முருகன் App
வள்ளிமலை திருமுருகன் பிள்ளைத்தமிழ்
புலவர் ச. சுந்தரேசன்
செங்கீரைப்பருவம்3 / 10
வள்ளிமலை திருமுருகன் பிள்ளைத்தமிழ் · புலவர் ச. சுந்தரேசன்

செங்கீரைப்பருவம்

15✓
சூரிய சந்திர ரெனவிரு குழைகள்
சுழன்று சுழன்றாடச்
சொக்கர் திருவடி சுந்தரி திருமுடி
துரிய வெளியாட
மூரிவெண் முத்துப் பதக்கம் மார்பில்
முயங்கி யசைந்தாட
மூவா மறைகள் கொஞ்சும் சதங்கை
முறையி னிசைபாட
போரிடு மசுரர் பொன்றிட வாகை
புரிவே லொளியாட
புண்ணிய ரெண்ணிலர் போற்றிடக் கண்டருள்
பூவிழிக் கடையாட
ஆரியன் ராமன் மருகா முருகா
ஆடுக செங்கீரை
ஆறு முகத்தெம் வள்ளி மணாளா
ஆடுக செங்கீரை
16✓
மணிபண மாயிர முடியுடை சேடன்
மயங்கி யசைந்தாட
மலரவ னொடுகலை மகளும் தாழ்ந்து
மகிழ்ந்து துதிபாட
குணிலுறு முரசென மலையினி லருவி
குதித்துக் குதித்தாட
கோளொடு தாரகை மின்மினி யெனவே
கோமகன் முன்னாட
பணிசெய் மன்பர் தலந்தொறுங் கூடிப்
பரவிப் புகழ்பாட
பரந்தா மன்வரு கலுழன் வெருண்டு
பதியுடன் சேர்ந்தாட
அணிமணி நெற்றிச் சுட்டியு மாட
ஆடுக செங்கீரை
ஆறு முகத்தெம் வள்ளி மணாளா
ஆடுக செங்கீரை.
17✓
குடமுனி மகபதி குமர குருபரன்
கொன்றைப் பிறைசூடி
கோதில் கமலப் புத்தேள் ஒளவை
குழையப் புகழ்பாடும்
தடவரை அருணை முனியொடு கீரன்
தவத்தோர் பலருக்கும்
தனிப்பெருங் குருவாய் மறைமொழி கூறும்
தலைமைப் பெருமானே
உடன்வரு தம்பிய ரொன்பது பேருடன்
ஒவ்வா மும்மலத்தி
னுருவாம் தாருகன் அரிமுகன் சூரன்
உடலம் பிளந்தழிய
அடல்வேல் விடுக்கும் கதிர்வடி வேலா
ஆடுக செங்கீரை
ஆறு முகத்தெம் வள்ளி மணாளா
ஆடுக செங்கீரை.
18✓
புந்தியில் வைத்துரு வேற்றிடும் ஞானிகள்
புகலும் மறைமொழியாம்
ஸ்ரீ ராடி முருகா எனநுதற்
பூசிட மனமாசைச்
சிந்திடு திருவெண் ணீற்றுப் பொடியில்
திளைத்து மகிழ்ந்தாடிச்
செவ்வாய்க் குமுதம் திரிபுர சுந்தரி
திருமுலைப் பாலொழுகக்
கந்தரு வருமர மாதரும் வாணியும்
கானத் துளமாறக்
கழலொடு தண்டை சதங்கை கிண்கிணி
கடவுண் மறைபாட
அந்தமு மாதியு மறிவரு பெரும
ஆடுக செங்கீரை
ஆறு முகத்தெம் வள்ளி மணாளா
ஆடுக செங்கீரை.
19✓
குருதிப் புனலொடு நிணமு மென்பும்
கூட்டிக் கனன்மூட்டி
கொள்ளை கொளும்பேய் மனத்தொடு பொறிகள்
கோடும் மலமாயை
மருகும் குடிலில் காற்றை யடைத்து
மாழ்கும் உயிர்த்திரளில்
மடியும் படியெனப் படியில் உலவிட
மருவ விடன்முறையோ
உருகும் படியனு தினமுன் புகழை
ஓதும் நன்மனமும்
ஓவா தடியார் மலரடித் தொண்டில்
ஒன்றும் நிலையருள்வாய்
அருகும் இதழியு மணிசிவ குமரா
ஆடுக செங்கீரை
ஆறு முகத்தெம் வள்ளி மணாளா
ஆடுக செங்கீரை.
20வேறு✓
நிலையான வாழ்வினை நிதியான பேற்றினை
நிறைவான நன்மனத்தை
நிலமீது பெரியரைப் போற்றிடும் பண்பினை
நெறியான நல்லொழுக்கை
உலையாத பொருளினை உறுதியாம் அறிவினை
உயர்வான ஞானமதனை
உத்தம பக்தியை உன்கழல் நிழலினை
ஒருமையின் துதிப்பவர்க்கே
தலையாய வள்ளலாய்த் தண்ணருள் கொண்டலாய்த்
தாயினும் பரிந்துவந்து
சந்ததம் அளித்திடும் சண்முகக் கடவுளே
தனிப்பெருங் கருணையமுதே
சிலையான வன்மனச் சூரரைச் சிதைத்தவா
செங்கீரை யாடியருளே
திருமகள் செல்விவளர் வள்ளிமலை முருகனே
செங்கீரை யாடியருளே.
21✓
கனலினைக் கக்குசிறு விழிகளும் கடமழை
கடுகிவரு மிருகதுப்பும்
கார்முகி லுருமெனுங் குரலொடு மாயையாங்
கருவரை யுடல்தாருகன்
இனமெனப் படரரண் கிரவுஞ்ச மலையுடன்
இரண்டுறப் பிளந்தவேலா!
இழிதகை காமமுத லெழுவரை பிளக்குமவர்
இதயமலர் மீதிருப்பாய்
அனமுடன் பேடையு மன்புடன் அளாவிடும்
ஆம்பலின் கள்ளருந்தி
அளியினம் தாலாட்டப் பங்கய முறங்கிடு
மணிவயல் வள்ளிமலையில்
தினம்தினம் பல்விழா கண்டுமகிழ் செல்வனே
செங்கீரை யாடியருளே
திருமகள் செல்விவளர் வள்ளிமலை முருகனே
செங்கீரை யாடியருளே.
22✓
விண்ணவர் வரிசையும் வித்தகர் வரிசையும்
வேள்விகள் பலவியற்றும்
வேதியர் வரிசையும் வேடுவர் வரைபடு
விளைவெலாம் கொடுவரிசையும்
தண்ணறு மலரொடு சந்தமிகு புகழினைச்
சாற்றுமடி யார்வரிசையும்
சங்கொடு மத்தளம் முரசுபே ரிகையாழ்
தாளமிசைப் போர்வரிசையும்
கண்ணுதல் இறைமுதல் சுரர்தரி சனம்பெறக்
காத்திருக் கும்வரிசையும்
கட்டுறும் பற்றறத் தாபதர் திருமுனர்
கதிபெற நீள்வரிசையும்
சென்னிநின் னடியுறத் தாழ்ந்தனர் சண்முகா
செங்கீரை யாடியருளே
திருமகள் செல்விவளர் வள்ளிமலை முருகனே
செங்கீரை யாடியருளே.
23✓
ஒருமையின் துதிப்பவர் இருவினை யறுத்திடும்
உளமுறு மும்மலங்கள்
ஒழித்திடும் நால்வகைக் கரணங்கள் ஓய்ந்திட
உற்றதுணை யாகுமைந்து
வருபுல னொடுக்கிடும் சரவண பவவென
வழுவாம லாறெழுத்து
மந்திரம் செபித்திட எழுவகைப் பிறவியும்
வாய்த்திட லென்றுமுண்டோ
பொருவிலெண் சித்தியும் கூடுமொன் பதுகோளும்
பொருந்தவே நலம்பயக்கும்
போற்றுமடி யார்பொருட் டவதாரம் பத்துகொள்
புயல்வணன் மகிழ்மருகனே
செருவினிற் பகையறச் செகுத்திடும் வேலவ!
செங்கீரை யாடியருளே
திருமகள் செல்விவளர் வள்ளிமலை முருகனே
செங்கீரை யாடியருளே.
24✓
நெஞ்சிலுறு வஞ்சமும் மிஞ்சிவரு மஞ்சையும்
நேயம தறுக்குமேழும்
நெகிழ்ந்துமுயர் பக்தியைச் சிதைக்குமாங் காரமும்
நின்னடி மலர்சூடியே
தஞ்சமென் றுருகிக்கண் ணீர்விழி பெருக்கியே
சரவண பவவோமெனச்
சாற்றிடும் போதினில் சற்றேனும் நிற்குமோ
சகசமல இருளகற்றி
அஞ்சலென் றருள்செயு மன்னைதரு வேல்வந்திங்
கடற்பகை யழிக்குமன்றோ
அன்புவடி வானகுரு நாதனே அடியனேன்
அகத்துறை கருணைமுகிலே
செஞ்சடை யிறைமடியிற் கொஞ்சிவிளை யாடுவாய்
செங்கீரை யாடியருளே
திருமகள் செல்விவளர் வள்ளிமலை முருகனே
செங்கீரை யாடியருளே.