முருகன் App
குமரகோயில் அருள்மிகு வேலாயுதப் பெருமாள் பிள்ளைத்தமிழ்
சா. வேலப்பன்
சப்பணிப்பருவம்5 / 11
குமரகோயில் அருள்மிகு வேலாயுதப் பெருமாள் பிள்ளைத்தமிழ் · சா. வேலப்பன்

சப்பணிப்பருவம்

31✓
சீரார் சிவனார் முகமைந்தும்
சிவயின் முகமும் சேர்த்தனையோ
சிறப்புற் றோங்கும் திசையாறைச்
சேர்த்தே முகமாய்க் கொண்டனையோ
பாரார் பரவும் படைவீட்டைப்
பளிங்கு முகமாய்க் காட்டினையோ
பக்தர் பகுத்த மதமாறும்
பரமா ஆறு முகமாச்சோ
தேரார் அறியா ஆதாரம்
தெரிய ஆறாய்க் கொண்டனையோ
தெவிட்டா யின்ப முழுமதியே
தேனே பாலே தெள்ளமுதே
ஆரார் அடிமை அவர்க்காகும்
அன்பே கொட்டாய் சப்பாணி!
ஆரல் அடர்கு மரகோயில்
அரசே கொட்டாய் சப்பாணி.
32✓
மலையை வளைத்த மறையோனை
மதனை எரித்த நுதலோனை
மறிமான் கையில் உடையோனை
மதியை அணிந்த சடையோனை
அலைசெய் ஆற்றைச் சுமப்போனை
அரையில் புலித்தோல் புனைந்தோனை
அரவின் அலங்கல் அணிந்தோனை
அணங்கை அரையில் பதித்தோனைத்
தலைமைப் பூணும் தற்பரனைத்
தக்கன் தலையைக் கொய்தோனைத்
தரணி போற்றுந் தாயவனைத்
தந்தை யாகக் கொண்டவனே
குலைசாய் குமர கோயிலனே
கொட்டி யருளாய் சப்பாணி!
குறைதீர் வேளி மலைக்கரசே
கொட்டி யருளாய் சப்பாணி!
33✓
விதியன் வெதிரச் சிரங்குட்டும்
விறல்கை யதனால், விரையுடனே
வீர நிசிதர் வெருண்டோட
விடும்வேல் கையால், வேழமுகன்
துதிக்கை பற்றி ஊசலெனத்
துள்ளி ஆடும் சிறுகையால்,
தூய அன்பர் துயர்யாவும்
துடைத்துக் காக்கும் திருக்கையால்,
கதியை யிழந்த அருணகிரி
களிக்கக் காத்த திருக்கரத்தால்
கவிவாழ் ஒளவைப் பசிதீரக்
கனியை ஈந்த கரத்தாலே
கொதியார் உள்ளம் குடிகொள்வோய்
கொட்டி யருளாய் சப்பாணி
குறைதீர் குமர கோயிலனே
கொட்டி யருளாய் சப்பாணி!
34பதினான்குசீர் ஆசிரிய விருத்தம்✓
அமராப தியிழந்த ஆயிரங் கண்ணவன்
அயிராணி தன்னைப் பெற்றே
அகமது பாய்ந்தாட அங்கையைக் கொட்டிட
அசுரர்கள் அச்சங் கொட்ட
தமராயு னைக்கொண்ட தவசீலர் தம்மனத்
தண்ணீரை யுனக்குக் கொட்ட
தண்குல வும்கண்ணில் தண்ணருள் கொட்டிடத்
தான்பல்லி யங்கள் கொட்ட
விமலனே யுனதன்பர் விழியிலே நீர்கொட்ட
விழுமழை நீரைக் கொட்ட
விம்மித மாகியே வேணாட்டு வேதியர்
விரைவுடன் மறைகள் கொட்ட
சமனிலாக் குமரகோ யில்தனின் கொற்றவா
சப்பாணி கொட்டி யருளே!
சற்குண சீலர்கள் அற்புதத் தெய்வமே
சப்பாணி கொட்டி யருளே!
35✓
மடக்கொடி யாளொரு மான்வள்ளி தெய்வானை
மாதர்கள் மறுகி டாமே
மாந்திடும் அடியவர் மனமது நோவாதே
மணிமாலை துவண்டி டாமே
தடக்கையில் பிடித்திட்ட தனிவேலும் தவறியே
தாழவே வீழ்ந்தி டாமே
தளிர்மேனி அப்பிய திருநீறு வேர்வையில்
தாக்கிய ழிந்தி டாமே
இடரறு திருப்புகழ் இன்னிசை கேட்கின்ற
இருசெவிக் குண்ட லங்கள்
இரைச்சலுடன் மோதி இற்றிடா வண்ணமே
இருகைகள் சிவந்தி டாமே
சுடர்விடு ஞானகு மாரகோ யிற்குக
சப்பாணி கொட்டி யருளே!
சற்குண சீலர்கள் அற்புதத் தெய்வமே
சப்பாணி கொட்டி யருளே!
36✓
கேட்டவர்க் கேவரம் கேட்டவா றேநல்கும்
கெழுமிய கருணைக் கந்தா
கிடைத்தவுன் னருளாலே கீழ்மையை வீழ்த்திட்டுக்
கிளரொளி ஞானம் பெற்றே
நாட்டவர் நன்மைக்கு நாளுமு ழைத்தனர்
நன்னெறி நாட்டு கின்றார்
நாடியே மக்களும் நல்வழி கொண்டனர்
நாசத்தை விட்டு வந்தார்
கூட்டமாய் மொய்த்துமே கும்பிட்டுக் கூத்தாடிக்
குரவையோ டாடிப் பாடிக்
குரைகழல் சேவித்தார் குமரனைக் கூவிட்டார்
குறையாத அன்பைக் கண்டே
கோட்டம தறுத்திடும் குமரகோ யிற்குக
சப்பாணி கொட்டி யருளே!
கொண்டல்த வழ்கின்ற குமரிநன் னாட்டினாய்
சப்பாணி கொட்டி யருளே!
37✓
ஈசனும் உலகினில் இருப்பதும் உண்மையோ
எந்நிறம் கொண்டு நிற்பன்?
என்றுமே கேட்டிடும் இறுகிய மனத்தரை
இன்னுரை கூறிப் பின்பு
தேசனும் உன்னுடைத் தெள்மனத் துள்ளனன்
தேடியே காண்நீ என்க
திடுக்குற அவர்மனம் தேடவே உன்னுடைத்
திருவடி யார்சி ரித்தார்,
வாசனை மாலைகள் வாங்கிடுந் தோளினாய்
வருத்தந்து டைக்கும் வேலா
வளமயில் ஏறியே வந்திடும் வள்ளலே
வள்ளியை ஆளுங் கந்தா
மாசதை மாய்த்திடும் குமரகோ யிற்குக
சப்பாணி கொட்டி யருளே!
மாமழை சூழ்கின்ற மலைவெளி வந்தவா
சப்பாணி கொட்டி யருளே!
38பன்னிருசீர் ஆசிரிய விருத்தம்✓
திருப்பரங் குன்றமும் திருநகர்ச் செந்திலும்
திருவளர் பழனிமலை
தீவினை யகற்றிடும் திருத்தணித் தலமதும்
திருப்பழ முதிர்சோலை
அருவினை அழித்திடும் அரனிடம் பிரணவம்
அருளிய திருத்தலமும்
அணிமலை யாம்திரு மலையிலும் பிறவுடன்
அற்புத வெள்ளிமலை
ஒருபுனல் சரவணம் ஓங்கிய உளத்திலும்
உயர்ந்தொளிர் கந்தகிரி
ஒளிவளர் சிவநெறி குமரகோ யில்தனை
உறைவிட மாய்க்கொண்டு
குருபர னாகவே குவலயம் ஆள்பவ
கொட்டுக சப்பாணி!
குரைகடல் முத்தெறி குமரியின் குழவியே
கொட்டுக சப்பாணி!
39✓
செந்தளிர் மேனியள் சீறடி நொந்திட
சேடிய ருடன் கூடி
செங்கம லம்நிறை செழிகுள மிறங்கியே
செறிமதி முகந்தாழ்த்தி
சிந்தனை யின்றியே சென்றுமே காட்டிடச்
சிறுகயல் மீன்கண்டு
சிறியவன் பதறவும் சேடிகை கொட்டியே
செவ்விழி நிழல்என்க
சந்தமி குந்திடு சற்குண வதியவள்
'சரவண' வெனக்கூறி
சலசல என்றிட சலமதைக் குடைந்திடூம்
சவிமிகு நாஞ்சிலதின்
கொந்தும ணங்கமழ் குமரகோ யிற்குக
கொட்டுக சப்பாணி
குரைகடல் முத்தெறி குமரியின் குழவியே
கொட்டுக சப்பாணி!
40✓
முத்தெடு பவளம் முதலாம் ஒளிமிகு
முழுமணிப் பொருள்யாவும்
முனைகடல் பெற்றும் முழுதும் நிறைந்திடா
மூடரைப் போலெழுந்து
கொத்தொடு கொத்தாய்க் கொழித்தே யிலங்கிடும்
கோதறு விண்மீனைக்
குதியெனக் குதித்துக் கொள்ளத் திரையது
குரைக்கரம் நீட்டிடினும்
கித்தம திரங்கி சீராய் அலைக்கரம்
சிறைப்படா நிலை கண்டு
சீறியெ ழும்ப சிறுகல் மோதியே
சிதறியே சாய்ந்துவிடும்
கத்துக டலுடை கன்னி நாட்டவா
கொட்டுக சப்பாணி!
கார்வதி குமர கோயில் கந்தனே
கொட்டுக சப்பாணி!