈன்று
சூட்ட ரெனவே செம்மாந்து
சொல்லும் அறிஞர் போலருட்பால்
சுரந்து சுரந்து தலைவணங்குஞ்
செந்நெல் வயற்பண் பையம்பதியாய்
சிறியேம் சிற்றில் சிதையேலே
செல்லுத் தவழுந் திருமலையிற்
செல்வா சிற்றில் சிதையேலே.