முருகன் App
வள்ளிமலை திருமுருகன் பிள்ளைத்தமிழ்
புலவர் ச. சுந்தரேசன்
அம்புலிப்பருவம்7 / 10
வள்ளிமலை திருமுருகன் பிள்ளைத்தமிழ் · புலவர் ச. சுந்தரேசன்

அம்புலிப்பருவம்

70✓
பொங்குதிரை தவழாழி மீதெழுந் துலவலால்
புரமெரித் தான்கடர்க்கட்
பொறியென விளங்கலால் நெறியினை வகுத்திந்தப்
புவனத்தை வலம்வருதலால்
செங்குமுத வாய்மடார் திக்கொடு கிடப்பிறந்து
செறியிருள் விலக்குவதனால்
திகழுயிர் தமையுணர்ந் தின்புற ஒளியினைத்
திசையெலாம் பரப்பிவரலால்
தங்கலைக் காதலித் தவுளரம் களிப்புறச்
சார்ந்தமுத மழைபொழிலால்
தனைவிழைந் தவர்க்கினிது தண்ணளி புரத்தலால்
தண்மதி குகனிகர்த்தாய்
பண்ணியை சந்தமும் பாடினார்க் கின்பமும்
பதியுணர் மெய்ஞ்ஞானமும்
பத்தியும் தருதிருப் புகழினைப் பாடிடப்
பரிந்துவந் தருணகிரியின்
புண்ணியை குட்டநோய் போக்கிமெய் யெழிலருட்
புரிந்ததை யறிவையலையோ
புத்திவரு கிலாச்சிறு போதினில் யாவரும்
போற்றிடும் ஞானகுருவாய்ப்
பண்ணிய தவத்தினால் வள்ளலார் முன்தோன்றிப்
பலகலையு மருளினான்காண்
பவப்பிணி தீவினைக ளகன்றுநற் கலையெலாம்
பதந்தொழப் பெறுவையின்னே
எண்ணிவந் தருள்பெற அழைத்தவிக் குழவியொடும்
அம்புலீ யாடவாவே
அண்டரும் பணிசெயும் வள்ளிமலை முருகனொடும்
அம்புலீ யாடவாவே.
71✓
மிக்கபெரு வேள்வியில் தொக்கமரர் கூடவையில்
மேன்மைகெட் டிழியவன்று
மீளாத வாறுதக் கன்தந்த சாபமே
மீண்டிட வுனையழைத்தான்
எக்கணமும் முருகனே என்றுவிழி நீர்சிந்தி
ஏத்திடும் குருகமையின்
இன்குரல் கேட்டுமயில் மீதேறி யருள்செய
எளிவந்த எங்கள்பெம்மான்
நக்கீர னைப்பெரும் பூதத்தின் சிறைமீட்ட
நாயகன் நின்னையருள
நாடினன் ஆடிட நயந்தனன் இக்கணம்
நல்லமய மோடிவருக
அக்ககமு மாயதன் பொருளுமாம் குழவியொடும்
அம்புலீ யாடவாவே
அண்டரும் பணிசெயும் வள்ளிமலை முருகனொடும்
அம்புலீ யாடவாவே.
72✓
கூற்றெனச் சினந்தனல் கொப்புளிக் கக்கடுகிக்
குன்றினைப் பிளந்துபூதக்
குடரினைச் சரித்துதிரக் குளத்தினின் குதித்தெழு
கூரிலைக் கதிர்வேலனின்
சீற்றமே மூண்டுகண் சிவப்பேறு முன்னரே
திங்களே வரவுய்தியால்
திகழுயிர் படைக்குமோர் செருக்கினால் மதியாத
திசைமுகன் தலைகள்நான்கும்
ஏற்றிடும் குட்டினை இருகால் விலங்கினை
இருண்மிகு சிறைப்பாட்டினை
எண்ணிலை யாயினுனை ஏற்பவர் யாருளர்
இளையனென் றிருந்திடாதே
ஆற்றணி சடையனார் அருளுமிக் குழவியொடும்
அம்புலீ யாடவாவே
அண்டரும் பணிசெயும் வள்ளிமலை முருகனொடும்
அம்புலீ யாடவாவே.
73✓
ஒருவிர லசைத்திடின் உடுத்திரள் குலைந்திடும்
ஒருவிழி சினந்துநோக்கின்
ஊழியே விளைந்திடும் ஒருதோள் உயர்த்திடின்
ஊறுசெய் அவுணர்மாய்வர்
திருவடி பெயர்த்திடின் அண்டபகி ரண்டமும்
திரிபுற நிலைமாறிடும்
திங்களே சிறுவனெனத் தாமதித் திடேலினிச்
செப்புதற் கியாதுமில்லை
கருவுறு முயிர்முதல் ககனநாட் டவர்வரை
கதிபெறக் காப்பனிவனே
கழலொலித் திடஓடி விளையாட நினைத்துனைக்
கரமலர் காட்டிநின்றான்
அருவுரு வாகியெம் மகத்துமறை குழவியொடும்
அம்புலீ யாடவாவே
அண்டரும் பணிசெயும் வள்ளிமலை முருகனொடும்
அம்புலீ யாடவாவே.
74✓
காலனை யழித்தவன் காமனை யெரித்தவன்
கருதாது வேள்விசெய்த
கன்மனத் தக்கனின் புன்மையை யொழித்தவன்
கபாலமே யாரமுடையான்
சூலமுடை யானிடம் வரம்மிகப் பெற்றவன்
சூரனின் ஆணவத்தைச்
சூழ்ச்சியைக் குலத்தினை யறுத்தவன் அச்சிவன்
சுடரிலே வந்தமுருகன்
வேலினை விடுத்தனன் என்றுணர்ந் தாயினும்
விளையாட வருகநீயே
வெறியாடு குறவரின் தலைவனும் மருகனும்
வீரனு மாவனிவனே
ஆலமர் கடவுளின் அகமகிழ் குழவியொடும்
அம்புலீ யாடவாவே
அண்டரும் பணிசெயும் வள்ளிமலை முருகனொடும்
அம்புலீ யாடவாவே.