வள்ளிமலை திருமுருகன் பிள்ளைத்தமிழ்
புலவர் ச. சுந்தரேசன்
சிறுதேர்ப்பருவம்10 / 10
வள்ளிமலை திருமுருகன் பிள்ளைத்தமிழ் · புலவர் ச. சுந்தரேசன்
சிறுதேர்ப்பருவம்
95✓
மூண்டக மிருந்துமறை முழக்குவாய் மலரவன்
முறையறத் தேருருட்ட
மூவுலகு முயிருருளத் தாவலை யுறங்கிகண்
மூடாமல் கரியமுகிலும்
பண்டுதொட் டாழியினை யுருட்டகற் பகநிழற்
படிந்தரசு செய்யுமிந்திரன்
பயமிலா தெண்டிசைக் காவலர்க் குறுதொழில்
பணிந்தாணைத் தேருருட்ட
அண்டமெல் லாமொளிசெ யருணனெழு பரியொற்றை
ஆழியில் தேருருட்ட
அண்டரும் சான்றோரும் நின்னருட் புகழோதி
அன்பெனும் தேருருட்டத்
திண்டிறல் கழலொலி தேனிசை தரக்குக
சிறுதே ருருட்டியருளே
திலகமெனும் வள்ளிமலை நிலவுசுந் தரவேல
சிறுதே ருருட்டியருளே.
96✓
பரிதிவெண் திங்களு மிரண்டுரு ளாழியாய்ப்
பகரமரர் தேரதாகப்
பகழிதிரு மாலுமாய்க் கணையுமொரு மேருமாய்ப்
பணிவா சுகிநாணதாய்ச்
சுருதிகள் பரியதாய் நான்முகன் விசைத்திடத்
சுரத்துசுர ரதியுமாமுச்
சோவுறு மரக்கரை மடித்திடச் சிவபிரான்
தொடங்குநாட் சென்றதேரைப்
பொருவநின் சிறுவிரல் சிவந்திட மலையவன்
பொற்கொடி மகிழ்ந்துவப்பப்
புகழினைப் பாடிமல மாசுகள் அகற்றிடும்
புண்ணியர் பரவிவாழ்த்தத்
திருமகளி னிருமகளு முருகுற வருகுக
சிறுதே ருருட்டியருளே
திலகமெனும் வள்ளிமலை நிலவுசுந் தரவேல
சிறுதே ருருட்டியருளே.
97✓
நித்திலம் மணிகளும் இருகரை ஒதுக்கிட
நிறைவளம் திகழும்நீவா
நிதமுந்த னலைக்கரத் தால்பதம் தழுவுமோர்
நிலையென விளங்கவள்ளி
பத்தியால் பரண்பீடங் கொண்டுதவ மாற்றிடும்
பயன்மிகு மலையிலின்று
பலகோடி பக்தரும் அமரரும் முனிவரும்
பற்பல நாட்டுளோரும்
சத்தியின் பீடமே சண்முகன் உவந்தருள்
தந்திடும் என்றுகூடிச்
சாற்றும் பொன்மணித் தேருலாக் கண்டிவண்
சாறெடுத் தயன்படைப்பைச்
சித்தியின் மாற்றிடத் திருவருள் புரிகுக
சிறுதே ருருட்டியருளே
திலகமெனும் வள்ளிமலை நிலவுசுந் தரவேல
சிறுதே ருருட்டியருளே.
98✓
கன்னடம் கேரளம் ஆந்திரம் சிங்களம்
கடல்கடந் திடுதேசமும்
கரையிலா அருளினில் வாழ்பவர் வந்திவண்
கழலிணை எழிலைநாளும்
உன்னியும் போற்றியும் உவந்தன்னை வள்ளியின்
உயர்தவப் பீடமாகும்
ஒருபடை வீடென அருள்தரும் தரிசன
முற்றுபே ரின்பமுற்றார்
கன்னிசெந் தமிழிலே கந்தநின்சரிதையைக்
கமழ்திருப் புகழையோதிக்
கனியுதிரு முருககிரு பானந்த வாரியார்
கண்டுரை கேட்டுவந்தாய்
சென்னியில் சிந்தையில் மகிழ்நடம் புரிகுக
சிறுதே ருருட்டியருளே
திலகமெனும் வள்ளிமலை நிலவுசுந் தரவேல
சிறுதே ருருட்டியருளே.
99✓
சத்துசித் தானந்த வடிவமாய் நடமிடும்
சங்கரன் அநாதியாதி
சரவசரப் பொருளுறைந் தவையவை யியற்றிடும்
சார்வினை யகன்றுநின்று
நித்தமும் முத்தொழில் புரிந்துவிளை யாடல்செய்
நின்மலன் சுயம்புநாதன்
நிரையண்ட கோடுகள் ஒழுங்குறச் செய்பவன்
நிலைசத்தி யோடிணைந்து
பத்தியில் அடியராம் பயிர்தழைத் திடத்தரும்
பரமனே ஆறுமுகனாம்
பாரெலா மறிகெனச் சச்சிதா னந்தரும்
பதம்பரவு மவன்குருவும்
சித்தமும் மகிழ்ந்தமர திருவருள் புரிகுக
சிறுதே ருருட்டியருளே
திலகமெனும் வள்ளிமலை நிலவுசுந் தரவேல
சிறுதே ருருட்டியருளே
100✓
பொங்குநற் களிப்புற அரசுதந் தருளினை
புதல்வியாம் தெய்வயானை
புந்திகொள் மகிழ்நனும் தனக்குமின் மருகனாம்
பொருந்திரு காரணத்தால்
தங்குபன் விதியெலாம் திரட்டியும் நிதியிறை
தருமாணிக் கவைகூட்டியும்
தளராத வினைவலத் தேவதச் சன்திறம்
தழைத்திடத் தேர்ந்துபன்னாள்
இங்குச்செய் திந்திரன் வரிசையாய்த் தந்ததோ
எனும்வள்ளி மலைரதத்தின்
எழிலுலாக் காட்சிகாண் கண்களே ழாயிரம்
ஏழையேற் கருளவேண்டும்
செங்கரம் மலர்ந்தெமைத் திருவருள் புரிகுக
சிறுதே ருருட்டியருளே.
திலகமெனும் வள்ளிமலை நிலவுசுந் தரவேல
சிறுதே ருருட்டியருளே.
101✓
கன்னலின் சுவையினும் கற்றிடுந் தொறுநயம்
காட்டுநற் றமிழையாயும்
கழகமார் மதுரையில் மலையவன் வேள்வியின்
கனலிடை யெழுந்துவந்த
அன்னையாம் அங்கயற் கண்ணிபொற் றேரினில்
அரசருக் கரசரெல்லாம்
அடிபணிந் திட்டிறை யளித்திடப் பெருவெற்றி
அணிபெறத் திகழுமாபோல்
பின்னையோர் இதுநிகர் பெருரதம் இலையெனப்
பேசிடப் பேறுகொள்ளப்
பிரியமுறு குறமகள் தேவகுஞ் சரிமகிழ்
பிள்ளையாய்ப் பெரியனாகித்
தென்றமிழ் உவந்திடும் சண்முகக் கடவுளே
சிறுதே ருருட்டியருளே
திலகமெனும் வள்ளிமலை நிலவுசுந் தரவேல
சிறுதே ருருட்டியருளே.
102✓
ஈராறு கரங்களில் வெவ்வேறு படைகொண்டும்
இந்திரத் தோகைகொண்டும்
எழுபடைத் திரளென வானவ வீரரொடும்
எந்தைநீ சினந்தெழுங்கால்
போராறு முகத்தினில் புகழ் யுகமவுணர் தலைமலைகள்
புயல்படு குலையின்வீழப்
புண்டொட் டருந்துநரி கண்டொட் டுணுங்காகம்
புலையளைந் துண்ணுபேய்கள்
நீராறு போற்குருதி காரேறு மழையென
நிறையுடல் பெருக்கெடுக்க
நீதியை நிலைசெய்ய நீதியுங் குளித்துமெழு
நெடுவேல நின்தொழும்பர்
தேராறு கண்டுய தேவாதி தேவனே
சிறுதே ருருட்டியருளே
திலகமெனும் வள்ளிமலை நிலவுசுந் தரவேல
சிறுதே ருருட்டியருளே.
103✓
ஆயிரம் படமுடியி லவனியைத் தாங்கியும்
அறிதுயில் கொள்ளுமரியின்
அணையுமாம் ஆதிசே டன்தலை நெருக்கவும்
அட்டமா திக்கயங்கள்
மாயிரும் பிடர்த்தலை முறிபடப் பொறுமைகொள்
மண்மகள் முதுகுநெளிய
மடுத்தெதிர் நின்றிடும் மலையெல்லாம் பொடிந்துதூள்
மாகமெல் லாம்நிறைக்கக்
கூயிடும் வரவினைக் குவலய முரைத்திடும்
கோழியே கொடியதாகக்
கோயிலெங் கணுமிது வரையிலும் காண்கிலாக்
குன்றெனக் குலவுதேரில்
சேயிழை யிமையவள் சேயுனை யுவந்திடச்
சிறுதே ருருட்டியருளே
திலகமெனும் வள்ளிமலை நிலவுசுந் தரவேல
சிறுதே ருருட்டியருளே.
104✓
பொய்யுடல் தேரையும் புன்மனத் தேரையும்
புகுமுயிர்க் காப்படைத்துப்
பொன்புலம் பெண்ணெனும் முப்பெருந் தேரையும்
பொருந்திரு வினைத்தேரையும்
உய்தலில் வன்கொலை புலையரின் சேர்க்கையாம்
உலைந்திடு மொருதேரையும்
உயர்ந்தவர் தாழ்ந்தவர் எம்மிறை எனக்கலக
முற்றழி பெருந்தேரையும்
வெய்யதாங் குழிவிழுந் தாழ்ந்திட எமக்கிவண்
விளைத்துநீ விளையாடுவாய்
வித்தக நின்கழல் முத்தியை விழைந்தனம்
விதிக்குமித் தேர்களழியச்
செய்யனே சிவகாமி செல்வனே மலர்க்கையால்
சிறுதே ருருட்டியருளே
திலகமெனும் வள்ளிமலை நிலவுசுந் தரவேல
சிறுதே ருருட்டியருளே.