திருமுருகாற்றுப்படை
பா. வேலன்
முருகப்பெருமானுக்கு நூலாபிஷேகம்8 / 10
திருமுருகாற்றுப்படை · பா. வேலன்
முருகப்பெருமானுக்கு நூலாபிஷேகம்
1அருள் முருகன்✓
கார்மலிந்துயர் தேன்பொருள்தினை
கனிவளந்தரு - குறிஞ்சிவாழ்,
ஏர்மலிந்தலர் தாதவிழ்தொடை
ஏந்துரத்திலங் - கிறைவனே!
கூர்வலப்படை ஆணவத்தலை
கொய்துதாங்கெறும் - குமரனே!
ஆர்வலர்தொழு தர்ச்சனைசெய
அன்பினால்அருள் - முருகனே!
2✓
பெம்மான்சிவன் புதல்வன்பிறங் கதிகன்குகப் - பெருமான்,
அம்மான்எழில் அரிநாரணன் அவனின்திற - மருமான்
செம்மான்அருங் கொடிவள்ளிகண் செறிந்தோன் அருள் நிறைந்தோன்
அம்மா!இவன் அருளென்பதை அடையார்உயல் - அடையார்!
3ஞானவேல்✓
முருகன்திரு கரவேற்கிரு முதன்மைத்தொழில் - உளவாம்!
ஒருவந்தனக் குறுமும்மலம் ஒறுக்கும் அருட்-செயலாம்,
பெருமம்மரை அறுத்தேபெரு ஞானந்தரும் - செயலாம்!
அருமைத்தனிச் சுடர்வேலதன் அறனோச்சிடும் - அரசாம்!
4மறவேல்! திறவேல்! கரவேல்! அறவேல்!✓
‘மறவேல்’என உரைக்கும்மறம் மடிக்கும்வய - மறவேல்!
‘திறவேல்பழி சொலும்வாய்’எனத் திருத்தும்நயத் - திறவேல்!
‘கரவேல்’எனக் கயமைக்குணம் கடிந்தேதறும் - கரவேல்!
‘அறவேல்’என அனைவர்க்கடி அபயந்தரும் - அறவேல்!
5வேலாயுதா!✓
நாலாயிரம் பேர்ஏத்துவர் நாளாலயம் - முன்னால்,
சீலா!உத வாய்நூபுரத் தாளாம்புசச் - சேயா!
பாலா!இதம் ஆற்றாய்நிறை பாலாபிசெ - கா!வா!
வேலாயுத! கோலாகல வேளாசலத் - தேவா!
6தனிவேல்!✓
சிலைநோக்கினில் உனைநோக்கிடும் சிறுநோக்குநர் - எனினும்
கலைநோக்கினில் திறனோக்கியும் கருத்தோருநர் - எனினும்
பலநோக்கொடு விழிநோக்கிடப் புலனாற்றுநர் - எனினும்
நலநோக்கிவந் தடிதண்டனிட் டவர்க்கேற்றருள் - தனிவேல்!
7இரும்புவேல்! வெள்ளி வேல்! தங்கவேல்! வஜ்ஜிரவேல்!✓
சூழ்ந்துநிற்கும் துன்பம்,தெவ்வர் தூள்செய் கூரி-ரும்புவேல்!
வீழ்த்தநிற்கும் அச்சம்நோய்கள் வேரறுக்கும் - வெள்ளிவேல்!
தாழ்த்தவைக்கும் காமம்கோபம் சாய்த்துயர்த்தும் - தங்கவேல்!
வாழ்த்தவைக்கும் பக்திஅன்பு மல்லல்சேர்க்கும் - வஜ்ரவேல்!
8தண்டபாணி✓
தண்டங்கொண்டு சூரன் கீழ்த்தத் தாங்கிக்கொண்ட - தண்மையால்,
தண்டமாக மஞ்ஞை ஊர்தி, சேவற்கொடியும் - தாங்கினாய்!
தண்டமூன்றிக் கிழவ னாகத் தையல் வேட்ட - சாகசா!
தண்டபாணி தெய்வ மெங்கள் சாதுசெட்டி - ஆண்டியே!
9வேலையா!✓
வேலைமிசை காலைக்கதிர் அன்ன குகன் - காணாய்!
வேலையென வேள்புகழின் வேறெதுகொல்? - ஓதாய்!
வேலையனின் தாளிணைவி ழைந்துகைவ - ணங்காய்!
வேலைபொழு தென்பதெது வாழ்விலுய - வேண்டாய்!
10கதிர்வேல்✓
மூதண்டப் புவனங்கள் முழுதாளும் - முதல்வா!
பேர்தண்டம் கரத்தீந்த பெருமாட்டி - புதல்வா!
சாதண்டக் கதிபோதும் தகைவாழ்வு - தருவேல்!
வேதண்ட மெனுமுள்ள மிசையாடும் - கதிர்வேல்!
11ஞானவேல்✓
விரைவாக எம்முன்னர் விரும்போடி - வருக
நிரைவாக நும்முன்னர் நின்றேங்கி - உருக
திருஞான வேல்ஓச்சி சிறுநெஞ்சம் - தெறுக!
கரைஏற வைத்தெம்மைக் காத்தோம்பு - முருகா!
12வஜ்ஜிரவேல்!✓
ஆதிசுயம் பானபடை - வஜ்ரவேல்!
ஆற்றலொடு ஆக்கமுடை - வஜ்ரவேல்
சோதிமய மானஅயில் - வஜ்ரவேல்
சுந்தரசிங் காரஒயில் - வஜ்ரவேல்
நீதிவடி வானகலம் - வஜ்ரவேல்
நேர்மைவழி காட்டுநலம் - வஜ்ரவேல்
நாதன்திருக் கையில்திகழ் - வஜ்ரவேல்
நாடிநமைக் காக்கவரும் - வஜ்ரவேல்!
13✓
வந்தனைகள் செய்பவரை - வாழ்த்துவேல்
மந்திரங்கள் ஓதவருள் - வஜ்ரவேல்!
நிந்தனைகள் ஏசுவரை - வீழ்த்துவேல்
நீசகுண நாசம்புரி - வஜ்ரவேல்
சிந்தனையர் ஞானக்கடல் - ஆழ்த்துவேல்
சீர்த்தசெயல் நேர்த்திதரு - வஜ்ரவேல்
கந்தனிடம் தண்டனிடக் - காக்குவேல்
காசினியில் வாழ்வுதரு - வஜ்ரவேல்!
14✓
தேவர்வசு ஏத்தவருள் - உம்பர்வேல்
தெவ்வரவர் கொட்டமத - டக்கும்வேல்
மேவிஇந்தி ராதிசுரர் - மீட்டவேல்
வெய்யஅசு ராதிகணம் - வீட்டவேல்
மூவர்தொழு மூர்த்திகுகன் - மூலவேல்!
மொய்ம்மையருட் கீர்த்திபுகல் - வஜ்ரவேல்!
காவலிருந் தோம்புதனிக் - காவல்வேல்!
கைதொழுது போற்றிடுவர் - கோவைவேல்!
15இசையோன்!✓
அரவணி பவனவன் திருமகன்
அறுமுகன் - ஒளியோனே!
வரமணிப் படையினன் வரமருட்
கொடை யினன் - உடையோனே!
சிரம்வணங் கடிதொழச் செழுமைகள்
அளிப்பவன் - இறையோனே!
சரவண பவனிவன் சரிகம
பதநிச - இசையோனே!
16முருகா! அருள்வாய்!✓
தொன்றுதொட்டு மாற்றமின்றித் தோன்றுகின்ற - இளைஞனாய்!
நன்றியற்கை குன்றலின்றி நாறுகின்ற - மனத்தனாய்!
என்றுமுள்ள பொன்றலின்றி ஈருகின்ற - அழகனாய்!
நின்றியங்கும் தெய்வத்தன்மை, நீழல்செய்யும் - முருகையா!
17✓
சீர்த்தியரயும் உம்பர்வல்லி தெய்வயானை - நேயனே!
கீர்த்திமேவும் இம்பர்வள்ளி கேண்மைகொள்காங் - கேயனே!
மூர்த்தியாக வந்துகாக்கும் முத்தன்சக்தி - சேயனே!
கார்த்திகேய பாலதண்ட பாணிகதிரின் - தேயனே!
18✓
மருளுகின்ற உள்ளங்கொண்டு மாளுகின்ற - பொய்யனேன்!
இருளுகின்ற உள்ளஞ்சொல்லும் ஈனச்செய்கை - கையனேன்!
அருளுகின்ற உள்ளங்கொண்டு ஆதரிக்க - வருகையா!
தெருளுகின்ற உள்ளம்அருளித் தெய்வக்காட்சி - தருகையா!
19வேறு✓
முந்திவலம் வந்திடவும் முன்னவன்கண் - முன்னோன்,
தந்தபழம் கண்டுசினம் கொண்டுதனி - சென்றோர்,
சொந்ததலம் நின்றுகொடு தோல்விகெட - வென்றோய்!
மந்தமதி நல்கிகதி வந்தருளும் - கந்தா!
20✓
ஆறுபடை வீடுதொறும் ஆடிவரும் - பாலா!
வீறுமதி ஒளவை, யயன், வெண்மையழி - சீலா!
மாறுமனம் வேறசெயல் வல்லவுணர் - காலா!
ஊறுதரு ஆணவமொ ழித்திடுவி - சாகா!
21✓
அப்புதலை அப்பனிடம் அப்பொருளின் - உண்மை,
செப்புதலை மேற்கொடு,மை தீர்த்தகுரு - வையா!
இப்புவியும் அப்புவியும் எப்புவியும் - வாழ்த்த
அற்புதனல் பொற்புடைய அரிவைமண - வாளா!
22✓
வீரமருள் விள்ளுமுரு காற்றுப்படை - சொன்னோன்
கீரன்பிணி கேட்டிடரை நீக்கியருள் - தந்தாய்!
சூரன்உடல் கீழ்த்திமயில், சேவற்கொடி - கொண்டோய்!
ஈரமதை ஏழைமிசை ஈந்தருளும் - குமரா!
23✓
காதலுனை மேவஅடு காமமறு - வித்து,
மேதகுநின் நற்கருணை மேன்மைதிறம் - பாடி,
ஓதுமறை வேதமதை ஓதருண - கிரியை
தீதகலும் பொன்னடிகள் சேர்த்தபெரு - மாளே!
24✓
கந்தமுடை காமர்மலர் சாத்திமகிழ் - வோர்க்கும்,
பந்தமிக உண்ணெகிழ்ப் பாதம்பணி - வோர்க்கும்,
பைந்தமிழின் பாமாலை சாற்றிமகிழ் - வோர்க்கும்
சிந்தைஉவந் துன்றனருட் சித்திதர - வருவாய்!
25செவ்வேளும் செந்தமிழும்✓
செந்தமிழ் போன்றவன் செவ்வேள் - தொல்
தீந்தமிழ் நவ்விய கன்னித்த மிழ்வேள்!
பைந்தமிழ் ஆன்றவன் எல்லே - பக்தர்
பண்ணிய நூல்கள வந்தந்த சொல்லே! (செ)
பத்தொடி ரண்டுகை ஒப்பே - தமிழ்
பனிரெண்டெ முத்துயிர் உள்ளகு றிப்பே!
பத்திரு நான்குமெய் யெழுத்தும் - முருகன்
பன்னிரண் டட்சி,நு தல்விழி நிகர்த்தும் - (செ)
புள்ளிஎன் றாயுதம் ஒன்றே - வேலன்
போர்க்கென ஏந்திய ஆயுத மன்றோ?
மெய்யுயிர் எழுத்துகள் ஈடாய் - கந்தன்
மேவிய வள்ளிதெய் வானைச மேதா! - (செ)
மெல்லினம் இடையும்வல் லினமு - நேர்
‘ம’கரமும் ‘ர’கரமும் ‘க’கரமும் முருகு!
மெல்,இடை என்றுயிர்க் கருளல் - ஆம்
‘வல்லினம்’ வன்மையைச் சாய்த்துயிர்த் தெறுதல்.(செ)
ஆறுமு கங்களின் பண்பாய் - தமிழ்
ஆறுசீர் கொண்டவி ருத்தங்கள் ஒண்பா -(செ)
26✓
கந்தர் அலங்காரம் கந்தர் அனுபூதி நூல்கள் - அவை
சிந்தை தெருளூட்டி மந்தமருள் வீட்டும் வேல்கள்!
கந்தர் கலிவெண்பா கந்தர் திருப்பாடல் நூல்கள் - அவை
உந்தும் நாத்திக நிந்தை தனைவீட்டும் வேல்கள்!
கந்தர் மேல்வகுப்பு கந்தர் அருட்காதை நூல்கள் - அவை
இந்தப் புவிவாழ்வ கந்தை தனைவீட்டும் வேல்கள்!
கந்தர் சரணப்பத் தென்னும் துதிபாடல் நூல்கள் - அவை
பந்த பாசங்கள் முந்தை வினைவீட்டும் வேல்கள்!
27✓
பெரும்புலவன் நக்கீரன் பிழைக்காக - ஏத்த,
பரவுதிரு முருகாற்றுப் படைநூலும் - வேள்சொல்!
அருணகிரி தேன்குழைத்து அள்ளுறிப் - போற்ற
தெருளளிக்கும் திருப்புகழும், அருட்பாவும் - வேள்சொல்!
28✓
செந்தமிழின் சீர்மைஎனச் செவ்விசெறி - வுள்ளோன்
பைந்தமிழின் பான்மையெனப் பாலன்குழை - வுள்ளோன்
தண்டமிழின் நீர்மையெனத் தண்ணருளக் கன்னோன்
தொன்மைத்தமிழ்த் தன்மையெனத் தோற்றநிலை - முன்னோன்.
29✓
தமிழாலே வைதாலும் தாங்கிக்கொள் - இறையோய்!
அமுதான தமிழன்ன அழியாத - அழகோய்!
குமரேசன் தமிழ்போலக் குன்றாத - இளையோய்!
தமிழ்ப்பண்பு மணம்வீசும் தமிழ்த் தெய்வம் - முருகா!