குமரகோயில் அருள்மிகு வேலாயுதப் பெருமாள் பிள்ளைத்தமிழ்
சா. வேலப்பன்
சிற்றில்பருவம்9 / 11
குமரகோயில் அருள்மிகு வேலாயுதப் பெருமாள் பிள்ளைத்தமிழ் · சா. வேலப்பன்
சிற்றில்பருவம்
71பன்னிருசீர் ஆசிரிய விருத்தம்✓
கருமைக் குமரிக் கடல்மண்ணும்
களியாம் நாஞ்சில் வளமண்ணும்
கலந்தே பன்னீர் தனில்பிசைந்து
கட்டிக் காக்கும் சிற்றிலிதே;
அருமை அரும்பு மலராலே
அழகாய்க் கோலம் அமைத்திட்டே
ஆவல் மோத அணியாக
ஆடும் சிறுமி எமைப்பாராய்;
பெருமை துள்ளும் புனிதோனே
பெரும்பேர் முருகப் பெருமானே
பிரமன் தலையை உடைத்தேயுன்
பிதாவும் கொதும் மெய்ப்பொருளே
இருமை வினைகள் எரிப்போனே
எளியேம் சிற்றில் சிதையேலே!
எழிலார் குமர கோயிலுறை
எம்மான் சிற்றில் சிதையேலே!
72✓
சிறியேம் சிற்றில் சிதைப்பதற்கே
சீர்சார் அமரர் சிறையல்ல,
சினக்கும் அவுணர் அரணல்ல,
சீறும் கிரௌஞ்ச மலையுமல,
நெறியாய் வாழும் நேசரைபே
நெருக்கும் பிணியோ அதுவல்ல
நிமலன் உனையே பாடிமனம்
நிறையும் புலவர் மிடியல்ல,
பொறிகள் கலங்க பிரம்மனுக்குப்
போட்ட குட்டுக் கிலக்கல்ல
பொன்னின் வண்ணத் தெம்மானே
பிறவா யாக்கைப் பெம்மானே
செறிமும் மலத்தைச் சிதைப்பதுபோல்
சிறியேம் சிற்றில் சிதையேலே
செழிப்பார் குமர கோயிலுறை
செல்வா சிற்றில் சிதையேலே!
73✓
ஆண்டி முதலாய் அரசீறாய்
அகத்தே பளிங்காம் அடைவெய்தி
அடுக்கும் உயிரை அருள்மோத
அணைக்கும் பண்பு மிகக்கொண்டு
வேண்டி வேண்டிப் பொருளினையே
வீணே காலங் கழிக்காமல்
விரதங் கொண்டு வினையாற்றி
விளைவை யுனக்கே அர்ப்பணித்து
தூண்டில் புழுவாம் மாயையினைத்
துச்சம் எனவே தாண்டிவரும்
தூய அடியார் சிரந்தனிலே
துலங்கும் பூமன் எழுத்தினையே
தீண்டி அழிக்கும் திருவாடியால்
சிறியேம் சிற்றில் சிதையேலே!
திகழும் வேளி மலைக்குமரா
சேயெம் சிற்றில் சிதையேலே!
74✓
நீரில் மூழ்கி நின்நினைவாய்
நீற்றைப் பூசி, நின்புகழை
நித்தம் பாடி, சிந்தையதில்
நிறையும் அன்பு நீராட்டி
ஊரில் உயர்ந்தோர் இயற்றிவரும்
உண்மை நோன்பு தமைச்செய்தே
ஒன்றாம் உனது படைவீடாய்
ஒளிருங் குமர கோயிலதில்
நேரில் வந்துன் தாள்பணிவோம்
நேசம் மிகவே பணிசெய்வோம்
நிலத்தில் சிறக்கும் வேளிமலை
நின்றே வேங்கை ஆனவனே
ஏரில் மிளிரும் இடங்கொண்டோய்
எளியேம் சிற்றில் சிதையேலே!
இலங்கும் வேலா யுதப்பெருமாள்
எமதாம் சிற்றில் சிதையேலே!
75✓
ஆணி னிடமாய் ஆகியதால்
அடைந்த செருக்கு மிகையாலோ
அருளும் முகமா றானதனால்
அகத்தே மூண்ட செருக்காலோ
வாணி தனக்கும் வழங்குகின்ற
வளஞ்சேர் ஞானச் செருக்காலோ
வந்த செருக்கு வேதாவை
வாட்டிக் குட்டும் செருக்காலோ
வேணித் தலையர் விருப்பமுற
விளக்கும் மூலப் பொருளாலோ
விரையும் கால இடம்பொருளும்
விளக்கா இளமைச் செருக்காலோ
நாணிக் குனியும் நெல்விளையும்
நாட்டாய் சிற்றில் சிதையேலே!
நாடும் குமர கோயிலுறை
நாதா சிற்றில் சிதையேலே!
76✓
நீலக் கடலில் விடந்தோன்ற
நிருதர் அமரர் நிலைகலங்க
நினது தந்தை நீள்சடையன்
நிலைமை மாற்றி அதையுண்டான்;
கோலக் கொடியாள் உன்தாயார்
கொழிக்கும் கருணை அறிவாய்நீ;
கொம்பன் ஆனை முகத்தண்ணன்
கொடிதைச் சாய்க்கும் குணமுடையான்;
ஞாலம் உண்டோன் உன்மாமன்
நாட்டைக் காக்கும் மனமுடையான்;
நல்ல அருளார் குடும்பமதில்
நற்பேர் முருகா வந்துதித்தாய்
சீலச் சிறுமி யாம்கண்டாய்
சிறியேம் சிற்றில் சிதையேலே!
சீரார் வேளி மலைக்குமரா
சேயெம் சிற்றில் சிதையேலே!
77✓
தேடி அவுணர் குலம்யாவும்
தீய்த்த இரக்கம் இல்லாதான்
திகழும் திருவார் உளங்கவரும்
திருடன் எனவே இழித்தோமோ!
தாடிக் கிழவன் உருவாகித்
தவித்தாய் வள்ளிக் கென்றோமோ?
தண்ணார் அருளைத் தானிறைக்கும்
தனித்த பித்தன் என்றோமோ?
பீடில் இடையன் மருமகனே
பெற்ற ஆறாம் முகத்தானே
பிணிக்கும் ஆண்டி என்றோமோ?
பெரியோய் சிற்றில் சிதையேலே!
ஆடிக் காற்றில் அலைபோல
அலைந்தே ஆடும் செந்நெல்சார்
அழகார் குமர கோயிலுறை
அன்பே சிற்றில் சிதையேலே!
78✓
ஆசை மோத அன்பரனும்
அருட்கண் உமையும் அன்புடனே
அப்பா உனையே அள்ளியெடுத்(து)
அணைக்கில் தூசோ அவர்க்காகும்!
ஓசை யிலதாய்த் துதிக்கரத்தில்
உனையே தூக்கி உனதண்ணன்
உரவார் புயத்தே வைத்தாட
உன்கால் புழுதி புரளாதோ?
மாசை நிறத்து மலர்மன்னா
மடவார் இருவர் மறுத்திடுவர்!
மணியே மலரே மாமருந்தே
மதித்தே யிதனை மனங்கொண்டு
தூசை நனைத்தே ஈரமுடன்
தொழுவார் குமர கோயிலுறை
செல்வா சிற்றில் சிதையேலே!
சிறியேம் சிற்றில் சிதையேலே!
79✓
காணும் பொருளும் காட்சிபடா
ககனப் பொருளும் மற்றுமுள
கரணம் ஆதி எமக்கீந்து
கழியச் செய்வாய் கருமலமே;
மாணும் தலைமைச் சிறப்போரும
மதிக்கும் தலைமை நினதன்றோ?
மயங்கும் உயிர்க்குச் செயலுண்டோ?
மன்னே யாவும் நீயன்றோ?
தாணும் விரும்பப் பொருளுரைத்த
தனிவேல் ஞானப் பெருஞ்சுடரே
தவழும் தண்ணார் முகில்பாயும்
தடங்கல் வேளி மலைக்கரசே
பேணுங் குணத்துப் பெருமாளே
பெருக உனையே சரணடைந்தோம்
பெம்மான் சிற்றில் சிதையேலே!
பெரியோய் சிற்றில் சிதையேலே!
80✓
எண்சாண் உடம்பில் ஏற்றமுறும்
எமது தலையை வணங்கவைத்தோம்;
எழிலாய் நினது புகழ்பேச
இனிதே வைத்தோம் வாய்தனையே,
கண்காண் பொருளே நின்வடிவாம்,
கால்கள் சூழும் நின்கோயில்,
கருத்தை ஈர்க்கும் திருப்புகழைக்
காதும் விழைந்து கேட்டுவரும்;
தண்டா யுதனைத் தொழுவதற்கே
தாங்கி யுள்ளோம் கரங்களையே;
தாவும் மனத்தை நினக்காக்கித்
தரணி வாழ்க்கை சிறப்பிப்போம்
வண்டார் சோலை வளங்காட்டும்
வனப்பார் குமர கோயிலுறை
வடிவே சிற்றில் சிதையேலே!
வளமே சிற்றில் சிதையேலே!