வள்ளிமலை திருமுருகன் பிள்ளைத்தமிழ்
புலவர் ச. சுந்தரேசன்
தாலப்பருவம்4 / 10
வள்ளிமலை திருமுருகன் பிள்ளைத்தமிழ் · புலவர் ச. சுந்தரேசன்
தாலப்பருவம்
25✓
அரக்கர் குலத்தின் வேரறுக்க
அரனார் நுதற்கண் ணருள்நோக்கில்
அயனும் மாலு மமரர்களும்
அகத்திற் களித்துப் பரவவரும்
புரக்கும் வண்ண மெழுமாறு
பொறிகள் தணிந்து சரவணமாம்
பொய்கை தவழக் குழவிகளாய்ப்
புனிதத் திருக்கார்த் திகைமாதர்
சுரக்கும் முலைப்பா லமுதூட்டித்
தோளி லணைத்துக் கடம்பநிழல்
துயிலப் பண்ணித் தாலாட்டத்
துலங்கு மலர்க்கண் விழியருளும்
தருக்கள் செழிக்கும் வள்ளிமலைத்
தலஞ்சேர் முருகா தாலேலோ
தமிழ்க் குருகுஞ் சங்கமமர்
தலைவர் தாலோ தாலேலோ.
26✓
விண்ணைத் தழுவு மாடமிசை
விஞ்சை மகளி ரெனைமாதர்
விளங்கு குழலை விரித்தாற்றி
விளைக்கும் மணஞ்சே ரகிற்புகையும்
மண்ணில் தவத்தோ ரருள்வேண்டி
மடுக்கும் வேள்வி யவிப்புகையும்
மயலா மிருளைக் கடிந்தடியார்
மருவி யிடுதூ பப்புகையும்
எண்ணி லுயர்ந்த அறச்சாலை
யெங்கு மொழியா திரவுபக
லிணையி லுணவு படைப்பதற்கே
எரிக்கு மடுப்பி லிடுபுகையும்
தண்ணார் புயலாய்ச் சூழ்வள்ளித்
தலஞ்சேர் முருகா தாலேலோ
தமிழ்க் குருகுஞ் சங்கமமர்
தலைவா தாலோ தாலேலோ.
27✓
ஊழி வடவை யெனக்கனலை
உலக மூன்றுங் கரிந்தழிய
உம்பர் குலைய விழிகக்க
உருமுக் கணமொன் றுற்றதுபோல்
நாழிப் பொழுதில் குலவரைகள்
நடுங்க அண்ட கோளமெலாம்
நாலாந் திசையில் திரிதரவும்
நானே என்னுங் குரலெழுப்பிப்
பூழிப் படைகொண் டதிரவரும்
பொல்லா அசுரர் குலத்தலைவன்
பொக்கென் றழியத் தடமார்பில்
புகுந்து பிளக்கும் வடிவேலா!
தாழில் சரணம் அருள் வள்ளித்
தலஞ்சேர் முருகா தாலேலோ
தமிழ்க் குருகுஞ் சங்கமமர்
தலைவா தாலோ தாலேலோ.
28✓
தனக்கென் றமர்ந்த தவக்கோலந்
தாங்கும் பழநித் திருமலையும்
தன்னை யுணராத தானவரைத்
தடிந்து வலங்கொள் திருச்செந்தூர்
கனக்கும் பரிசாய்க் குஞ்சரியைக்
கற்பு மணங்கொள் பரங்குன்றம்
கங்கைச் சடையார்க் குபதேசம்
கனிவோ டருஞ்சீ ரேரகமும்
மணக்கும் பொழில்சூழ் பழமுதிர்கா
மறவர் குறவர் மகிழ்ந்தேத்தும்
மலைகள் குன்று தோறாடல்
மருவும் படைவீ டாறோடும்
தனக்குள் உவகை தருவள்ளித்
தலஞ்சேர் முருகா தாலேலோ
தமிழ்க் குருகுஞ் சங்கமமர்
தலைவா தாலோ தாலேலோ.
29வேறு✓
குழையிற் பொருகயல் கண்மட வார்தம்
குழலிற் கொடியுடலில்
குலவும் நறுமலர் சிதறிப் பொழிமது
கொங்குட னுறுவெள்ளம்
மழைபோற் குளிர்தண் டலைமின் மலர்கள்
மடுக்கும் நறவாறும்
மடுவிற் புகுந்து கடையில் வழிந்து
மடைவாய்க் கால்வரவே
விழையும் பகடுகள் கன்றுட னாறிலை
வேட்கை யறப்பருகி
விழிகள் சிவக்கத் துள்ளி நடக்கும்
விளைவயல் மருதமெலாம்
தழையும் வள்ளி மலையுறை செல்வா
தாலோ தாலேலோ
தசரத குமரன் மருகா முருகா
தாலோ தாலேலோ.
பணியு மிதழியும் பனிமா மதியும்
படியு மலைமுடியும்
30✓
பலகொள் தலையும் பறைசெய் துடியும்
பாயு மிளமானு
மணியுங் கரமு மெருக்கோ டென்பு
மலரித் தடமார்பு
மருவா யுருவா யரியய னறியா
அனலாய்ச் சுடர்மலையில்
மணியொன் றுபிறந் தறுபங் கயமாய்
மலர்ந்த செம்மலைபோல்
மருவித் தழுவு பசுங்கொடி பூத்த
மலர்க்கை தவழ்கொழுந்தே
தணிகா சலனே வள்ளிக் கணவா
தாலோ தாலேலோ
தசரத குமரன் மருகா முருகா
தாலோ தாலேலோ.
31✓
கடலின் மலர்ந்த கமலம் மணந்தும்
கடன்மேல் துயில்கொண்டும்
கடலைக் கடைந்தும் கடலைக் கடந்தும்
கடலில் வணமுற்று
மிடருற் றழைக்கு மதலை புரக்க
இரணியன் தனைக்கொல்ல
எரிகால் விழிக்கு மரியா வந்தும
இனிதாய்ப் பசுகாத்தல்
கடமை யெனக்கொள் கண்ணன் மருகா
கந்தா! காங்கேயா!
கலக்க மளிக்குங் காலனை யழிக்குங்
கதிர்வேற் குமரேசா!
தடமார் வள்ளி மலையுறை செல்வா
தாலோ தாலேலோ
தசரத குமரன் மருகா முருகா
தாலோ தாலேலோ.
32✓
உருகும் விடமார் உரகர் வேந்தன்
ஒளிர்மணி யாயிரமாய்
உயரரி சயனம் கொளவரு பாயலை
ஒருவிரன் மோதிரமாய்ச்
செருகு முமையவள் திருமுலைப் பாலைச்
செவ்வாய் ஒழுக்கிடவே
திருந்தப் பருகியும் சரவணப் பொய்கையில்
திருக்கார்த் திகைமாதர்
பெருகு தனத்தின் அமுதம் பருகியும்
பின்னும் ஞானப்பால்
பெறவே காழியில் அம்மே என்றழும்
பிள்ளைப் பெருமானே
சருகு நிகர்பவம் அறுக்கும் குறிஞ்சித்
தலைவா தாலேலோ
தசரத குமரன் மருகா முருகா
தாலோ தாலேலோ.
33வேறு✓
நாலு மறைப்பரி ஏறும் சிவகுரு
நாத தாலேலோ
நாலு முகத்தனைக் காலிற் றளையிடு
ஞானீ தாலேலோ
மாலு முவந்திரு மாத ரளித்திடு
மருகா தாலேலோ
மாய னுடன்வரு நீலி யிமையவள்
மைந்தா தாலேலோ
சீல நிறைந்தவர் கோல மனத்துறை
செல்வா தாலேலோ
சேவற் கொடியொடு தோகை யுகைத்திடு
தேவா தாலேலோ
சால தவத்தவர் சாரும் குறிஞ்சியின்
சான்றோய் தாலேலோ
சந்தத் திருப்புகழ் தந்த முனிக்கருள்
தலைவா தாலேலோ.
34✓
வேறு படுவினை நீறு படவரு
வேதா தாலேலோ
வேழம் தனைக்கொடு வேடர் குலமகள்
விழைவாய் தாலேலோ
கூறு படகிரி வேலை விடுமுரு
கோனே தாலேலோ
கூடு மடியவர் பாத முறவருட்
குருவே தாலேலோ
சீறு மவுணரை நூறித் துகள்புரி
சேயே தாலேலோ
சீத மதிச்சடை நாதன் தருமெழிற்
செல்வா தாலேலோ
சாறு மணந்திடு வள்ளி மலையுறை
சான்றோய் தாலேலோ
சந்தத் திருப்புகழ் தந்த முனிக்கருள்
தலைவா தாலேலோ.