பொன்கோடி இருந்தென்ன? பொருள்கோடி இருந்தென்ன?
புவியெல்லாம் ஆண்டும் என்ன?
புதுமைகள் மலர்ந்தென்ன? புகழிலே சிறந்தென்ன?
போகத்தில் வாழ்ந்தும் என்ன?
தந்தேகம் வளர்ந்தென்ன? தாய்தந்தை இருந்தென்ன?
தாரங்கள் வாய்த்தும் என்ன?
தாங்காத பிள்ளைகள் சார்பாக இருந்தென்ன?
சாதனைகள் முடித்தும் என்ன?
முன்தேடிச் சேர்த்தென்ன? முதுமையிலே காத்தென்ன?
முறையாகப் படித்தும் என்ன?
முற்றாத உறவென்ன? மோகத்தின் துறவென்ன?
முழுஞானம் அடைந்தும் என்ன?
வன்நெஞ்சப் பாவிக்கு வடிவேலன் இல்லாமல்
மற்றெல்லாம் இருந்தும் என்ன?
மன்னனே சிவகாமி மைந்தனே எனைஈன்ற
வயலூர்வாழ் குமரே சனே!