முருகன் App
குமரகோயில் அருள்மிகு வேலாயுதப் பெருமாள் பிள்ளைத்தமிழ்
சா. வேலப்பன்
பாயிரம்1 / 11
குமரகோயில் அருள்மிகு வேலாயுதப் பெருமாள் பிள்ளைத்தமிழ் · சா. வேலப்பன்

பாயிரம்

1கணபதி காப்பு✓
செறிநெல் கொழிக்கும் செழுங்குமரி நாட்டின்
அறிகுமர கோயில் குகற்கே-நெறியாகப்
பிள்ளைத் தமிழ்பாடப் பொங்கருளை வேண்டினேன்
பிள்ளையார் பாதம் பணிந்து.
2அம்மையப்பர்✓
நல்லருள் சக்தியுடன் நாடுமொரு ஞானமதாய்
எல்லையறு காலமெலாம் உள்ளசிவம்—தொல்லழகன்
பிள்ளைத் தமிழ்கூறப் பேராசி ஈயுமே
கொள்ளை யருளைக் குவித்து.
3அவையடக்கம்✓
குன்றத்தில் கோலோச்சும் குமரன்றன்
குணங்காட்டும் பிள்ளைப் பாடல்
ஒன்றுக்கும் உதவாத எளியேனும்
ஒருப்பட்டே உரைக்க லானேன்
கன்றென்று கருதியதன் கடும்பிழையைக்
களைந்திட்டு கன்னல் கொண்டே
என்றென்றும் அருள்காட்ட ஏற்றுவனே
அறிவாரை இதயங் கொண்டே!