வள்ளிமலை திருமுருகன் பிள்ளைத்தமிழ்
புலவர் ச. சுந்தரேசன்
சிறுபறைப்பருவம்8 / 10
வள்ளிமலை திருமுருகன் பிள்ளைத்தமிழ் · புலவர் ச. சுந்தரேசன்
சிறுபறைப்பருவம்
75✓
கோங்குமுதிர் செங்காந்தட் குலைதவழ் வனமுனது
குலவுகுரம் பன்னிரண்டும்
கொடுமுடியி லேறிநின் றுலகினை யொளியினால்
குளித்திடச் செய்யுமதியோ
தேங்கெழில் முகத்தருள் செப்பிடும் அரியதாய்த்
திரண்டறை குழியினுள்ளே
தேனென இனிக்கும்நீர்ச் சுனையினில் ஆம்பலோ
தெள்ளமுத வாய்நிகர்க்கும்
ஆங்கலர்ந் திதழ்விரிய அளிமுரல் பங்கயம்
அடிமலர் முடியில்சூட்டும்
அணிமண மிடைபொழில் அண்ணலுன் இருபுறமும்
அமர்வாள்ளி தெய்வயானை
தீங்கனிசு ளெனவளந் திகழ்வள்ளி மலைகந்த
சிறுபறை முழக்கியருளே
திரையலைய வருநீவா நதியுலவு முருகனே
சிறுபறை முழக்கியருளே.
76✓
வண்டிருந் துழக்கிநற வுண்டொழு கூற்றிடும்
வனமலர்ச் சுமைக்கொடிந்து
வாழ்கில மெனஒசிந் தற்றுவீழ் துடியிடை
வனிதையர் நெறிகுழற்குக்
கொண்டிருந் தூட்டகில் நறும்புகை வானவர்
கூடிமகிழ் அரமகளிரின்
குவளைநீள் விழித்திரை மறைத்திடத் தமக்குளே
குறைவுபட் டூடிநிற்க
அண்டரும் தத்தமுள் மாறுபட் டயலவர்
அகத்தினிற் சென்று சென்றே
அலமரச் செய்திட விண்டலம் பிளந்துமேல்
அமர்ந்தெழு மாடங்களும்
திண்டிறல் மாளிகையும் பொலிவள்ளி மலைகந்த
சிறுபறை முழக்கியருளே
திரையலைய வருநீவா நதியுலவு முருகனே
சிறுபறை முழக்கியருளே.
77✓
மேலோடு பரிதிமுதல் விண்ணவர் விஞ்சையர்
மிகுவேள்வி புரிமாதவர்
மேயமுத் தொழில்செயு மூவரும் இயக்கரும்
மேவுகணப் பூதரோடு
நூலோடு கலைபலவும் அறிந்துணர் யோகியர்
நுண்ணறிவு பெறுமறிஞரும்
நோன்பினால் அட்டமா சித்திகொள் சித்தரும்
நுழைபுல மிகுதர்க்கரும்
சாலோக சாமீப சாரூப நிலைக்குமேல்
சாயுச்ய பதவிபெற்றும்
சாற்றுதற் கரியதாய்த் தற்பரஞ் சுடரதாய்ச்
சரணடைந் தார்க்கெளியதாம்
சேலோடு முறழ்கணாள் வள்ளிமண வாளனே
சிறுபறை முழக்கியருளே
திரையலைய வருநீவா நதியுலவு முருகனே
சிறுபறை முழக்கியருளே.
78✓
விந்தமும் இமயமும் பெருமையை யிழந்துளம்
வெள்கிநா ணடையுமாறு
விடிவுபல நிகழ்தர வீற்றிருந் தருள்தரு
வேலனே வள்ளிமலையில்
வந்தனை செய்தலங் காரமும் திருப்புகழ்
வாய்க்குமனு பூதியுடனே
வள்ளலார் வழங்கிய திருவருட் பாக்களும்
வண்டமிழ் நால்வர்பாடும்
சந்தமார் தேவார வாசகம் பாடிடும்
தனித்தனி யடியர்கூட்டம்
சார்ந்துசித் திரைமுதல் படிவிழாச் செய்வரது
சாற்றுதற் கரியதாகும்
சிந்தையில் நிற்குமப் பெருவிழா முடிக்கெனச்
சிறுபறை முழக்கியருளே
திரையலைய வருநீவா நதியுலவு முருகனே
சிறுபறை முழக்கியருளே.
79✓
அமுதமுண் டுவந்திடு மமரர்கள் சூரனின்
ஆரிருள் சிறையில்வாடி
அவர்தரு நறவினை யுண்டிளைத் தயர்ந்திடும்
அல்லலைக் கண்டுகருணை
தமதுபின் தோன்றுநவ வீரரைச் சுரருடன்
தானையில் அணிவகுத்துத்
தலைமைகொள் சேனாதி பதியென வந்தநாள்
தந்தபோர் முரசமெனவும்
இமையினில் பகையொழித் திறமயி லூர்ந்துதான்
ஏற்றிடும் கொடியதாக
இருசிறை வாரணம் கூவியே வாகையை
இயம்புமோர் வெற்றிமுரசாய்த்
திமுதிமெனக் குறமகளைச் சேர்மண முரசெனச்
சிறுபறை முழக்கியருளே
திரையலைய வருநீவா நதியுலவு முருகனே
சிறுபறை முழக்கியருளே.
80வேறு✓
எரிமுத் தலைகோல் கொடுவாள் கணையொடு
எறியும் ஈட்டியுடன்
எதிர்வரு பகையழி உருள்தடி கதிர்கால்
இலைவேல் சம்மட்டி
புரிகொலை படையொடு திரள்வய வேடர்
புதர்மறை அரிகரடி
புலியொடு களிற்றினை அகப்பட இசைத்துப்
புறப்படு பறையொலிபோல்
சரியை கிரியை எனுமிரு படிமேல்
தவநிலை யோகமெனும்
சலனமில் ஒருமனப் புலன்முத லொடுக்கும்
தகுதிகொள் சித்தருக்கே
முரிவுறு வினையற ஞானம தருள்குக
முழக்குக சிறுபறையே
முதியவ னெனவள் ளிக்கனி விழைவேள்
முழக்குக சிறுபறையே.
81✓
கறையிருள் சீக்கும் கதிரென விளங்கும்
கற்றை மணிக்கால்மேல்
கனக மிழைத்திடை மரகதக் கற்கள்
காந்தி பரப்பிருக்கும்
நிறையுவி தானமும் நித்திலச் சரங்கள்
நிலவுமிழ் மணமேடை
நெடுநாள் செய்தவம் கூடிட வருமா
நிதிபோ லுளமகிழ்வாள்
சிறைவீ டுறுசுர பதிதன் மகளாம்
தெய்வ யானைமணம்
செய்திடும் அமயம் பல்லியம் குழுமிச்
செய்திடும் ஒலியெனவே
முறையாய்க் கரமலர் ஒச்சுக வேலவ
முழக்குக சிறுபறையே
முதியவ னெனவள் ளிக்கனி விழைவேள்
முழக்குக சிறுபறையே.
82✓
வேதியர் யோகியர் ஆதியர் ஓதுநல்
வேத முழக்கெனவும்
வித்தகர் புலவர் முத்தமி ழின்கவி
விளம்பு முழக்கெனவும்
தாதியர் சூழ்வர நங்கையர் மங்கலஞ்
சாற்று முழக்கெனவும்
தாள மிசைந்தடி யார்குழு மிப்புகழ்
சந்த முழக்கெனவும்
ஓதிம மும்குரு கும்மட நாரையும்
ஓங்கு முழக்கெனவும்
ஓகையின் காலையும் மாலையும் பூசையில்
ஓது முழக்கெனவும்
ஓதி மகிழ்வுற போத மளிகுக
முழக்குக சிறுபறையே
முதியவ னெனவள் ளிக்கனி விழைவேள்
முழக்குக சிறுபறையே.
83✓
மன்மத னோடவன் பத்தினி யாள்ரதி
மங்கையும் சேர்ந்தாட
மாம னெனுந்திரு மாலுடன் பங்கய
மலரவ னாடனாட
இன்னிசை தேர்ந்திடு தும்புரு நாரதர்
இணைந்து மகிழ்ந்தாட
இந்திர மாசுபை ஊர்வசி ரம்பையும்
இயைந்து நடமாட
தன்னை மறந்தடி யார்குழு சந்நிதி
தமிழிசை கேட்டாட
தந்தி முகத்தனும் தொந்தி குலுங்கிடத்
தாம்தீம் என்றாட
முன்னவன் பின்னவன் என்னரு முருகா
முழக்குக சிறுபறையே
முதியவ னெனவள் ளிக்கனி விழைவேள்
முழக்குக சிறுபறையே.
84✓
நாத மிசைத்திடு துடியொடு மங்கிமேல்
நாடி யெழுந்தாட
நாகமும் கங்கையுந் நாட்பிறை கொன்றையும்
நாலுஞ் சடையோடு
மோத விரிந்துதிண் டோளில் புரண்டிட
முற்று மழித்தவராம்
முனிபதஞ் சலியும் வியாக்கிர பாதரும்
முகமலர் கண்டாட
ஓது யுகாந்தம் உற்றிட ஏழ்கடல்
ஊழிப் பிரளயமாய்
ஓங்கிடச் சங்கரன் ஒன்றி யொடுக்கிட
ஒருகால் ஊர்ந்தாட.
மூதனை மகிழும் நந்தி முழக்கென
முழக்குக சிறுபறையே
முதியவ னெனவள் ளிக்கனி விழைவேள்
முழக்குக சிறுபறையே.