வள்ளிமலை திருமுருகன் பிள்ளைத்தமிழ்
புலவர் ச. சுந்தரேசன்
சிற்றிற்பருவம்9 / 10
வள்ளிமலை திருமுருகன் பிள்ளைத்தமிழ் · புலவர் ச. சுந்தரேசன்
சிற்றிற்பருவம்
85✓
கரிவெண் கோட்டி னடுப்பமைத்துக்
கமுகம் பாளை செப்பாக்கிக்
கதிர்கால் மணிகள் எரியூட்டிக்
காய்தெங் கிளநீர் உலையேற்றிச்
சரியும் கழையின் முத்தரிசி
சமைத்துத் தேனில் தேமாவின்
சாற்றில் கதலி பலாச்சுளையும்
சாரக் கலந்து கறியாக்கி
விரியும் தாழை மடலிட்டு
விருந்து படைத்து விளையாடும்
விளங்கா யிழையார் மணற்சிற்றில்
வியன்மு வுலகும் தருமுனக்குச்
சிரிக்கும் பேதைச் செயலென்னும்
சிறியேஞ் சிற்றில் சிதையெலே
சீரார் வள்ளி மலைமுருகா
சிறியேஞ் சிற்றில் சிதையேலே.
86✓
எந்தை சிவனார் திருத்தோளும்
இமயச் சிகரக் கொடுமுடியும்
இலகும் பச்சைத் திருமேனி
எழிலார் உமையின் தடக்கையும்
கந்தம் கமழும் சரவணத்தின்
கமலத் தொட்டில் இதழ்த்தடமும்
களிகொள் அமுத மூட்டியுயர்
கதிசால் அறுகார்த் திகைமாதர்
முந்தும் குரும்பை யிளமார்பும்
முருகா எனுநின் திருப்பெயரில்
மூழ்கித் திளைத்துத் தெளிவுபெறும்
முனிவ ருளத்தும் படிந்துமுயல்
சிந்தும் மலர்ச்சே வடிவருந்தச்
சிறியேஞ் சிற்றில் சிதையேலே
சீரார் வள்ளி மலைமுருகா
சிறியேஞ் சிற்றில் சிதையேலே.
87✓
வெள்ளைக் களிற்றி னூர்ந்துவரும்
வேந்தன் நினக்கோர் பரிசாக
விளங்குங் கொடிமின் னிடையாளை
விழையும் படிக்குத் தருவனெனத்
துள்ளும் களிப்பில் அரமகளிர்
துயில ஒருவீ டளித்தனையோ
துறவோர் நின்றன் திருவடியைச்
சொல்லி லிசைக்க வீடளித்தாய்
விள்ளுஞ் சுவைசேர் கிள்ளைமொழி
விளம்பும் ஆறு தாரகைக்கு
வீடும் அளித்தாய் நினக்கெமது
வீடும் பொருளோ கடைவிழியின்
தெள்ளுங் கருணை சிறிதளித்துச்
சிறியேஞ் சிற்றில் சிதையேலே
சீரார் வள்ளி மலைமுருகா
சிறியேஞ் சிற்றில் சிதையேலே.
88✓
கரையி லுயிர்கள் படைக்குமயன்
கருத்தில் உன்றன் கழல்பணியக்
கருதான் எனநீ சிறையிட்டாய்
கனிந்து பின்ன ரவன்படைக்க
உரைசெய் தாயிப் பேதையரேம்
உன்னை யொழியா துவக்கின்றோம்
உளஞ்சீ ரடியே பதிக்கின்றோம்
உயிரும் உடைமை எல்லாமும்
விரைச்சே வடிக்கே யளித்தனமால்
விழையும் மலர்த்தேன் வண்டுண்டு
விளைக்கு மிசையுங் குயிலிசையும்
விரவும் பொழிலும் முழங்கருவித்
திரைசே ரெழிலும் திகழ்மலைவாழ்
செல்வா சிற்றில் சிதையேலே
சீரார் வள்ளி மலைமுருகா
சிறியேஞ் சிற்றில் சிதையேலே.
89✓
காரைப் பழிக்கும் வரையുടலும்
கனலைப் பழிக்கும் புழைவிழியும்
கழையைப் பழிக்கும் கொடுங்கரமும்
கணையைப் பழிக்கும் கொலைச்செயலும்
சேரப் படைத்துப் புடைத்துதிமிர்
செறிக்கும் அவுணர் குலப்படையைச்
சிங்க முகனைத் தாருகனைச்
செருக்கின் வடிவாய்ச் சினந்துவரும்
சூரைக் குன்றைத் துளைத்தவரைச்
சூழும் மகளிர் வாழ்வீட்டைத்
துகள்செய் தழித்த திருவடிக்குத்
தோகை யெம்வீ டொருநிகரோ
சீரை யடியார்ச் களித்தருளும்
செல்வா சிற்றில் சிதையேலே
சீரார் வள்ளி மலைமுருகா
சிறியேஞ் சிற்றில் சிதையேலே.
90✓
வளைக்கும் கழுத்தில் கனிந்துகுலை
வாழை சாய்க்கும் வளவயலில்
வணக்கும் கதிரால் செந்நெல்லும்
வருஞ்சீ ரடியார் வரவேற்கும்
களைக்கும் குவளை ஆம்பலிவை
கடைசி யாரின்கண் வாய்காட்டும்
கனக்கும் மடியில் கயன்மோத
கன்றென் றெருமை பாலுற்றும்
இளைக்கும் அயர்ச்சிக் கிளநீரும்
இனிக்கும் மலைத்தேன் மருந்தாகும்
இயற்கை வளஞ்சூழ் இதண்வள்ளி
யிருந்தா ளவளின் அடிச்சிறியேம்
திளைக்கும் படிச்சிற் றில்சமைத்தோம்
செல்வா சிற்றில் சிதையேலே
சீரார் வள்ளி மலைமுருகா
சிறியேஞ் சிற்றில் சிதையேலே.
91✓
பூதமைந்தும் பொறியைந்தும்
புலன்க ளைந்தும் கரணங்கள்
புகலும் நான்கும் மலமூன்றும்
பொருந்து மிரண்டு வினைகளினால்
ஆத லறியா ஆன்மாவிற்
காதி சக்தி திரோதாயி
அதனு ளடங்கும் முச்சத்தி
ஆற்றுஞ் செயலா லிவ்வுலகில்
வேத னுடலைப் படைத்திடமால்
விரைந்து காக்கச் சிவனழிக்க
வீடின் றுலையு மடியேங்கள்
வீட்டை யழித்த லழகாமோ
சீதப் புனிதக் கங்கைமகிழ்
செல்வா சிற்றில் சிதையேலே
சீரார் வள்ளி மலைமுருகா
சிறியேஞ் சிற்றில் சிதையேலே.
92✓
விஞ்சும் தவத்தால் பகீரதனும்
விண்ணின் றழைத்த கங்கையினை
விரிசெஞ் சடைக்காட் டுள்ளடக்கும்
விடையே றுடையான் றனக்குரிய
அஞ்சு முகத்தோ டதோமுகஞ்சேர்ந்
தாறு முகமா யவதரித்த
அண்ணலால் நின்தா தைபுரியும்
அழித்தல் தமக்கு முறுதொழிலாய்
நெஞ்சுட் கொண்டோ பேதையரேம்
நிறுவும் சிறிய மணல்வீட்டை
நெடுமால் அயனோ டறிவரிதாய்
நிறைநான் மறையின் முடிதவழும்
செஞ்சீ ரடிக்குச் செயல்தருவாய்
செல்வா சிற்றில் சிதையேலே
சீரார் வள்ளி மலைமுருகா
சிறியேஞ் சிற்றில் சிதையேலே.
93✓
ஞானக் கனியை நயந்துபதி
னான்கு புவனம் கொடித்தோகை
நாடி விரைந்து மரனினக்கு
நல்காச் சினநீ தணிகிலையோ
யானென் செருக்கின் வருஞ்சூரை
இலைவேற் பிளந்து நின்னடியாம்
இனிய வீட்டை யவற்கீந்தும்
இன்னம் வெகுளி தணிந்திலையோ
கோனே குறவர் மலைவாழும்
குறப்பெண் அடிக்கீழ்ப் பணிசெய்து
குலவும் சிறிய ஆயத்தேம்
குமிழ்புன் சிரிப்பின் அருள்தருவாய்
தேனும் தினைமா தருகின்றோம்
செல்வா சிற்றில் சிதையேலே
சீரார் வள்ளி மலைமுருகா
சிறியேஞ் சிற்றில் சிதையேலே.
94✓
சங்குக் கரத்தோன் திருத்தங்கை
சத்தி யளிக்கும் திருமுலைப்பால்
தடத்தில் தவழ்ந்தும் மீண்டுமிவண்
தணியா தவனீ தோணிபுரந்
தங்கு பொய்கைக் கரைநின்று
தனித்துக் கனிந்து பழகுநறுந்
தமிழால் அம்மே என்றமுது
தயங்குந் தளிர்மெல் லடியதனால்
மங்கு மாயை யிருள்மூழ்கி
மாழ்கும் அடியேம் ஒருவீடு
மணலில் சமைத்தே மிதுசிதைத்தால்
மங்கைக் கருள்வா ரெவருமிலர்
தெங்கு விளைக்கும் வளத்தொண்டைச்
செல்வா சிற்றில் சிதையேலே
சீரார் வள்ளி மலைமுருகா
சிறியேஞ் சிற்றில் சிதையேலே.