குமரகோயில் அருள்மிகு வேலாயுதப் பெருமாள் பிள்ளைத்தமிழ்
சா. வேலப்பன்
காப்புப்பருவம்2 / 11
குமரகோயில் அருள்மிகு வேலாயுதப் பெருமாள் பிள்ளைத்தமிழ் · சா. வேலப்பன்
காப்புப்பருவம்
1திருமால்✓
ஆக்குந் தொழில்செய் அயன்தனையே
ஆக்கித் தந்த அரியவனை
அணிசார் திருவை மார்பகத்தில்
அணிந்த மாலை, ஆயருயிர்
காக்குந் தொழில்செய் கற்பகத்தை
கரிய நிறத்துக் கண்ணவனை
கவினார் கந்தன் மாமனையே
கருத்தில் கொண்டு கைதொழுவாம,
தாக்கும் அவுணர் தூள்படவே
தனிவேல் எறிந்தே அமரர்களின்
தளைகள் களையும் தன்மையனை
தரணி போற்றும் அறுமுகனை
தேக்கும் அன்புப் பெரியோர்கள்
திகழும் குமார கோயிலுறை
தேவாம் தீரக் குமரனையே
தினமும் காக்க வேண்டுமென்றே!
2விநாயகர்✓
அத்தி முகத்தெம் அற்புதனும்
அரனார் மெச்சும் அருங்கனியும்
ஆரும் இடரைக் களைபவனும்
அணிதாய் நின்றே அருள்பவனும்
சித்தி பலவுந் தருவோனும்
சிதடை யகற்றும் விநாயகனும்
சிவையின் மகனும் ஆனவனைச்
சிந்தை செய்து பரவுவமே,
சத்தி வேலைத் தரித்திரண்டு
சவியார் கொடியைக் கொண்டவனை
சண்முகத்துப் பெருமானை
சகத்தைச் சுற்றி வந்தவனை
முத்தி யுலகே முடிவென்று
முறைமை கொண்ட அடியார்கள்
மொய்க்குங் குமார கோயிலுறை
முருகன் தனையே புரந்திடவே!
3சிவபெருமான்✓
கடலில் தோன்றிக் கலக்கியதோர்
கடுமைக் கடுவை உட்கொண்டும்
கலையை யிழந்த குளிர்நிலவைக்
காத்துத் தலையில் வைத்தண்டும்
உடலில் ஒருகூ றுமையாட்கே
ஒதுக்கிப் பெண்மை உயர்த்தியமெய்
ஒளியாம் ஞானச் சிவன்தனையே
உளத்தில் கொண்டு வழுத்துவுமே,
அடலில் வல்ல சுடர்வேலை
அணிந்தே அன்பர் அகமதிலே
அடரும் இருளை அகற்றுமொரு
ஆறுமுகனை அழகோனை
உடலின் உயிரில் ஒளிப்பவனை
உயர்ந்தோர் உள்ளம் ஒளிர்பவனை
உயர்கு மார கோயிலனை
உவந்து நன்கு காக்கவென்றே!
4பகவதியம்மை✓
ஆர்க்கும் அலைகள் மூன்றதனை
அடியில் கொண்டு, பகலவனும்
அணிசார் நிலவும் அடிபரவ
அழகாய் ஒருங்கே திரண்டுவர
ஈர்க்குங் குணத்தள், இரக்கமதின்
இருப்பின் இடத்தள் எம்மீசன்
இதயங் கவர்ந்த பகவதியை
இரந்தே இருகைக் கூப்புதுமே,
மூர்க்கங் கொண்டே அலைமோதும்
முதன்மைக் குமரி நாடதிலே
முத்தர் சித்தர் முகிழ்த்தெழுந்து
முறைமை செய்து சேவடியின்
மார்க்கங் காட்டும் சீரடியார்
மலிந்தே யோங்கும் மணிநகராம்
மறைசார் குமார கோயிலிலே
மருவும் மகனைக் காக்கவென்றே!
5நான்முகன்✓
நச்சுப் பாம்பில் துயில்கண்ணன்
நாபிக் கமலம் வந்துதித்து
நவிலும் மறைகள் நான்கினையும்
நலமாய்க் கொண்டு முகமென்றே
விச்சைத் தலைவி நாமகளை
விரும்பி நாவில் குடிவைத்து
வியனார் ஆக்கல் தொழில்புரியும்
வேதன் தனையே வேண்டுவமே,
இச்சை யிலதாய் அருணகிரி
இதயம் வெந்தே உயிர்மாய்க்க
இருகை யேந்தி தடுத்தாண்டே
இனிமைத் தமிழை ஈந்தருளி
மிச்சை யகற்ற மனமுவந்து
மிளிருங் குமார கோயிலுறை
மின்னார் சடையன் திருமகனாம்
முருகன் தனையே புரந்திடவே!
6கலைமகள்
பதினான்குசீர் ஆசிரிய விருத்தம்✓
கார்வண்ணன் உந்தியில் கமழ்ந்தெழு வேதனின்
காசற்ற மனைவி தன்னை
கலைகளுக் கெல்லாம்நற் றலைவியாய்த் திகழ்ந்துமே
கற்பவர் நாவில் நின்று
சீர்வெண்மைத் தாமரை மீதுறை செல்வியைச்
சிறுவெண்மை அன்னங் கொண்டு
சிறைகொள்ளும் அஞ்ஞான இருள்தள்ளும் கலைவாணி
சீரடி போற்று தும்மே,
பேர்கொண்ட வள்ளியாம் கொடிக்கருள் காட்டிடப்
பெருமைசார் வடிவங் கொண்டு
பெண்ணவள் மகிழ்ந்திடப் பொற்கரம் பற்றியே
புகழுச்சி சென்ற வள்ளல்
ஏர்கொண்ட நாஞ்சிலின் குமரகோ யில்தனில்
எழில்காட்டி ஆட்சி செய்யும்
எம்மிறை யோன்தனை எண்குண வேலனை
என்றென்றும் காக்க வென்றே!
7திருமகள்✓
செந்தா மரைமலர் சென்றுறை செல்வியை
செவ்விதழ் அன்னப் பேடை
செழுமைய மிழ்தொடு செறிமுத்துக் கடலினில்
சீர்உ னுதித்த மாதை
நந்தா விளக்கதாய் நானிலங் காத்திடும்
நாரணன் தேவி யாளை
நளினமாம் மங்கையை நற்றிரு நங்கையை
நாளுமே போற்று தும்யாம்.
கந்தா நீயொரு கனியென அம்பிகை
கனிவுடன் மொழிந்த பின்னும்
கனிக்கதாய் நொந்துமே கன்னியாம் தமிழ்புரி
கரையறு தவமே முந்த
வந்தே பழனியில் வாழ்வதைத் தந்தவன்
வாழ்ந்திடு குமர கோயில்
வற்றிடாச் செல்வமாம் வடிவேலன் முருகனை
வளமுடன் காக்க வென்றே!
8ஐயப்பன்✓
நீள்கொண்ட வேணியர் நிலவினைப் பூண்டவர்
நீர்மலர் தந்தை யாக
நிலத்தைய ளந்தவன் நீலவண் ணத்தவன்
நீடுயர்த் தாயு மாகக்
கேள்கொண்ட செய்யவன் கேட்பதை ஈபவன்
கிரியதாம் சபரி நாதன்
கருணையின் கடலவன் காத்திடும் ஐயப்பன்
கழலடி போற்றி என்போம்
தாள்கண்டும் போற்றிடா தாணவ நடைகொளும்
தமனியன் தனைநி றுத்தி
தானொடு பிரணவத் தகுபொருள் கேட்கவும்
தடுமாற தலையில் குட்டி
ஆள்கொண்டு சிறைதனில் அடைத்திடும் வேலனை
அளப்பரு சிறப்பு மிக்க
அழகடர் நாஞ்சிலில் குமரகோ யில்வளர்
அப்பனைக் காக்கு மாறே!
9கார்த்திகைப் பெண்கள்✓
தண்ணென்னும் சரவணப் பொய்கையில் வந்துசேர்
தனியாறு குழவி தம்மைத்
தம்தனப் பாலூட்டித் தாலாட்டிச் சீராட்டித்
தக்கதோர் அணிபு னைந்தே!
கண்ணென்னும் வண்ணமாய்க் கந்தனைக் காத்துமே
கவனித்து வளர்த்த தெய்வக்
கார்த்திகைப் பெண்கள்தம் கவினடி பணிந்துமே
கருத்துடன் வேண்டு தும்மே,
மண்ணுள்ளும் விண்ணுள்ளும் மறப்பிலா தெண்ணுவோர்
மறுமைக்கும் இன்பம் நல்கும்
மனமொளிர் முருகோனை மாயவன் மருகோனை
மதித்தலை உடையர் சேயை
எண்ணுக்கும் அடங்கிடா இன்பமே மோதிடும்
எழலாரும் வேளிக் குன்றை
ஏற்றதாய்க் கண்டுமே இருப்பிடங் கொண்டானை
எந்நாளும் புரக்க வென்றே!
10காளி✓
ஆரணி குண்டலி அய்யைஎண் தோளியாம்
அலகையின் கொடியுடைக் காளி
அடல்வல அரியதில் அமர்ந்தவள் அங்கணி
அம்பிகை சாமுண்டி சூலி
நாரணி நீலியாம் நயனமே மூன்றினாள்
நடுக்குறு யாளிமீ தேறும்
நற்புகழ் மாலினி நறுமலர்த் திருவடி
நண்ணியே நாடுவம் யாமே
சீரணி கொண்டஎம் சண்முக நாதனைச்
சிறுகொடி யானைதன் காந்தன்
சிற்சபை மேவிய சிவன்விழித் தோன்றிய
சிறுவனைச் செல்வனைச் செந்தண்
நீரணி நாஞ்சிலில் நீடுயர் குமரநற்
கோயிலு றைந்திடு கோவை
நீறணி யும்சிவ நேசரின் தலைவனை
நித்தமும் காத்திடக் கேட்டே!