திருமுருகாற்றுப்படை
பா. வேலன்
திருப்பரங்குன்றம்2 / 10
திருமுருகாற்றுப்படை · பா. வேலன்
திருப்பரங்குன்றம்
1உலகவப்ப முருகன் அழகு✓
ஆழிமிசை ஆழியுடை ஆதவனங் - காலை
சூழமிருள் போக்கிஒளி தோன்றுதயம் - போலே,
மாழைமணி செவ்வொளியின் வண்ணமிளிர் - கோலா!
வாழி! கடல் நீலநிற மஞ்ஞையமர் - வேலா!
2முருகன்தகை✓
அற்புடையார் அறியாமை அகற்றுமுரத் தாளன்,
அவுணரைமுற் றழித்தஇடி என்றடர்பேர்க் கையன்,
கற்புடையாள் தெய்வானை தழுவுகின்ற கேள்வன்,
கடல்நீரை முகந்தகரு மேகங்கள் கூடி,
மற்றுடைவாள் வீச்சன்ன மின்னிடித்துப் பெய்ய,
வளர்குளிர்ச்சிக் கானில்விரிந் திருள்செய்க டம்பின்
பொற்புடைமால் வட்டமலர் கொண்டிணைந்த மாலை
புரள்கின்ற வனப்போங்கி ஒளிவீசும் மார்பன்!
3அணிபணிகள் பூண்ட மகளிர்✓
நிவந்தவேய் நிறைந்த வெற்பில் நிரல்மணி சதங்கை பூண்ட,
சிவந்தசீ றடிகள் கொண்ட, திரண்டமென் கால்அ மைந்த,
கவர்ந்தகோ டிடையும், மூங்கிற் கணுபருத் தன்ன தோளும்,
அவிர்ந்தசீர் சாயந் தோய்ந்த ஆடைகள் அணிந்த வாறும்,
4✓
விறன்மணி வடங்கள் கோத்த மேகலை அரையில் மின்ன,
திறன்மணிக் கரங்கொண் டாற்றாத் தென்னுறு நாவ லம்பொன்
நிறைவயங் கிழைய ணிந்த நீள்ஒளி பாய்மெய் யார்தம்
அறல்மய ஈரக் கூந்தல் அவிழ்த்துறச் சகிமார் கோதி.
5மகளிர்க்குத் தோழிமார் அழகு செய்தல்✓
செங்காம்பின் வெட்சிமலர் சீரிதழ்கள் சேர்த்தணைத்தும்
பைங்காம்பின் குவளைமலர் பட்டிதழ்கள் கிள்ளிவைத்தும்
தங்கநகை திருவுத்தி வலம்புரியும் தலைச்சூட்டி
பொங்குகுறா மீன்வாய்ப்பூண் பொட்டுநுதல் மிசைபடிய,
6✓
முடித்தபெருங் கொண்டையினில்
முகிழ்த்தசண் பகஞ்சொருகிப்
பிடித்தமலர் மருதிணரால்
பேரழகாய்ப் புனைந்தட்டி
எடுத்தசெய அரும்பிணைந்த
எழில்பிணையல் வளைத்தார்த்தும்
வடிப்பமவிர் பிண்டிதளிர்
மணிச்செவிநின் றுரத்தசைய,
7வேறு✓
தாங்கிய வைரம் பாய்ந்த சந்தனக் கட்டை தேய்த்தத்
தேங்கமழ் கலவை கொண்டு தெய்வந மகளிர் தம்மின்
கோங்கின தரும்பை யொக்கும் குவிந்திள முலைமீ திட்டு
வேங்கைமென் மலர்நுண் தாது மேலப்பி அழகு செய்தார்.
8மகளிர் விளையாட்டு✓
பயந்தரு அணங்கு மாதர் விளாத்தளிர் பறித்தோச் சாடிச்
செயந்தரு வீரக் கோழி திகழ்கொடி நீடு வாழ்க!
நயந்தென வாழ்த்தொ லிக்கும் நாதங்கள் மலைக ளெல்லாம்
உயர்ந்தெதி ரொலிக்கக் கூத்து உளங்கிளர்ந் தாடும் சோலை!
9நெடுவேலன் செயல்✓
மந்தி ஏற ஒண்ணாத
உயர்ந்த மரங்கள் மலைகளிலே,
மந்தி மொய்க்காத் தீவண்ண
மலர்செங் காந்தள் தலைமாலை,
சிந்தை மகிழ அணிந்தவனாய்,
திண்மைப் பாறைப் பனிக்கடலுள்,
சிந்தை அஞ்சப் புக்கசூரன்
சிதையத் தடிந்த நெடுவேலன்!
10பேயாட்டம்✓
வறண்டு காய்ந்த தலைமயிரும்
வரிசைக் கடங்காக் கொடும்பல்லும்,
திறந்த, நாறும் பேழ்வாயும்,
செழுமைப் பசுங்கண், சுழல்விழியும்,
செறிந்த அச்சம் தருநோக்கும்,
செவிதூங் கரவம், கூகைஅலை
விறைந்த, பெரிய கொங்கைகளும்
விரிந்த வயிறுங் கொள்பேயாள்!
11✓
வெருவத் தக்க நடையின்று
விரலின் கூர்மை நகத்தால்,கண்
திருகித் தோண்டித் தின்றதினால்,
தீரா நாற்றக் கருந்தலையை,
மெருகு வளையல் அணிகையால்
மேலே ஏந்தி, நிணம்தின்வாய்,
செருவைப் பாடித் தோளாட்டித்
திண்கை முடக்கி அடித்தாடும்!
12அவுணனை அழித்த சேயோன்✓
இருவகை உருவில் தோன்றும் ஒருபெரும் யாக்கை சூரன்
வெருவிட நெருங்கிச் சென்று விறலினை அழியச் செய்வான்
மருமலர் இணர்கீழ் நோக்கும் மாமரத் தவுணன் தன்னைப்
பெரும்புகழ் சேரக் கொய்த பிறங்கிய ஒளிவேல் சேயோன்!
13வேண்டுதல் நிறைவேறும்✓
செவ்விய தாள்வ ணங்கும் திறந்த அன் பெழுச்சி கொண்டும்,
ஒவ்விய அறப்பண் போடும் உவந்துறை இடங்கள் தோறும்,
திவ்விய மாய்ப்போய் வேண்டின் திண்ணம்நின் விருப்பம் கூடும்!
எவ்வமின் றின்னே துய்ப்பாய் இனியநல் வினைஇன் பெல்லாம்!
14திருப்பரங்குன்றின் அழகிடம்!✓
செறுநரை அழைக்கும் செருக்கொடி பறக்கும்
பந்தொடு பாவையும் தொங்கும்!
தறுகண்மை அற்ற செருநர்பொ ராத
தகைமையின் காண்தரும் வாயில்!
நிறைதிரு மங்கை நிலையுற வைக,
நேர்மையின் வாணிபத் தெருக்கள்,
குறைவற நெடிய மாடங்கள் நிறைந்த
குளிர்பொழில் மதுரையின் மேற்கே!
15✓
பொதும்பரின் பழனச் சேற்றிடை முளைத்துப்
பூத்ததண் டாமரை தோன்ற,
விரும்பிய அரிகள் மொய்த்துற இராக்கண்
டம்புசம் குவிந்திடத், தூங்கி,
மிதம்விடி காலைப் பரிதிதொட் டவிழ்ப்ப,
விழித்தெழல் எனஅவை பறந்து,
ததும்பிய நெய்தல் மலர்மிசை ஆர்க்கும்
தனிப்பரங் குன்றமர் முருகோன்!