குமரகோயில் அருள்மிகு வேலாயுதப் பெருமாள் பிள்ளைத்தமிழ்
சா. வேலப்பன்
சிறுபறைப்பருவம்10 / 11
குமரகோயில் அருள்மிகு வேலாயுதப் பெருமாள் பிள்ளைத்தமிழ் · சா. வேலப்பன்
சிறுபறைப்பருவம்
81பதினான்குசீர் ஆசிரிய விருத்தம்✓
அறுமு கத்தல அன்பைக் காட்டி
அழகு முடியுங் காட்டியே
அணிந்த வேலை அங்கை காட்டி
அவுணர் அஞ்ச ஆர்த்திடும்
உறுவ லிக்கொள் உருவம் காட்டி
உள்ளம் ஈர்க்கும் அழகதை
உடலி லெங்கும் ஒளிரக் காட்டி
உவகை கொள்ளத் தாளினை
சிறுகத் தூக்கி சிரம் சைத்து
செகத்தி லுள்ளோர் வாழ்த்தவே
சீர்த்த பறையை செங்கை தொட்டு
சிரித்துச் சிரித்து மகிழ்ந்துமே
செறுந ருக்கும் கருணை காட்டும்
சிறப்பு ளாய்மு ழக்குக!
சீர்கு மார கோயில் செல்வ
சிறுப றைமு ழக்குக!
82✓
காம குரோத கடிய குற்றம்
கருத்தை விட்டே ஓடிட
காத லோடு கசிந்து போற்றிக்
கந்தா உன்னைப் பாடிட
வீமங் காட்டும் வினைகள் ஓட
வேந்தர் ஆண்டி நாடிட
விறப்பு மிக்க வெளியி டர்கள்
விலகி ஓடி மறைந்திட
சேமங் கொல்லும் சிறுமை பஞ்ச
செயல்கள் யாவும் நடுங்கிட
சினம டக்கி சிவத்தை நாடும்
சீலர் உள்ளம் ஓங்கிட
ஏமங் காட்டும் இன்ப மேனி
இளவ லேமு ழக்குக!
எழிற்கு மார கோயில் செல்வ
இசைப்ப றைமு ழக்குக!
83✓
குமரி சூழும் குரைக டல்தன்
குரலெ முப்பிக் கூவுது
கொண்மூ சூழ்ந்து குளிரைப் பாய்ச்சி
கொட்டும் மாரி பாயுது
சமரில் வெல்லும் சக்தி வேலும்
சழக்கர் வீழ்த்தித் துள்ளுது
சமமில் லாத சரண பாதச்
சதங்கை வீரம் தெள்ளுது
அமர யின்பம் அருந்தும் தேவர்
அன்பர் இசையை வழங்கினர்
ஆழ்ந்த பக்தி அடியர் கூட்டம்
அதிர நாமம் முழங்கினர்
குமர கோயில் குமர னேநீ
சிறுப றைமு ழக்குக!
குரவர் ஏற்ற குரவை ஆட
சிறுப றைமு ழக்குக!
84✓
அருவ மென்பர் உருவ மென்பர்
அறியொ ணாத சொருபமே
அவனி யெங்கும் ஆக்கிக் காத்தே
அழித்து நிற்கும் சருவமே
உருகு வோர்க்குப் பெருகு வாழ்வை
உவந்த ளிக்கும் உண்மையே
உலப்பி லாத உறுதி யின்பம்
ஊட்டிக் காக்கும் ஒண்மையே
முருகு காட்டி முறைமை கூட்டி
முத்தி காட்டும் முதல்வனே
முனைப்ப கற்றி முதிரு ஞானம்
முற்று மீயும் புதல்வனே!
குருகு மொய்க்கும் குமர கோயில்
குமர னேமு ழக்குக!
குரவர் ஏற்ற குரவை ஆட
சிறுப றைமு ழக்குக!
85பன்னிருசீர் ஆசிரிய விருத்தம்✓
தேய்த்த மதியைத் தியாகேசன்
திருவார் சடையில் தரித்திட்டான்
தீரச் சூரன் இரண்டாகத்
திகழும் இருக்கை கொடிகொண்டாய்!
பாய்த்த அன்புக் குறத்திக்காய்ப்
பாழுங் காட்டில் தினையுண்டாய்
பக்தர் அன்பர் என்றிடிலோ
பரமன் உந்தே மன்கமப்பான்;
வாய்த்த அன்பர் தமிழுக்கோ
வளமை காட்டி வந்திடுவை
வளமார் தமிழும் வன்சிவனால்
வளர்ந்த தன்றோ? அதனாலே
ஆய்தல் செய்தல் அரனாம்நீ
அழகார் குமர கோயிலுறை
அன்பே முழக்கு சிறுபறையே!
அரசே முழக்கு சிறுபறையே!.
86பன்னிருசீர் ஆசிரிய விருத்தம்✓
ஆறு முகத்தால் அறுமுகனாம்
அரனுக் குரைத்த ஆசானாம்
ஆறாம் கங்கை சுமந்ததனால்
அழகுப் பெயராம் காங்கேயன்
ஊறு செய்த தாருகனை
உலைத்த தாலே தாருகாரி
உளமாம் குகையில் உறைவதனால்
உரைப்பர் உனையே குகனென்றே
கூறும் இளமைச் செழிப்பாலே
குழகன் குமரன் ஆனாய்நீ
கொண்ட கார்த்திகைப் பெண்கள்
கொஞ்சி வளர்த்த கார்த்திகேயன்
வேறும் வேலன் வேள்ளனவே
விளங்கும் வேலா யுதப்பெருமாள்
விரைந்து முழக்கு சிறுபறையே!
விசாகா முழக்கு சிறுபறையே!
87பன்னிருசீர் ஆசிரிய விருத்தம்✓
தண்ணார் குமரிக் கடலெழும்பித்
தரையயில் எறியும் மணிமுத்தே,
தகைசார் கல்வி வளங்கொண்டே
தாக்கி எறிவர் நாஞ்சிலரே,
பெண்ணார் எறிவர் பெருங்குழையைப்
பெரிதும் கோழி விரட்டிடவே;
பிரியத் தோடு எருழுவர்
பழனம் எறிவர் விதைகளையே
கண்டோர் மயங்கும் கவின்சிறுவர்
களிப்பால் எறிவர் நெல்மணியைக்;
கையின் கரும்பு வில்லாலே
காமன் எறிவன் ஐமலரே;
மண்ணோர் மதிக்கும் மதியொளியே
முழக்கி யருளாய் சிறுபறையே!
மலைசார் குமர கோயிலனே
முழக்கி யருளாய் சிறுபறையே!
88பன்னிருசீர் ஆசிரிய விருத்தம்✓
வீட்டில் இலங்கும் நினதுருவே
வீதி முழக்கும் திருப்புகழை,
வியன்மார் பெங்கும் விரைசாந்தம்,
வேலின் பெருமை பறைசாற்றும்,
கூட்டில் வாழும் தத்தையதும்,
கூவும் குமரன் திருநாமம்,
குளிரன் புடைய தொண்டருளம்
கொள்ளும் உனது தொண்டினையே
பாட்டின் இசையாய்ப் பழச்சுவையாய்ப்
பரவும் இயற்கை எழிலாகப்
படரும் மலரின் மணமாகப்
பாயுங் காற்றின் ஊறாகக்
காட்டிக் கலந்த தனிமுருகா
முழக்கி யருளாய் சிறுபறையே!
கார்சூழ் வேளி மலைக்கரசே!
முழக்கி யருளாய் சிறுபறையே!
89பதினான்குசீர் ஆசிரிய விருத்தம்✓
காளியாம் தீயவை காயமு னைவாளை
கற்றவர் நெஞ்சம் புக்கு
கலைமகள் என்றுக ளிப்பருள் செய்வாளை,
கடுகியே பொருட்கு விக்க
பாலிதம் கட்டியே பாடுபட் டாரகம்
பார்த்திடும் திருவின் பெண்ணை;
பல்கோடி சீவர்கள் பாவந்தொ லைத்திடும்
பார்வதி தேவி யாளை
மாளிகை மட்குடில் மானிடர் உய்ந்திட
மாண்றம் ஆகு வாளை;
மாண்புறப் போற்றியே மாந்திடும் நன்மைகள்
மன்னனே உன்னால் எய்தும்
வேளிம லைக்கொளும் வேலாயு தத்தனே
சிறுபறை முழக்கி யருளே!
வேணியர் மைந்தனே வேணாட்டுச் செல்வமே
சிறுபறை முழக்கி யருளே!
90பதினான்குசீர் ஆசிரிய விருத்தம்✓
நாட்டிய மாடவே நன்மயி லுண்டிங்கு;
நாதமி சைத்து நிற்க
நற்குயில் வந்தது பொற்குரல் தந்தது
நாலாகும் திசையும் வெல்ல;
மீட்டியே யாழினை மென்குரல் வண்டினம்
மேவிமு ழக்கு துபார்;
மேளம்பி டித்திட மேதையாம் தவளைகள்
மொய்த்தன காண்க நீயே;
தீட்டிய தீந்தமிழ் திருப்புக ழோதிட
தேனொலிக் கிளிக ளுண்டு;
தீதறு தொண்டர்கள் காதுறக் கேட்டனர்
தேனென மாந்திக் கொண்டு
கோட்டம தறுத்திடு குமரகோ யிற்குக
கொட்டுக சிறுப றையே!
கொண்டல்த வழ்ந்திடு குமரிநன் னாட்டினாய்
கொட்டுக சிறுப றையே!