வள்ளிமலை திருமுருகன் பிள்ளைத்தமிழ்
புலவர் ச. சுந்தரேசன்
காப்புப்பருவம்2 / 10
வள்ளிமலை திருமுருகன் பிள்ளைத்தமிழ் · புலவர் ச. சுந்தரேசன்
காப்புப்பருவம்
4திருமால்✓
மண்ணினை யுண்டவன் மண்ணினைக் கொண்டவன்
மண்மகள் தழுவுமார்பன்
மன்னுயி ரனைத்தையும் காப்பவன் மறையவன்
மகிழ்மல ருந்தியுடையான்
கண்ணனைக் கடிமலர் துளபமார் தாரினன்
கார்முகில் வண்ணமுடையான்
களிற்றினைக் காத்தருள் செய்குவான் தாமரைக்
கண்ணனின் கழல்பணிகுவாம்
பண்ணொடு மிசையினைப் பரப்பிவண் டார்த்திடப்
பனிமலர்ச் சோலைசூழும்
பகலவன் வலம்வரு முயர்வள்ளி மலையிடைப்
பரண்மிசை யேறிநின்றே
எண்ணரும் பைந்தமிழ் ஆலோலம் பாடிடும்
என்னை வள்ளியம்மை
இன்குரல் கேட்டிடத் தேடிவரு குமரனை
ஏந்தலைக் காக்கவென்றே.
5பரசிவம் வேறு✓
பவமெனு முவரியிற் படுமிகு முயிர்த்திரள்
பதமிறப் பதமருள்வான்
பணியணி திசைப்புயன் பரையொரு பகுதிகொள்
பனிசடைப் பிறைமுடியான்
சிவகண மொடுபல வமரரு முனிவரும்
சிவசிவ எனப்பரவிச்
சிரமிரு கரங்குவித் துருகிட அருள்பர
சிவனடி மலர்பணிவாம்
தவமிலை யெனினுமோர் தரம்சர வணபவ
தளிரடி சரணமெனில்
தகுதகு வெனநட மிடவரு மயின்மிசை
தயவருள் தரவருவான்
குவடுகள் தனில்தினைப் புனமொரு பொருட்டெனக்
குதிதரு மெழிற்பிணையாம்
குறமகள் தருநற வமுதினை நயந்திடு
குமரனைப் புரந்திடவே.
6ஆதிசக்தி வேறு✓
மதுமொழி குமுதம் மதியொளி முல்லை
மயலறு குவளையுமே
மணமிகு பங்கய மலருடன் தோன்றும்
மரகதக் கொடியனையாள்
சதுர்மறை யறிவரி தெனவுள மாழ்கு
சங்கரி யிமையளவில்
சகலமு மொருகரு வினில்தரு மாதி
சக்தியின் தாள்பணிவாம்
முதுமையு மிளமையும் புவியினி லென்றும்
முறையெனக் காட்டிடவே
முளரிகள் துயருற குறமக ளாமெம்
முதல்வியைத் தேடிடுவான்
இதுவது இவனவ னெனற்கரு மூல
இறையவ னடியவரின்
இதயமென் மலர்மிசை யிருந்தருள் வேலன்
இளையனைக் காத்திடவே.
7மகா கணபதி✓
பிரணவ மாகிப் பெரியனு மாகிப்
பேரருளின்
பிடியென இமயம் உலவுமை மகிழும்
பெருமானே
கரணமு முளமும் கரைந்திட அருள்மா
கணபதியே
கணமுனை மறவா திருகரங் கூப்பிக்
கழல்பணிவாம்
அரணமும் வரையு மலறிடத் துகள்செய்
அயில்வேலும்
அகிலமும் நொடியில் வலம்வரக் குதிசெய்
அணிமயிலும்.
சரணமென் சூரன் தவமது காட்டும்
தனிச்சேவல்
தமதெனக் கொள்ளுங் குமரனைக் காத்துத்
தயவருளே.
8வேல்✓
விடையே றுடையான் செஞ்சடையான்
விளங்கு மெட்டுப் பணைத்தோண்மேல்
விழுந்தும் எழுந்தும் விளையாடி
விரவும் புனிதத் திருநீற்றி
னிடையே மூழ்கித் தங்கையினி
லிறங்கித் திளைக்குங் குழவியினை
இன்பம் வழங்க வள்ளிமலை
யிருக்கும் வேளைக் காத்திடவே
அடையா ரறியா ருறைகுன்றை
அகத்தி லழுத்து மாணலத்தை
அடியார் துயரைப் பிறவியினை
அவர்தம் வினையை அசுரர்குலப்
படையைச் சூரைப் பற்றழியப்
பகுத்துத் துளைத்துச் சிதைத்தழிக்கும்
படையை அன்னை யுமைமகிழ்ந்து
படைக்கும் சக்தி வேல்சரணே.
9மயில்✓
பற்றை யறுத்துப் புலனடக்கிப்
பசியோ டுறக்க மறவிடுத்துப்
பகலு மிரவுந் தமைமறந்து
பதமே விழையத் தவமுயலும்
கற்றைச் சடைகொள் முனிவர்க்குங்
கருத்து ளுணராப் பரம்பொருளைக்
கந்தா என்பார்க் கருள்வழங்கும்
கதிர்வே லவனைக் காத்திடவே
ஒற்றைப் பிறைக்கோட் டிறைக்கெதிரா
உமையோர் பாகன் கனிபெறவே
உலக மனைத்து மொருநொடியில்
ஒலித்தொண் மணியாஞ் சிறைவிரித்து
மற்றை மாழ்கப் பறந்துவந்து
மயலைப் பகையை யழித்துவள்ளி
மலையி லடியா ருளப்பீடம்
மருவும் மயூரம் பணிவோமே.
10நக்கீரர்✓
கண்டு நிகர்க்கும் வண்டமிழின்
கலைகள் ஆய்ந்து கழகத்திற்
கபிலர் பரணர் புகழுநுதற்
கண்ணா ரோடும் வாதிட்டுப்
பண்டு முருகாற் றுப்படையைப்
பரங்குன் றுறையும் பூதமறப்
பாடும் அருளார் நக்கீரர்
பதங்கள் இறைஞ்சிப் பணிந்திடுவோம்
மண்டு மசுரர் படைமுறிய
மறைக ளறியாத் திருவடியான்
மணிகள் கொஞ்ச நடபயின்று
மலர்க்கை வேலை விடுத்தவனை
வண்டி னிசையு மடியவர்கள்
வாழ்த்து மிசையுங் கேட்டுவக்க
வள்ளி மலைவாழ் எம்பெருமான்
வடிவே லவனைக் காத்திடவே.
11அருணகிரிநாதர்✓
அங்கண் நுதலோன் விழிச்சுடரி
லமரர் முனிவர் குலங்காக்க
ஆறு முகமா யவதரித்த
அண்ண லடியார் பவக்கடலை
யிங்குக் கடக்கும் புணையாக
எங்க ளிதயத் தவிசிருக்கு
மினிய தளிர்மௌ மலர்ப்பாதம்
எந்தை முருகன் தனைக்காக்க
கங்கு கரையில் வெள்ளமெனக்
கணக்கில் சந்தத் திருப்புகழைக்
கந்தக் கடவுட் பதஞ்சூட்டிக்
கருணைக் கடலி னமுதருந்திப்
பொங்கு மயல்சேர் நாயேற்கும்
புயல்போ லருளைப் பொழியவரும்
புகழோன் வள்ளல் அருணகிரி
பொற்சே வடியைப் பணிவோமே.
12குமர குருபரர்✓
விண்ணை யிடிக்கும் பலகுன்றும்
விரையும் அண்ட கோடிகளும்
விளங்கு சிறுகைப் பந்தாக
விளையாட் டயர்ந்து தண்ணிமைப்பில்
எண்ணி லுயிர்கள் படைத்தளித்து
மியக்கி மறைத்துத் துடைத்துமகிழ்
எம்மான் வள்ளிப் பொன்மானுக்
கேங்கும் பெம்மான் தனைக்காக்க
மண்ணி லெவர்க்கு மறிவரிய
மாயோன் மருகன் பதத்தருளை
மன்னு மைந்தா மகவையினில்
மடுக்கும் முனிவன் வைகுண்டம்
பண்ணும் தவத்தால் வந்துதித்துப்
பக்திச் சுவைசேர் கலிவெண்பா
பாடும் குமர குருபரனின்
பதங்கள் என்றும் பணிவோமே.
13இராமலிங்க சுவாமிகள்; தண்டபாணி சுவாமிகள்✓
நானெனுஞ் செருக்கறச் சன்மார்க்க நெறியினில்
நானிலத் துயிர்கள்வாழ
நற்றமிழ்த் திருவருட் பாவருள் தேசிகன்
நாயக னிராமலிங்கக்
கோனினைப் பழனிமலைக் குருபர னருளினால்
குலவுபல வண்ண மருளும்
கோமகன் திருப்புகழ் தண்டபா ணிப்பதி
குரைகழல் வணங்கிவாழ்வோம்
தேனமுத மோகுயிலின் கானமழை யோவெனத்
திகைத்திட ஆலோலமே
தினைப்புனங் காத்திசை பொழிந்திடு குறமகள்
திருமொழி கேட்டுமகிழ
வானவர் முனிவரர் யோகியர் சித்தர்கள்
வலம்வந்து வள்ளிமலையில்
வழுத்திட வீற்றிருந் தருள்செயும் ஆறுமுக
வள்ளலைக் காக்கவென்றே.
14குமர குருதாச சுவாமிகள், திருமுருக கிருபானந்தவாரியார் முதலான அடியவர்✓
அற்றவர் போற்றிடும் ஆறுமுகன் காட்சியை
அருந்தவத் தாலடைந்தே
அகமகிழ் குமரகுரு தாசரொடு முருகனின்
அருட்டிறம் பார்பரப்பிப்
பற்றற விடுத்துதிருப் புகழினைப் பாடியும்
பணிபல புரிந்துவாழும்
பக்தர்கிரு பானந்த வாரிமுத லடியவர்
பதமலர் போற்றிசெய்வோம்
கற்றவர் உளமெனும் பொய்கையில் மலர்ந்திடும்
கமலமல ரோன்குருவினைக்
கலகல வெனக்குதித் தாடிவரு மயின்மிசை
கடுகிவரும் இளையவரசை
முற்றிய தினைப்புன வேடருக் கஞ்சியே
முதியனாய் வருவேலனை
முடிவிலா முதல்வனை மூவரும் அறிவரும்
முருகனைக் காக்கவென்றே.