முருகன் App
திருமுருகாற்றுப்படை
பா. வேலன்
திருவாவினன்குடி ( பழனி )4 / 10
திருமுருகாற்றுப்படை · பா. வேலன்

திருவாவினன்குடி ( பழனி )

22முருக னன்பர் நிலை✓
மரவுரி தைத்த உடுக்கையர், சீர்த்த
வலம்புரி சங்கென வெள்ளை
நரைமயிர் கொண்ட முடியினர், மாசில்
நல்வடி வுருவினர், மான்தோல்
உரிவையைப் போர்த்த என்புடை கூட்டின்
உடலினர், பல்பகல் உண்ணா
விரதங்கள் நோற்போர் முரணுடை காமம்,
வெகுளியும் நீக்கிய மனத்தர்!
23✓
கற்றவர்க் கறியா அறிவினர், கற்றோர்
தமக்கொரு தலைமையர், அவாவும்
முற்றிய சினமும், முற்றிலும் அவித்த
முத்தர்கள், பருவரல் அறியா
நற்றவத் தாய இயல்பினர், வெறுப்பும்,
நயத்தலும் நீக்கிய முனிவர்,
உற்றஉள் அன்பில் உவப்பொடு நாடி
உடன்தொழ முன்னுறச் செல்வார்!
24கந்தருவர் யாழ்மீட்டல்✓
புகைமுகந் தன்ன அழுக்கறு தூய
பூந்துகில் ஆடையும் தரித்தும்
முகைமுகிழ் பூவால் முடிந்தகொங் கலங்கல்
மோகன மார்பினில் தவழ,
தகையுறு செவியால் சுரஇசை அளந்து,
தக்கவார்க் கட்டிய யாழில்,
வகையுறப் பயின்ற நயனுடை மனத்தின்,
மென்மொழி இயல்பினர் மீட்ட.
25கந்தருவ மகளிரொடு ஆடல்பாடல்✓
நோய்நொடி எதிர்க்கும் ஆற்றல்கொள் உடலர்,
நுண்மையின் மாந்தளிர் நிறத்தார்,
ஆய்தொறும் பொன்னின் அவிர்ஒளி யன்ன
அமைந்திடு தேமலின் அழகர்,
ஏயிழை யாம்மின் மேகலை அணிந்து
இவர்ந்திழிந் தசைவுறு அல்குல்,
ஆயமென் மேனி மகளிரொ டிணையாய்
ஆடியும் பாடியும் பொலிவார்!
26திருமால்✓
நஞ்சும், துளையும் கொண்டவெண்பல்,
நடுங்கச் சீறும் அனல்மூச்சு,
விஞ்சு படங்கொள் நாகத்தை
வீயப் புடைக்கும் வரிவளைந்த
மிஞ்சு திறலின் சிறகுடைய
கருடன் விளங்கும் நீள்கொடிகொள்
கஞ்ச மலரின் செங்கணுடை,
காக்கும் தொழிலோன் திருமாலும்!
27முக்கண்ணன்✓
வெள்ளை மாட்டை வெல்களத்தில்
உயர்த்திப் பிடித்த விறல்தோளும்,
கள்ளின் மலர்சூ டுமையவள்தான்
கருதிக் கொண்ட இடப்பாலும்
ஒள்ளும் இமையா முக்கண்ணும்,
உடையோன் வல்ல ஒன்னலர்தம்
வள்ள மூன்று மதில்களையும்
அழித்த வலிகொள் அரனாரும்!
28தேவேந்திரன்✓
பத்து நூறு கண்ணுடையான்,
பலநல் வேள்வி முடித்ததினால்,
மெத்த வீறும் விறலுடையான்!
விளங்கு நான்கு கொம்புடைய
மத்த கமசை நடையோடு
மாக்கை தாழ ஆடிவரும்
அத்திப் பிடரில் அமர்ந்தவனாய்
அழகோ டுலாவு புரந்தரனும்.
29நான்முகனைத் தவிர்த்தல்✓
நான்முகன், திருமால், உருத்திரன், போகி,
நாற்பெரு தெய்வங்கள் தம்மின்
வான்முகம் நிவர்ந்த நகரங்கள் நிலைப்ப,
வையகம் காத்திடும் கொள்கை
தான்மிகக் கொண்டு, நான்முகன் தவிர்த்து
மூவரும் தலைவராய் உகந்து,
மேன்மைய துலகில் மேவினர், படைக்கும்
வினைத்தொழில் அவன்வயம் விட்டே!
30முருகனிடம் குறைஇரக்கப் போதல்✓
வடுவிலா அறிவு மலர்ந்தமுப் பத்து
மூவரும் பதினெண்மர் தாமும்,
உடுவெனத் தோற்றம் உடையவ ராயும்
உவரிநின் றெழுந்தகாற் றென்னக்
கடுவிரை வாகச் செல்பவ ராயும்
காற்றொடு தீயெழுந் தன்ன
அடலின ராயும் அழல்உற இடித்த
இடியெனும் குரலின ராயும்.
31✓
மிகையவை பொறுக்க, குறையவை இரக்க,
வேண்டிவந் தடியிணை தொழவே,
வகையொடு சூழ்ந்து வான்வழி போந்து
விரைவொடு காணுதற் பொருட்டே,
நகைமுகத் தெய்வக் கற்பினள், தேவ
நாரிய ளோடணைந் துள்ளம்
மகிழ்வுறத் திருவா வினன்குடி சின்னாள்
வந்துறை நிறைதரு முருகோன்!