முருகன் App
திருமுருகாற்றுப்படை
பா. வேலன்
குன்றுதோறாடல்6 / 10
திருமுருகாற்றுப்படை · பா. வேலன்

குன்றுதோறாடல்

34வேல்பிடித்தவன் வெறியாட்டம்✓
இளங்கொடியால் சாதிக்காய் இடைஇடையே தொடுத்திட்டு,
விளங்கியதக் கோலக்காய் விரவிஅமைத் தியைந்திணைத்தே
உளங்கவரும் வனமல்லி, வெண்டாளி உடன்பிணைத்த
துளங்கியகை வேல்பிடித்த கண்ணிமிளிர் தோற்றத்தான்!
35✓
வாசநறுஞ் சந்தனந்தோய் வண்ணநிற மார்பினராய்
நாசசரம் விற்றொழிலின் நாயகராம் வேடரொடும்,
நேசமுறும் குன்றம்வாழ் கிளைஞரொடும் நிறைதேறல்,
ஆசையொடுண் டுவந்துபறை அறையக்கூத் தாடலுற்றான்.
36வண்ண மகளிர்✓
விரல்படவே மலர்ந்த,சுனை விரிந்தமலர்க் கண்ணியொடு
நிரல்படவே புனைந்ததொடை, நெறிந்தகுழல் சடைமுடித்து,
வரம்பிடையே இடைவைத்து மருதடம்ப மலர்க்கொத்தைத்
தரம்படவே முடித்தகுல்லைப் புல்லினொடு சார்திணைந்தே!
37✓
வண்டிமிர்ந்து வந்துண்ணும் வகையினிலே தொடுத்தபெரும்
தண்தளிர்த்தார் கைத்திறனால் சமைத்தவடம் ஆர்த்த அரைக்
கண்,திகழ விசித்தசைய கண்ணொளிரக் களித்தணிந்த
ஒண்திருநீல் மஞ்ஞைநடை ஒக்குமக ளிரொடாடும்.
38மகளிரொடு ஆடும் முருகன்✓
செயக்காழகன் செயமேனியன்
செயலப்பணித் - தளிர்பூண்
வயக்காதினன் கழல்காலினன்
வளைகச்சினன் - முடிமேல்
நயக்கண்ணியன் குழல், கொம்புகள்
நயந்தூதுவன் - இனிதாய்,
வியக்கத்தகு குறும்பல்லியம்
இசைக்குந்திற - விறலோன்!
39✓
தகார்வாகனன் மயில்வாகனன்
தனித்தோன்றுயர் - நெடியோன்,
புகர்நீங்குநன் மணிச்சேவலம்
புனிதக்கொடி - உடையோன்
அகல்தோளினில் தொடிகங்கணம்
அணிந்தேவரும் - அழகோன்!
புகழ்யாழிசை எனஇன்மொழி
புகல்நங்கையர் - நடுவில்.
40✓
பொலிகச்சைகொள் நறுந்தென்இடை
நிலந்தோய்துகில் - புனைந்தோன்
வலிகச்சைகொள் முழவின்தடக்
கரந்தாங்கிய - வணமாய்,
மெலிதோளுடை பிணைமாதரை
விருப்பாய்அணைந் - திருத்தி,
மலைதோறுநின் றினிதாடிடு
மயமானவன் - முருகோன்!