குமரகோயில் அருள்மிகு வேலாயுதப் பெருமாள் பிள்ளைத்தமிழ்
சா. வேலப்பன்
அம்புலிப்பருவம்8 / 11
குமரகோயில் அருள்மிகு வேலாயுதப் பெருமாள் பிள்ளைத்தமிழ் · சா. வேலப்பன்
அம்புலிப்பருவம்
61சாமம்✓
பதினான்சீர் ஆசிரிய விருத்தம்
பேரிருள் நீக்குவை பாதியு லகத்தினில்
பெய்யருள் இவன்ம னத்தின்
பேயிருள் ஆணவப் பேரிருள் மாற்றுவன்
பெருவெளி பரவி நின்றே,
பாரினைச் சுற்றியே பவனியே வந்துநீ
பட்டொளி வீசி நிற்பை,
படைத்தநல் அண்டங்கள் பாய்ந்திவன் நொடியிலே
பவனிவந் திட்ட மேதை;
வாரிவ ழங்கியே வளரமு தக்கதிர்
வாழ்த்தினைப் பெற்று யர்வை,
வாரியெ னத்திரு வருளமு தீந்திவன்
வானுற ஓங்கி நிற்பன்;
சீரியர் போற்றிடும் சிறப்புள குகனுடன்
அம்புலீ ஆட வாவே!
செல்லினம் தவழ்மலை வேளியின் செல்வனோ(டு)
அம்புலீ ஆட வாவே!
62✓
உலகினர் ஏற்றுவர் உன்னொளி போற்றியே
உலப்பிலா ஞான ஒளியாம்
உளமதன் பேரொளி ஒருதனி முருகனை
உள்கலார் உண்டோ சொல்வாய்;
புலமையோர் போற்றிடுய பேற்றினைக் கொண்டனை,
பெரியவன் இவன்த னைத்தான்
பேசிடார் உள்ளரோ? பெருமலை ஏறிநீ
பெருமையில் மிளிர்ந்து நிற்பை,
குலவுவ லிக்கொளும் குமரசெவ் வேளிவன்
குன்றினில் ஓங்கு வன்காண்
கொள்குவை பலமனை கொள்ளுவன் இவனுமே
கொண்டுநீ மனத்தில் இஃதை
அலகிலாப் பேரொளி அழகனாம் இவனுடன்
அம்புலீ ஆட வாவே!
அருள்தரு வேளிம லைக்குக னோடுநீ
அம்புலீ ஆட வாவே!
63✓
அழகொளி முகமது அடைந்தனை, இவனுமே
அறுமுக அழகன் கண்டாய்;
அரனுடைச் சிரந்தனில் அமர்ந்துமே இலங்குவை,
அமலனாம் இவனோ என்னில்
கழலொலி கொட்டிடக் கறையிடற் றண்ணலின்
கவினுடை மேனி யெங்கும்
கறங்கியே வருவனே கண்டிடு தினந்தினம்
கந்தனின் பெருமை யெல்லாம்;
அழல்நிற மாம்இவன் அம்புலீ உனையுமே
ஆகியே விஞ்சி நின்றான்
அரனிடம் வந்தநீ அவனிடம் வந்தயெம்
அப்பனை அண்டி வந்தே
அழகுறக் கூடியே அவன்புகழ் பாடியே
அம்புலீ ஆட வாவே!
அருள்தரு வேளிம லைக்குக னோடுநீ
அம்புலீ ஆட வாவே!
64பேதம்✓
பன்னிருசீர் ஆசிரிய விருத்தம்
வருந்தி அழைத்தால் எரிவாயோ?
வடிவேல் பெருமை அறிவாயோ?
வட்ட நிலவே இவன்பெருமை
வடித்தால் வார்த்தைக் கெடுபருமை!
இருந்தே ஒளிர்வை இரவில்நீ
எங்கும் ஒளிர்வன் எம்மிறைவன்;
இளைத்துத் தேய்வை குறைமதியே!
இவனே நிலைக்கும் நிறைமதியே!
பொருந்துங் கறைநீ உள்குடரே
பொய்தீர் இவனோர் அருட்சுடரே!
பொழியுன் கதிரை மஞ்சறுக்கும்
பொலிவன் யாண்டும் பொன்றாதே!
மருந்தாம் மழலைக் குமரனுடன்
மகிழ்ந்தா டிடவா அம்புலியே!
மதில்சூழ் குமர கோயில்வன்
மகிழ்ந்தா டிடவா அம்புலியே!
65✓
நிலையாகக் கோட்டை நீகொள்வாய்
நிசிரர் கோட்டை இவன்கொள்வான்;
நிறையக் கோள்கள் நினைச்சூழும்
நீங்கும் அவையே அடியாரை!
அலைவாய் அபயம் நீதேடி
அலைவாய் அமர்ந்தான் சூர்த்தேடி!
அண்டம் சுற்ற ஓர்நொடியே
அதைநீ சுற்றில் குழப்படியே!
கலைகள் உனக்கோ ஒருசிலவே
கலைகள் போற்றும் கலையிவனே!
கங்கை அருகில் நீவருவை
கங்கை சுமந்த சீருடையான்!
நிலைகள் சிறக்க நினையழைத்தோம்
நினைந்தா டிடவா அம்புலியே!
நீர்சார் குமர கோயிலனை
நினைந்தா டிடவா அம்புலியே!
66✓
தக்கன் மாமன் தனைக்கண்டு
தவித்தே திரிந்தாய் வினைகொண்டு
தக்கன் தாதா வேதனையே;
தலையில் செய்தான் வேதனையே
கக்கல் உருண்டைக் காசினியின்
கவளத் தெறிப்பே நீயாகும்
ககனத் தியங்கும் அகிலமெலாம்
கவினாய்ப் படைத்த திவனன்றோ?
சிக்கல் உற்றாய் மனிதரினால்
சிதைத்தார் காலால் உன்தலையைச்
சிந்தைக் கெட்டா இடம்நின்றும்
சிந்தை வளரும் சேயிவனே!
பக்கம் வந்தே பலகாலம்
பணிந்தா டிடவா அம்புலியே!
பவந்தீர் குமர கோயிலனைப்
பரிந்தா டிடவா அம்புலியே!
67தானம்✓
எண்சீர் ஆசிரிய விருத்தம்
அழிமதிசார் தக்கனவன் அளித்திட்ட சாபம்
அரைநொடியில் அகற்றிடுவன் அறிந்தேநீ வாராய்
இழிகுணத்துச் சூரனையும் இருகூறாய்ப் பிளந்தே
இன்னருளால் கொடியாக இருப்பிடமாய்க் கொண்டான்
பழியகற்ற தினந்தினமும் படிந்துகடல் எழுந்தும்
பயனேதும் அறியாதே பரிதவித்தாய், அதனால்
எழிற்குமர கோயிலனை ஏற்றிகறை யகற்ற
இனிதுடனே ஆடிடவே அம்புலிநீ வாவே!
68✓
அகமதிலும் புறமதிலும் அருஞ்சீலர் ஆகும்
அடியவர்கள் கைதொழவும் ஆறுமுகன் வந்தே
அகமகிழ அன்னவர்க்கே அபயகரங் காட்டி
அவப்பிறப்பை அறுத்தான் ஆவலுடன் விரைவன்
இகத்துளவர் எய்திவிடும் இன்பமெலாம் தந்தே
இமையவர்கள் பதவியையும் இனிதுடனே ஈவன்!
மகத்துவத்தை நீயுணர்ந்தே மகிழ்குமர கோயில்
மன்னனுடன் ஆடிடவே அம்புலிநீ வாவே!
69தண்டம்✓
இனிதழைத்தும் வருகிலைநீ இவன்சினந்தால் நீயே
இருக்குமிடம் தெரியாமல் உருக்குலைந்து போவாய்
பனிமுடியர் தலையேறிப் பறித்துவுனை ஆற்றில்
பாறஎறிந் திட்டிடுவன் பரமசிவன் காண
குனிந்திழிய பிரமனையே குட்டிசிரம் பிடித்தே
கொடுஞ்சிறையில் பூட்டியதைக் கொள்கமனத் துள்ளே
இனியதனால் இன்குமர கோயிலுறை இளவல்
இடம்வந்தே ஆடிடவே அம்புலிநீ வாவே!
70✓
வானகத்தில் வையகத்தில் வளர்பகையை அழித்தே
வந்தடையும் வேல்விடிலோ வாழ்குவையோ மதியே
ஈனமிகு சூரனையும் இளவலொடு கிளையை
எளிதாவேல் எறிந்தழித்த இவன்பெருமை எண்ணாய்
கூனமதி கொண்டவனே கூறுபெயர் மதியோ?
குவலயத்தில் ஆற்றலிலே குமரன்போல் உண்டோ?
ஆனதனால் அருங்குமர கோயிலுறை குகனாம்
அழகனுடன் ஆடிடவே அம்புலிநீ வாவே!