குமரகோயில் அருள்மிகு வேலாயுதப் பெருமாள் பிள்ளைத்தமிழ்
சா. வேலப்பன்
தாலப்பருவம்4 / 11
குமரகோயில் அருள்மிகு வேலாயுதப் பெருமாள் பிள்ளைத்தமிழ் · சா. வேலப்பன்
தாலப்பருவம்
21பன்னிருசீர் ஆசிரிய விருத்தம்✓
சுழலுறுங் கோள்கள் பிணங்கியும் மோதியும்
சுழல்கே டாகாமே
சுற்றிலும் ஒலிக்கும் திரைகடல் எழுந்துமே
சூழா தேயுலகை
அழலென அவுணர் அவனியில் புகுந்துமே
அழிவைச் செய்யாமே
அருந்தவ சீலர் அவர்தவப் பயன்தனை
அடையா துழலாமே
முழுவென ஆர்த்து முறையொரைத் தீவினை
மொய்த்தே அணுகாமே
முழுவிருள் மலமும் மூண்டெழுந் தறிவினை
மூடி மறைக்காமே
கழலொலி காட்டிக் காத்திடுங் கடம்பனே
தாலோ தாலேலோ!
தண்பொழில் குமர கோயிலின் குமரனே
தாலோ தாலேலோ!
22✓
ஒருமொழி யாமொரு பிரணவங் கேட்கவே
உம்பரும் உருகிநிற்க
உனதடி பணிந்துமே ஊனினை உருக்கியே
உயர்ந்தவர் சூழ்ந்தேற்ற
அருமறை ஓதியே அந்தணர் ஏற்றிட
அடியவர் இசைபாட
அலகறு அவுணரும் அரண்டுமே ஓடிட
அற்புத வேல்கண்டே
வருமொரு பண்ணொலி வாச்சியம் யாழ்வகை
வாழ்த்தொலி முழக்கிடவே
வள்ளிதெய் வானையை வகையுடன் கூட்டியே
வாகுடன் மயிலேறி
தருமொரு காட்சியாய் தவத்தினர் மாட்சியாய்
தாலல தாலேலோ!
தண்பொழில் குமரகோ யில்வதி குமரனே
தாலல தாலேலோ!
23✓
அழிதொழில் அவுணர் அமரரை வாட்டவும்
அயன்மால் முதலானோர்
அங்கயற் கண்ணி அம்பிகை பாகனை
அணுகி முறையிடவும்
விழிமலர் விரித்தே அறுமுகம் கொண்டுமே
விழிகள் தழல்கொட்ட
விரிவெளி காற்றும் வியன்மிகு கங்கையை
விரவி சரவணத்தே
எழில்மலர் மீதே இலங்கிட இனிதுடன்
எடுத்தே கார்த்திகையார்
இன்சுவை அமுதம் இட்டுமே வளர்த்திட
இணைந்த சண்முகனே
பொழில்கொழி குமார கோயிலின் செல்வனே
தாலோ தாலேலோ!
பொங்கருள் வழங்கும் எங்குலத் தெய்வமே
தாலோ தாலேலோ!
24பதினான்குசீர் ஆசிரியர் விருத்தம்✓
அருள்சார் குமர குருபரன் ஆனவர்
ஐந்து வயதை அடைந்திடலும்
அம்மா' என்னும் அருமொழி இன்றியே
அலைவாய் அமர்ந்தே உன்பாதம்
தெருள்சார் மனத்தில் திடமதைக் கொண்டுமே
தியானம் பெற்றோ ருடன்செய்ய
தீய்த்தாய் வினையே திருவருள் பாய்த்துமே
திருவார் கவியும் கொடுத்தனையே;
பொருள்சார் நின்தாள் புகழ்ந்துமே பாடிய
புகழ்சார் அருண கிரிதனக்கே
பொன்றாப் புலவன் வில்லியையை வென்றிடப்
பெரும்பே றீந்தாய்; இன்றைக்கும்
இருள்சார் உள்ளம் இலங்கிட அருள்மழை
இறைத்தே நிறைவாய் தாலேலோ!
எழிலார் குமர கோயிலின் அழகனே
எந்தாய்! தாலோ தாலேலோ!
25✓
அகிலம் படைத்த அரனார் அவர்தம்
அருகில் அமரும் அம்பிகையும்
அருமைப் பெற்றோர் எனிலோ அதற்கோர்
அளவுப் பெருமை உண்டோசொல்?
முகிலை அனையான் மூன்றாம் உலகை
மூன்றாம் அடியால் அளந்தவனாம்
முறைமை மாமன் முறுவல் முகிழ்க்க
முந்துங் குறைகள் உண்டாமோ?
உகிரைப் பவளம் எனக்கொண் டேபுள்
உடனே எடுக்கப் பாய்ந்திடவும்
உள்ளந் துடித்தே ஓல மிடவும்
உவகை இளைஞர் சிரித்தார்க்க
சகித்தல் இழந்த சவியார் பெண்கள்
சாரும் நாஞ்சில் நாட்டொளிரும்
சந்தக் குமர கோயி லுறையும்
சத்தா தாலோ தாலேலோ!
26✓
திரைகட லுதித்த திருமகள் அழகது
திருவே உனக்கே உரித்தாகும்
திசைமுகன் நாவில் உறைந்திடும் நாமகள்
தெய்வக் கலைகள் உனதன்றோ
விரைவுடன் காக்கும் விறல்மிகு கண்ணனின்
வீரம் விளங்கும் நன்னிடமே
விமலவன் பாகம் விரவிய உமையவள்
விரும்பும் அருளே நீயன்றோ
உரையுடன் மனத்தை உருவியே கடந்திடும்
உருவொன் றில்லா உரவோனே
உணர்ந்திடும் அடியார் உளத்தில் ஒளிர்ந்திடும்
உறுவேல் முருகப் பெருமானே
பரையுடன் பரமன் பார்த்து மகிழ்ந்திடு
பவனே பாலா தாலேலோ!
பருவரைக் குமர கோயிலின் குமரனே
பரனே தாலோ தாலேலோ!
27✓
மணமிகு சாந்தின் மரமதில் செய்திடு
மனிதப் பொம்மைத் தனையேந்தி
மனங்கவர் நறுநீர் மகிழ்ந்துமே ஆட்டியே
மதியால் நீரைத் தாந்துடைத்துக்
குணமிகு அகிலின் குவிபுகை காட்டியே
கோதும் முடியில் அணிபுனைந்து
குறுகிய பிறையாம் குளிர்ந்த நுதனிலே
குங்குமத் திலகம் தீட்டியதன்
உணக்கறு காயம் உடையினை அணிந்துமே
உணவாய்ச் செழுந்தேன் ஊட்டியபின்
உவரியின் முத்தின் உறுபணித் தொட்டிலில்
உறங்க வைத்தே உனைப்பாடும்
கணக்கறு சிறுமிகள் களித்திடுங் குமரியில்
கவினாய் வந்தோய் தாலேலோ!
கழிமல மறுக்கும் குமரகோ யிற்குக
கந்தா தாலோ தாலேலோ!
28பன்னிருசீர் ஆசிரிய விருத்தம்✓
மணிக்குள் ஒளியே மாமருந்தே
மாயோன் மருகா தாலேலோ
மறைகள் போற்றும் மயிலோனே
மலைவைத் தீர்ப்போய் தாலேலோ
பிணிக்கும் பாசம் அறுத்தெறியும்
பிறப்பில் குமரா தாலேலோ
பிடியைப் பிடித்த பெரியோனே
பிரணவ முரைத்தோய் தாலேலோ
அணிவேல் குமரா தாலேலோ
அழகின் அழகே தாலேலோ
ஆறு முகனே தாலேலோ
அமுதச் சுவையே தாலேலோ
பணிவார் உள்ளக் கோயிலன்றிப்
பாங்கார் குமர கோயிலுறை
பரமன் உருவே தாலேலோ
பாலா குமரா தாலேலோ!
29✓
தெளிந்த மனத்துத் திருத்தொண்டர்
திருப்பாட் டோதிக் களித்தாடி
தெய்வத் தமிழின் இசையினிலே
தேவா ரத்தைத் தினம்பாடிக்
குளிர்ந்து அன்புச் சாற்றினிலே
குன்றா ஆர்வ அமுதிட்டுக்
குணங்கள் தம்மைக் கலந்திட்டுக்
குறியாய்ப் படைத்தே உனைஎண்ண
ஒளிர்ந்த மனத்தர் உவந்திடவே
ஒளியாம் ஞான விளக்கீந்தே
உலகில் காத்தும் உலவாத
உண்மைப் பதமும் தந்தருளும்
துளிர்ந்த கருணைப் பெருங்கடலே
துணைவா தாலோ தாலேலோ
துதிசெய்க் குமர கோயிலுறை
தூயா தாலோ தாலேலோ!
30✓
பயனொன் றறியாப் பல்லாசைப்
பாழுங் குழியில் வீழாமல்
பக்தர் எமையே தடுத்தாண்டு
பாடிப் பரவ அருள்காட்டி
அயனும் மாலும் அறியாத
அமுத இன்பம் எமக்கீந்தே
அடியேம் அகமே வந்தொளிரும்
அன்பே அரசே தாலேலோ
நயனாம் நாஞ்சில் நாடென்னும்
நஞ்சை நாட்டை நாடிவந்து
நல்லோர் இதயம் நிலைகொண்டும்
நலிந்தோர் உய்ய நலம்தந்தும்
வியனார் வேளி மலையமர்ந்த
வேலா யுதனே தாலேலோ!
வெகுளும் அசுரர் விழச்செய்யும்
வீரா தாலோ தாலேலோ!