வள்ளிமலை திருமுருகன் பிள்ளைத்தமிழ்
புலவர் ச. சுந்தரேசன்
சப்பாணிப்பருவம்5 / 10
வள்ளிமலை திருமுருகன் பிள்ளைத்தமிழ் · புலவர் ச. சுந்தரேசன்
சப்பாணிப்பருவம்
35✓
சொற்பதங் கடந்தவோர் துரியவெளி நடுநின்று
சுந்தரி கண்டுமகிழச்
சுயம்புவாய் நடமிடும் சோமசுந் தரனுதல்
சுடரிலே தோன்றிவந்து
கற்பகத் தருநிழற் கடவுளொ டவன்மனை
கலங்கியே ஓடியொளியும்
கணித்திடற் கரியபல் லமரரும் மீட்கிலாக்
கடுஞ்சிறை புகுந்துவாட
வெற்பொடு மசுரரைப் பிளந்துயிர் காத்திட
வினையெலா முற்றுமாய
வெங்கார மாமுயி ராங்கார மோய்ந்திட
வேலினை விடுத்தசெல்வ!
தற்பர அற்புதச் சண்முகக் கடவுளே
சப்பாணி கொட்டியருளே
சத்திமலை நின்றருள் தத்துவங் கடந்தவா
சப்பாணி கொட்டியருளே.
36✓
பிரமனுக் குரியன ஒருகோடி யண்டமாம்
பேணுதிரு மாலவற்குப்
பேசரும் ஓராயி ரங்கோடி யண்டமாம்
பித்தனென் றுலகுசொல்லு
அரனவற் கண்டங்கள் கோடானு கோடியாம்
அவற்குமேல் சதாசிவத்கோ
அளவில்பல் கோடியாம் சத்திசத் தர்க்குறும்
அண்டமோ அறையவொண்ணா
பரவெளி யிடையூச லாடுசிற் றணுவெனப்
பகரலா மிவையனைத்தும்
பாலனே எண்குணச் சீலனே நின்னுடற்
படுசிறு துகளென்னலாம்
சரவசரம் பரவவரு சண்முகக் கடவுளே
சப்பாணி கொட்டியருளே
சத்திமலை நின்றருள் தத்துவங் கடந்தவா
சப்பாணி கொட்டியருளே.
37✓
சத்துவக் குணமதாய்ச் சத்தியப் பொருளதாய்ச்
சாந்தவர்க் கருள்புரிவதாய்ச்
சகலவிஞ் ஞானகலர் பிரளயா கலரெனும்
சகலரும் அறிவரியதாய்ப்
புத்தமு தனையதாய்ப் புகலரு நிலையதாய்ப்
புரையிலா மனத்துறைவதாய்ப்
புதுமையாய்ப் பழமையாய் முன்னுமாய்ப் பின்னுமாய்ப்
புந்தியி லுணர்ந்திடாத
சித்தியாய் முத்தியாய் நித்தமோர் நிலையதாய்ச்
சிவனுமாய்ச் சீவனாகிச்
சிந்திக்கும் போதெலாம் தித்திக்கு மின்பமாய்ச்
செழுஞ்சுடர் வடிவமாகிச்
சத்திக்குக் களிதரும் சண்முகக் கடவுளே
சப்பாணி கொட்டியருளே
சத்திமலை நின்றருள் தத்துவங் கடந்தவா
சப்பாணி கொட்டியருளே.
38✓
இருநான்கு திசைவரைகள் குலைந்தவை குலுங்கிட
எண்ணிலுயர் மாமேருவும்
ஏதமுற் றதிரவும் ஈரேழு புவனமும்
எதிரொலி கேட்டுலையவும்
அருநான்கு மறையுணர் முனிவர ரந்தண
ரதிசயித் தடிபரவவும்
அலைகடல் தம்முளே கலங்கவு மடியவ
ரறுமுகற் கழகுகசெய்யும்
பெருநான்கு மூன்றெனும் தளிர்க்கர மசைந்திடப்
பேசருங் கடகஒலியின்
பேரின்ப நாதமே கேட்டன மென்றுளம்
பிடிபடக் கூத்தாடவும்
தருநான்கு நிலைக்குமேல் தவழ்ந்திடுஞ் சண்முகா
சப்பாணி கொட்டியருளே
சத்திமலை நின்றருள் தத்துவங் கடந்தவா
சப்பாணி கொட்டியருளே.
39✓
நசையுறு வினையினால் நலிவுறு முயிர்களை
நாடிவந் தருளவேண்டி
நகையுறச் சிரங்கவிழ்ந் தமணரை யறுத்திட
நாவினால் வாதில்வெல்ல
திசையுறு மிசைமிகு தீந்தமி ழமுதினைச்
செவியினுக் கினிதுவார்க்க
செப்பரும் தவத்தினால் காழியில் தோன்றியெம்
சிந்தையில் நின்றசெல்வ!
அசைவுற வலிக்குமென் றம்மையப் பர்தரும்
ஆடகத் தாளமேந்தும்
அறுமுகக் கடவுளே அணிமலர்க் கைகளால்
அகிலமும் இன்பமுழ்கச்
சசிமகள் கேள்வனே சங்கரி புதல்வனே
சப்பாணி கொட்டியருளே
சத்திமலை நின்றருள் தத்துவங் கடந்தவா
சப்பாணி கொட்டியருளே.
40✓
அமரரி னுலகினை யணிசெயுங் கற்பகத்
தணுகிடச் செல்லுமாபோ
லயராம லுயர்ந்திடு சந்தன மாவர
சகிலுடன் தேக்குவேங்கை
திமிரவளர் கழையெலாம் செறிந்திடு மடவியில்
திரிமனம் போலலைந்தே
தியங்கிடும் குரக்கினம் விறலியென் றாடிடத்
திருமெனப் பாயுமருவி
இமிருமின் முழவென இசைத்திடக் கலைக்குலம்
இருக்குமவை போல்விளங்க
இருஞ்சுனை திகழ்மலர் விளக்கினை நிகர்த்திட
இலங்கிடும் வள்ளிமலையில்
தமரென வேடர்குழ் குறத்தியின் நாயகா
சப்பாணி கொட்டியருளே
சத்திமலை நின்றருள் தத்துவங் கடந்தவா
சப்பாணி கொட்டியருளே.
41✓
அண்ணலே நினதெழில் மாணிக்க முடியொடு
மளவிடற் கருசோதியா
யலர்கதிர் மரகதச் சுட்டியு மசைந்திட
ஐயநின் பன்னிரண்டு
விண்ணவர்க் காணையிடு கரங்களிற் பொற்றொடி
வயிரமணி ஒளிவீசவும்
விளங்குவை சூரியக் குண்டலம் செவிகளில்
விரைந்தொளி பரப்பியாட
கண்ணகன் தடமார்பில் பவளமொடு நித்திலம்
கடம்புடன் நீலமாட
கயற்கணா ளணைத்திடுந் திருவரையில் புட்பகக்
கலையொடு கோமேதகந்
தண்ணொளி பரப்புபொன் னனம்படை யாடிடச்
சப்பாணி கொட்டியருளே
சத்திமலை நின்றருள் தத்துவங் கடந்தவா
சப்பாணி கொட்டியருளே.
42✓
ஆயிரம் பகலினு மேலதாச் சுடரினை
அகிலமெல் லாம்பரப்பி
ஆரிருள் அழித்திடு மொருமுக மடியவ
ரகத்திருள் வினைகளெல்லாம்
போயிட மறுவிலா மதியெனத் திகழொளிப்
போதலர் முகமுமொன்றாம்
புரமெரித் தான்றிருச் செவியினில் பிரணவப்
பொருள்சொலோர் ஞானமுகமே
மாயிரு படைகொடு வருபகை யழித்தமரர்
மாதவரைக் காக்குமுகமும்
மான்மகள் வள்ளியை மணந்திடு முகத்தொடு
மயிலினி லாடுமுகமாத்
தாயினுங் கருணைமிகு சண்முகக் கடவுளே
சப்பாணி கொட்டியருளே
சத்திமலை நின்றருள் தத்துவங் கடந்தவா
சப்பாணி கொட்டியருளே.
43வேறு✓
ஆல மெடுத்தமு தாகப் பருகிய
அரனார் குமரோனே!
ஆல மிசைத்திடு மன்னை குறமக
ளாக மிசைந்தோனே!
ஓல மிடுமர மாதர் பதியொடு
முறைவாழ் வளித்தோனே!
ஓல மிடவரு சூர ருடலற
ஒளிர்வேல் விடுத்தோனே!
நீல இமையவள் சால உவந்திடு
நேயா முருகோனே
நீல மயின்மிசை ஞாலம் வலம்வரு
நிமலா காங்கேயா
கோல வடிவினைக் காண அருள்வாய்
கொட்டுக சப்பாணி
கொள்ளை கொளுமெழில் வள்ளி மணாளா
கொட்டுக சப்பாணி.
44✓
நாதர் முடியினை நாடும் பணவிரி
நாகந் துயருறவே
நாளும் வணமிகு தோகை மிசைவரு
நாத முருகேசா
ஏத முறுமடி யாரின் மனவிருள்
என்றும் பொன்றிடவே
ஏக னநேக னெனவரு சுடரா
யிதய மமர்வோனே!
சீத மதிச்சடை தாதை வரப்புயம்
திளைத்து விளையாடும்
தெய்வப் பிடிமகிழ் செய்யக் களிறெனும்
தேவே குருநாதா
கோதை யுளங்கவர் மாயன் மருகா
கொட்டுக சப்பாணி
கொள்ளை கொளுமெழில் வள்ளி மணாளா
கொட்டுக சப்பாணி
455. முத்தப் பருவம்✓
கரும்பின் கழையின் விளைமுத்தும்
கமுகு கதலி தருமுத்தும்
களிற்றே னக்கோ டுதிர்முத்தும்
கயலில் புயலில் வருமுத்தும்
சுரும்பார் கமலக் குளிர்முத்தும்
துலங்கு சங்க மீன்முத்தும்
சொல்லின் விலைபோ மொளிகுறையும்
சோர்த லழித லிவைக்குண்டு
விரும்பு மடியார்க் கொளிவழங்கி
வேத னரன்மால் மூவரியல்
விதித்துப் பொய்கை சரவணத்தில்
விளங்கு மாறு கமலமலர்
அரும்பும் முத்திற் கிணையுண்டோ
அழகா முத்தந் தந்தருளே
அயில்வே லிறையே வள்ளிமலை
அரசே முத்தந் தந்தருளே.
46✓
உரக மளிக்கு மணித்திரளை
உழையுங் கலையுந் தேமாவி
னுயர்செந் தளிரென் றவைநாவா
லுற்றுத் தடவப் பிணைநகைக்கும்
பரவுந் தேமாந் தளிரதனைப்
பார்க்குங் கடுவன் தீயென்று
பாய்ந்து விலகி மந்தியினைப்
பரிந்து தழுவி யூடலற
விரவும் நிலைக்கண் டஞ்சுசுமும்
விளித்துத் துணையுன் முகங்கொஞ்சும்
வெய்யோன் கதிருட் புகவரிதாய்
விண்ணார் பொழில்சூழ் தடங்குன்றில்
அரவம் ஒளிக்க மயிலேறும்
அழகா முத்தந் தந்தருளே
அயில்வே லிறையே வள்ளிமலை
அரசே முத்தந் தந்தருளே.
47✓
மயலார் புவிவாழ் வறவெறுத்து
மனத்தார் மூன்று பற்றொழித்து
மாறாத் திடத்தின் உயருருணை
மாகந் தழுவு கோபுரத்தின்
புயலார் குடுமி யிருந்துவிழும்
புனிதன் அருண கிரிக்கன்று
புதல்வா சும்மா இருவென்றே
புகலும் குமுதத் திருவாயால்
கயலார் விழியாள் குறமகளின்
கரத்தால் வழங்கு தேன்தினைமா
கனிந்து சுவைத்துப் பாராட்டிக்
களிக்குங் கமலத் திருவாயால்
அயலார் அவுணர் குலமழிக்கும்
அழகா முத்தந் தந்தருளே
அயில்வே லிறையே வள்ளிமலை
அரசே முத்தந் தந்தருளே.
48வேறு✓
கடலு முலைய ககன மலைய
கதமு மதமு முற்றெதிர்
கரிய அவுணர் முரிய சரிய
கடுக வேலை விட்டவா!
உடலு வினையி லுழலு மடிய
ருருகிப் பெருகிப் பாடவே
உழையின் சிகியின் மழையி னருளை
உதவ உளத்தில் நின்றவா!
வடலூர் வள்ள லிராம லிங்கர்
வழங்கும் கவியைக் கேட்டுளம்
வலமும் கருணை நலமும் புரிய
வருமெம் ஞான வள்ளலே!
குடலின் முடுகு பிறவி யறுக்குங்
குழவி முத்தந் தருகவே
குறவர் மகளி னுறவின் மகிழுங்
குருவே முத்தந் தருகவே.
49✓
இதழி நதியை இளைய மதியை
இயைய முடியிற் சூடுவார்
இமய னுதவ மகளை யுடலி
னிடமே யருளு மிறையனார்
முதலு முடிவு மறிய வரிய
முதல்வன் தொழுது கேட்கவே
முறையின் செவியில் ஞானம் புகல
முறுவ லிக்கும் வாயினால்
பதமும் மறைகள் பணியு நிலையும்
படியு மாலு பாவையர்
பதும முகையின் கலச அமுதம்
பருக மலரும் வாயினால்
குதலை தமிழும் ஒழுகு மிதழின்
குழவி முத்தந் தருகவே
குறவர் மகளி னுறவின் மகிழுங்
குருவே முத்தந் தருகவே.
50✓
கயிலை நாதன் நுதலி னருளுங்
கந்தக் கடவுள் சண்முகா!
காணுந் மலைகள் யாவும் நினது
கழலின் கருணை யல்லவா
மயிலந் தணிகை கழுகு சுருளி
மருதம் சென்னி மலையுடன்
மதியு முரசு திருச்செங் கோடு
மலைவி ராலி மலையொடும்
வயிர வேலன் பால முருகன்
வாழும் ரத்ன கிரிதமிழ்
வளர்க்கு மடியர் குன்றக் குடியும்
வள்ளி மலையும் நின்றருள்
குயிலும் மொழியைப் பயிலு மிதழின்
குழவி முத்தந் தருகவே
குறவர் மகளி னுறவின் மகிழும்
குருவே முத்தந் தருகவே.
51வேறு✓
வண்ண விசித்திர எண்ண பவித்திர
வான மடேவிரி கலபமொடு
வாகைக் களிமிக ஓகைச் செருக்கொடு
வாழு முடியினிற் சூடிகையும்
விண்ண மரருளம் நண்ணு பகைத்துயர்
வீட்டக் குதிசெய நடமாடி
வீழுங் கிரிகுல மேழு மிதிபட
வேக முடன்வரு மயின்மீதே
கண்ண னுளமுத லெண்ணி லிறையவர்
கழலைத் தொழுதிட வருவோனே
கந்த னெனத்திருக் கையி லெடுத்தணை
கனகக் கொடிதரு குமரோனே
தண்ணம் பொழில்வளர் வள்ளி மலையுறை
தலைவா முத்தந் தந்தருளே
சங்கர னைப்பொரு புங்கவ னேபசுந்
தமிழா முத்தந் தந்தருளே.
52✓
நீலி பரிபுரை சூலி யிமையவள்
நெடுமால் தங்கை யபிராமி
நீற்றின் ஒளிமதி கீற்றைப் புனைந்திடு
நின்மலர் நெஞ்சில் நிலைத்திடுவாள்
மோலி யணிந்துதென் மதுரை புரந்தவள்
முத்தமி ழன்னை மீனாட்சி
முத்த மளித்துய ருச்சி தைவர
மும்முலை யமுத முன்வாயால்
வேலின் விளைவிற லார்சீ ரலைவாய்
வேண்டும் மூங்கைப் பிள்ளைகலி
வெண்பா நவில்கெனும் கொவ்வைக் கனியினை
வெல்லும் பவளத் திருவாயால்
சாலி விளைவயல் வள்ளி மலையுறை
தலைவா முத்தந் தந்தருளே
சங்க ரனைப்பொரு புங்கவ னேபசுந்
தமிழா முத்தந் தந்தருளே.