முருகன் App
திருமுருகாற்றுப்படை
பா. வேலன்
பழமுதிர்சோலை7 / 10
திருமுருகாற்றுப்படை · பா. வேலன்

பழமுதிர்சோலை

41பலியிட்டுப் பூசைபோட்டு விழாக்கொண்டாடுதல்✓
தினையோடு பூக்கள் கலந்தாட்டுக் குட்டி
செகுத்தேப டைத்து - வெறியாய்த்,
தனியான கோழிக் கொடிபக்கம் வைத்துத்
தவழ்ந்தாடக் கட்டி - நிறுத்திப்
புனைதோர ணங்கள் பொலிபண்டி கையைப்
புரிஊர்கள் தோறும் - வருவான்,
நனிஆர்வம் லர்தம் புகழ்,வாழ்த்து கேட்டு
நயந்தோடி வந்தங் - கருள்வான்!
42✓
வேற்கொண்டு சுற்றி மறங்கொண்டு சீறி
வெறிகொண்டு துள்ளும் - களத்தும்,
மேற்கொண்டு காட்டில், பொழில்,ஆற்று மேட்டில்,
விரிஆற்றின் நாப்பண் - குளத்தும்,
நாற்சந்தி எங்கும் முச்சந்தி அங்கும்,
கடம்பின் தண்நீழல் - நயந்தே,
ஏற்புள்ள மன்றில் ஆர்அம்ப லத்தும்
எழுநட்டக் கண்ணும் - எழுவான்!
43✓
தலையாகி நின்ற பெருங்கோழி வண்ணக்
கொடியோட மைந்த - தகையாய்,
கலையான நெற்றி அதன்மேலும் நெய்,வெண்,
கடுகப்ப வைத்துக் - கதியாய்,
நலமாய்வெவ் வேறு நிறஆடை பூண்டு
நறுங்கையில் செந்நூல் - விசித்தே,
மலர்தூவி தூய மறைஓதி, ஓதி
வழிபாடு செய்து - தொழுவார்.
44✓
ஆட்டுக்க டாவின் துவர்வண்ணச் சோரி
அதனோடு வெள்ளை - அரிசி
போட்டுக் கலந்து பலியாய்ப்ப டைத்துப்
பொரியைச் சொரிந்து - பரிவாய்,
நாட்டங்க லந்து பசும்மஞ்ச ளோடு
நறுஞ்சந்த னத்தைத் - தெளித்தே,
முட்டக்க ளித்து கணவீர மாலை
முறைதொங்க விட்டு - முடிப்பார்!
45✓
செறிந்தொங்கும் ஓங்கல் இடைவாழும் ஊர்கள்,
‘பசி’வாட்டம், தெய்வும் - பிணியும்
உறல்நீங்கிக் காரின் வளமோங்க வாழ்க
உயர்ந்தென்று வாழ்த்து - வழுத்தி,
நறுந்தூபம் காட்டி மணப்பூக்கள் தூவி
நலிவேகப் பூசை - நடத்திக்
குறிஞ்சிப்பண் பாடி இயங்கள்மு ழங்க,
குரவைக்கூத் தாடி - மகிழ்வார்!
46வேறு✓
அருவியின் ஒலிதன் னோடும் அரியஇன் னியங்கள் ஆர்ப்ப,
வெருவுற ஆட்டுச் சோரி விரவிய தினைப ரப்ப,
மருமலர் தூவத், தெய்வம் மறுப்புநர் அஞ்ச, வேடர்
குறமகள் பறையைக் கொட்டக் குமரனை வரவந் தித்தார்!
47✓
ஆடுவார் கொம்பை ஊதி அருமணி ஒலிக்கச் செய்வார்
பீடுமா புறங்காட் டாத ‘பிணிமுகம்’ வாழ்த்து ஆர்ப்பார்,
நாடுவார் வேண்டி யாங்கு நண்ணுவார்க் காண்டாண் டெங்கும்
கூடுமா றருள்வான் வைகும் குமரனியான் அறிந்த வாறே!
48நக்கீரப் புலவர் வேண்டுகோள்✓
யானவில் இடங்க ளேனும் எந்தமற் றிடங்க ளேனும்
தானெதிர் கண்முன் காணின் தன்முக னமர்ந்து நோக்கி,
மானசம், வாயால் ஏத்தி வாழ்த்துவை! தொழுது கூப்பித்
தேனயத் தாளைச், சென்னி செறிவுற வணங்கு வாயே!
49முருகன் தோற்றம்✓
நீள்பெரும் இமயக் கோட்டில் நீலப்பைஞ் சுனையில் அங்கு,
சூழமைம் பூத்த தொன்றாம் சுடுநெருப் பேந்தி உய்ப்ப,
வாள்அருட் கண்ணார் ஆறு வனிதையர் பெற்ற ஆறு
கேழரு முகங்கள் கொண்ட கேள்வனாய்த் தோன்றும்
செல்வா!
50முருகன் பெருமை✓
ஆலமர் அரன்பு தல்வா! அந்தணர் மறைமு தல்வா!
மால்வரை இமவான் பெற்ற மலைமகள் உமையாள் மைந்தா!
நூல்களுட் பொருள்கு ணாளா! நுண்ணிதின் அறிந்தோர் போற்றும்
வேல்உறு தடக்கை சீலா! வெற்றிசேர் துர்க்கை பாலா!
51✓
கடம்பஒண் மாலை மார்பா! காளிதன் சீர்க்கு ழந்தாய்!
அடும்பகை கூற்றே! வானோர் அடிதொழும் விற்போர் வீரா!
கொடுஞ்சமர்த் தொழிலின் ஒப்பில் கொற்றவா! வெற்றி மள்ளா
மடப்பிடி, வள்ளி, மாந்தம் மனக்கினி தன்பின் கேள்வா!
52✓
ஆண்மையின் சிங்கம் போன்றோய்! அரக்கனாம் கிரௌஞ்சம் கீழ்த்தத்
தோண்மையின் குன்றா வண்மை சூழ்மலைக் குறிஞ்சிக் கோவே!
கேண்மையின் பல்லோர் போற்றும் கீர்த்திநன் மொழியின் ஐயே!
ஏண்மைதொன் மரபில் வந்த இனியபேர் ‘முருகா!’ என்கோ?
53✓
விழைவர்க்கு விழைந்த வாறு வேண்டருள் தரும்பே ராளா!
குழைவர்க்குக் குழைந்தவாறு கொடுத்தருள் பொற்பூண் சேயே
மழவர்தம் போர்க்க லந்த மார்பணைத் தளிக்கும் வள்ளால்!
விழுமியர் பல்லோர் ஏத்தும் விழுப்பெயர் ‘வேலா’ என்கோ!
54✓
‘‘சூரபன் மன்தன் சார்ந்த தொல்குலம் அறத்த டிந்த
வீரவன் மொய்ம்பின் மல்ல! வீறுபோர்த் தொழிலில் வல்ல!
தீரவிண் தலைவா! என்கோ!’’ எனத்திறம் செப்ப ஒல்லேன்,
சீரளந் துரைக்க, மற்றும் செகத்துமன் னுயிர்கட் கொல்லா!
55✓
நன்னய விழாக்க ளத்தில் கூளியர் நலமாய்த் தோன்றி,
‘‘நின்னொடு நிகர்த்தார் இல்லா நிறைபுல வோய்!என் றோதி,
இன்னவன் இரங்கத் தக்க இரவலன் நயந்து வந்தோர்க்
கின்னருள் நல்காய் வேல!’’ என்றருள் வேண்டிக் கொள்வார்!
56வேறு✓
இவ்வளவில் நல்லனவும் இனியனவும்
மீக்கூறி ஏத்து ரைப்ப,
அவ்வளவில் தெய்வச்சீர் அமைந்துநெடு
துயர்ந்தவான் அளாவி நின்ற
திவ்வியவல் வடிவத்தால் தியங்கச்சம்
உறாவண்ணம் தெய்வத் தோற்றச்
செவ்வியபேர் ஒளியடக்கிச் சீரிளமை
நலங்காட்டித் திகழா நின்றே!
57✓
‘‘அஞ்சற்க! அளிப்பேற்க! அருள்வேண்டி
இங்கணைந்த உன்றன் அன்பு
நெஞ்சத்தை அறிவேன்!’’என் றுனக்குவந்து
நேர்ந்துரைப்பான், நீல்நீர் சூழும்
எஞ்சியமண் உலகத்தில் ஏற்றஒழு
கனாய்மிளிர, எய்தற் கொண்ணா
விஞ்சியஒண் பரிசிலிடும் விழுமியோன்
யாவனெனின் விளம்பக் கேண்மின்!
58பழமுதிர் சோலையில் பாயும் அருவி✓
நீரின்மேல் கொடிகள் என்ன நிமிர்ந்தபல் பொருள்கொண் டேகும்,
ஆரம்வேர் பெயர்ந்து ருட்டி, அகில்பல சுமந்து, சாய்ந்த
வேரல்புங் கிளைநொ றுங்க, வெறிஇறால் சிதைய, வாழைத்
தாரொடு சாயத், தென்னைத் தலைகுலை உதிரப் பாயும்!
59✓
ஆசினிச் சுளைக லக்க, ஆர்மிலா கலர்கொத் துக்க,
மூசுவண் டொடுபு நீந்த, மோட்டுக்கல் புரளப் பேர்த்து,
மாசிலம் புன்னை வாச மலரெலாம் சிதறத், தந்தம்
தேசுடை மணி,பொன் தூசி செறிந்துகங் ஒதுக்கிப் பாயும்!
60✓
ஊகமொ டாங்கு ரங்கும் அணைக்கமெய் உதற வாடும்,
தோகையொ ருஞ்சேர் பெட்டை, கோழிகள் துளங்கி ஓட,
மேகமைக் கரடி, பன்றி மிரண்டிவை குகையொ டுங்க,
நாகமும், பிடியும் வாடைக் காற்றினால் நடுங்கப் பாயும்!
61✓
செழுமிய கருங்கொம் புள்ள திறல்பசு, காளை கத்த,
கெழுமிய மலையி னூற்றில் கிளம்புநீ ரோடை பாய்ந்து,
விழுமிய அருவி யாகி, விரிந்தநீர் வீழ்ச்சி யாக,
இழுமென இழிந்து பாயும் எழில்பழ முதிர்தண் சோலை!
62வேறு✓
இப்பரி சாய்ஒளிர் இன்னறுஞ் சோலைக்
கப்பரி சாற்றுப் படுத்தஅ றைந்தேன்!
செப்பரி தாகிய செல்வக்கு மாரன்
ஒப்பரி யோனம் மலைகிழ வோனே!