முருகன் App
குமரகோயில் அருள்மிகு வேலாயுதப் பெருமாள் பிள்ளைத்தமிழ்
சா. வேலப்பன்
வருகைப்பருவம்7 / 11
குமரகோயில் அருள்மிகு வேலாயுதப் பெருமாள் பிள்ளைத்தமிழ் · சா. வேலப்பன்

வருகைப்பருவம்

51பன்னிருசீர் ஆசிரிய விருத்தம்✓
கந்தா வருக கார்த்திகேயக்
கடவுள் வருக கவின்வள்ளிக்
காந்தா வருக காங்கேயக்
கடம்பா வருக கற்பகமாம்
எந்தாய் வருக எல்லோர்க்கும்
இறைவா வருக இதயத்தின்
இருப்பே வருக யானைமுகன்
இளவல் வருக எறிபவளச்
சந்தா வருக சேந்தனெனும்
செவ்வேள் வருக செவ்விழியாம்
சிவனார் விழியில் சிவக்கொழுந்தாய்
சண்முக னாகச் சரவணத்தில்
வந்தாய் வருக வாகுலேய
வரனே வருக வருகவே!
வளஞ்சேர் குமர கோயிலுறை
வாழ்வே வருக வருகவே!
52✓
மண்ணை பொன்னை மற்றுள்ள
மாயைப் பொருளை மதித்தேயான்
மயக்கங் கொண்டு மலைந்திட்டேன்
மாளாத் துயரில் உலைந்திட்டேன்
அண்ணை யாகி அகக்குற்றம்
அனைத்துஞ் செய்தே அலைந்ததனால்
அத்தா உனையே அடிபரவும்
அகமே யில்லா விலங்கானேன்
உண்மை யின்றே உணர்ந்தலறி
உருகி உள்ளங் கசிந்திட்டேன்
உயிரும் உடலும் உனக்காக்கி
உயர்த்தும் பக்திப் பசிகொண்டேன்
தண்மைத் தருஆர் புனல்நாஞ்சில்
தலைவா வருக வருகவே!
தவம்சேர் குமர கோயிலுறை
தமிழே வருக வருகவே!
53✓
இண்டை தொடுத்து முடிபுனைய
இலங்கும் திலகம் நுதலணிய
ஈர்க்கும் ஒளிசார் குழைகளதை
இதமாய்க் காதில் இணைத்தணிய
அண்டை அயலார் அகமகிழ
அடுக்காய்க் கழுத்தில் முத்தணிகள்
அரையில் கிண்கிண் அணிஞாணும்
அரிய பட்டும் அணிந்துவிட
தண்டைச் சிலம்பு சதங்கைதான்
தஞ்சம் ஈயும் தாளணிய
தாயன் பொழுக உனைவாரித்
தாளைக் கண்ணில் அணைத்திடவே
பண்டைப் பொருட்கும் பழையோனே
பரமா வருக வந்தருளே!
பதியாம் குமர கோயிலுறை
பவனே வருக வந்தருளே!
54✓
அழைக்குங் குரலுக்(கு) அசையாயேல்
அன்பே! அணிசேர் திருமேனி
அழுக்கைப் போக்க நீராட்டேன்
அழகாய் முகத்தைத் திருத்திவிடேன்
இழைகள் பூட்ட இசைந்துவிடேன்
இனிதாய் நறுஞ்சாந் தணியேனே
இலங்கும் திலகம் இடமாட்டேன்
இருகை கொட்டிக் காட்டுகிலேன்
குழைத்த அமுதைக் குளிர்ந்தூட்டிக்
குரவைக் கூத்தும் இனியாடேன்
குரலை நீட்டி உனையழையேன்
குடும்பம் பாரேன் குறைசொல்வேன்
புழைக்கை முகவற் கிளையோனே
புகழே வருக வந்தருளே!
புனிதக் குமர கோயிலுறை
புதல்வா வருக வந்தருளே!
55பதினான்குசீர் ஆசிரிய விருத்தம்✓
ஆவல் மோதவொரு யானை நீர்மடுவில்
அள்ளி நீரினைப் பருகிட
ஆங்கு வந்தவொரு ஆற்றல் முதலையதும்
அடியைப் பற்றவும் அஃதுமே
காவல் கொள்ளுமொரு கடவுள் பேரினையே
கடுகி அழைக்கவும் கண்ணனும்
கருட வாகனத்தில் ககனம் தோன்றிஅதைக்
காத்த வண்ணனும், அமுதினைத்
தேவர் பெற்றிடவே தீய சூரருளம்
திசைதி ருப்பிய மாலவன்
தேடி வந்தேதன் திரண்ட தோளினிலே
தாங்கிக் கொஞ்சிடும் வேலவா
சேவற் கொடியுடைய செம்மை வண்ணனேநீ
சிரித்துச் சீருற வருகவே!
சீர்மை கொண்டிலங்கு குமர கோயிலனே
சிரித்து வருகநீ வருகவே!
56✓
ஆய கலைகளறு பத்து நான்கினையும்
ஆளும் வாணியின் வாழ்த்தொலி
ஆதி சிவனுடைய அருமை நேசனொரு
அகத்தி யமுனிவர் ஏற்றொலி
சீயம் போலவரு சினக்கும் வில்லியுடை
சிறப்பில் ஆணவம் அடக்கியே
சிறந்த பண்பினொடு சிறுமை மன்னித்த
சீர்மை அருணகிரிப் புகழொலி
நேயம் கொண்டுமேநீ நெடிது கேட்பதனால்
நேசன் என்னுடைப் பாட்டொலி
நினது காதினிலே நில்லா தொழிந்ததுவோ
நீங்கா அன்பினைப் பழிப்பரோ?
தீய யாவையுமே தீய்க்குந் தூயவனே
திருவ ளர்குகா வருகவே!
திரைக டற்குமரிக் குமர கோயிலனே
திரும்பி வருகநீ வருகவே!.
57✓
இடரில் மூழ்கியென் இதயந் திணறுற
இறைவா இன்னமும் பொறுப்பையோ?
இரங்கி இரங்கியே இதனைக் கூறினும்
இரக்கங் கொண்டிடா திருப்பையோ?
அடரும் அன்புடன் அடியைப் பற்றியே
அழைக்க அப்புறம் செல்வையோ?
அருளின் கடலென அன்பர் அறைவதும்
ஆகி விடுவதோ பொய்யதாய்!
தொடரும் வெவ்வினை தொலைத்து நீயெனைத்
தொழும்பன் ஆக்குதல் முறையலோ!
தொண்டர் குழுவினில் அண்டச் செய்யவே
தூண்டிக் காப்பதுன் கடனலோ!
நடனம் பயில்தனி நாதன் பயந்திடு
நளினக் குமரனே வருகவே!
நாஞ்சில் குன்றதின் குமர கோயிலை
நாடுங் கந்தனே வருகவே!
பன்னிருசீர் ஆசிரிய விருத்தம்✓
பணியணைத் துயிலும் பரமனின் திருக்கண்
பாய்நீர் அதில்தோன்றி
பதியென வரநீ பலயுகம் அவர்கள்
பரவித் தவமியற்ற
மணியென ஒளிரும் தனியுருக் காட்டி
மண்ணும் விண்ணிலுமாய்
மானிடர் தேவர் மகளதாய் வளர்க
மணந்தே அருள்வனென
அணியிழை இவர்கள் அவ்விதம் வள்ளி
அழகார் தேவானை
ஆகியே வளர அவர்தமைக் கொண்டே
அருளும் முருகோனே!
தனிவிலா ஆர்வத் தவத்தினர் குருவே
தமிழே வந்தருளே!
தனிநகர்க் குமர கோயிலில் குடிகொள்
தலைவா வந்தருளே!
59✓
பகைநிசி சரர்கள் பதறிட வேல்விடும்
பாலா வந்தருளே!
பயமதை யொழித்தே பக்தரைக் காத்திடும்
பரமா வந்தருளே!
நகைபல புனைய நாடியே வந்தனன்
நயந்தே வந்தருளே!
நறுமலர் சூட்ட நாடுசாந் தணிந்திட
நலமே வந்தருளே!
வகைவகைக் கனிகள் வாங்கியே வந்தனன்
வடிவே வந்தருளே!
வளத்தினை தேனும் வனப்புடன் பிசைந்தனன்
வாங்க வந்தருளே!
நகைத்துமே நாளும் நான்வள மெய்திட
நண்பா வந்தருளே!
நடலைகள் துடைக்கும் நன்மலை வேளியின்
நாதா வந்தருளே!
60✓
முறுவலை நெளித்திடும் மூரியி தழ்ப்பெண்
முகத்தைக் கண்டுமதி
மூடிய மேகமாம் போர்லையி லொளிக்கும்
முன்காண் குறை காக்க
உறுமணித் தோட்டினை உற்றுமே நோக்கி
உறுத்தும் கண்களதை
உடனடி மூடியும் திறந்துமே மூடும்
உயர்மீன் உழன்றழிந்தே
நறுங்கனி போலவர் நன்மொழி கேட்டே
நாணும் அஞ்சுகமே
நடையதை மயிலதும் விழியதை மானும்
நயப்பாய்ப் பயில் வண்ணம்
சிறுநடைச் செவ்வியர் செறிந்திடும் நாஞ்சில்
செல்வா வந்தருளே!
சிறப்புடைக் குமர கோயில்வதி செவ்வேள்
சிவமே வந்தருளே!