குமரகோயில் அருள்மிகு வேலாயுதப் பெருமாள் பிள்ளைத்தமிழ்
சா. வேலப்பன்
சிறுதேர்ப்பருவம்11 / 11
குமரகோயில் அருள்மிகு வேலாயுதப் பெருமாள் பிள்ளைத்தமிழ் · சா. வேலப்பன்
சிறுதேர்ப்பருவம்
91பன்னிருசீர் ஆசிரிய விருத்தம்✓
அளிகள் மொய்க்கும் ஆயிரமாம்
அணிசார் முளரி முகையவிழ,
அடுந்தீ மூண்ட தென்றலறி
அழகுக் குருகு பலவோட
களிகொண் டயர்ந்து கவினின்றிக்
கதைக்குந் தேரைக் கயம்பாய,
கயல்மீன் பதறிக் கரைதுள்ளும்
கணக்கில் பொய்கைக் கவின்காட்ட
தளிர்சார் தண்மைக் கிளைகளது
தழையப் பூத்துக் காய்த்திலங்கித்
தலையால் உணவைத் தானாக்கித்
தரணிக் கீயும் தருவோங்கும்
ஒளிசார் குமரி நாட்டிறைவா
உருட்டி யருளாய் சிறுதேரே!
ஓங்கும் குமார கோயிலனே
உருட்டி யருளாய் சிறுதேரே!
92✓
உன்னை அறியும் ஆர்வமிலேன்
உணர்வை அடக்கும் உறுதியிலேன்
உலகப் பொருளில் உழல்கின்றேன்
உய்ய வழியோ உணருகிலேன்
என்னை அறியும் அறிவுபெற
ஈசன் தமிழை இனிக்காட்டி
என்றும் அடியார் திருக்கூட்டம்
இடையில் இருக்க அருள்கூட்டி
முன்னை வினைகள் முழுதொடிய
முளரித் தாளை முன்னீட்டி
முகிழும் அன்புக் கடல்மோத
மூத்தோர் அடியார் தமைப்பேண
உன்னற் கரியாய் உளங்கொண்டே
உருட்டி யருளாய் சிறுதேரே!
ஓங்கும் குமர கோயிலனே
உருட்டி யருளாய் சிறுதேரே!
93✓
பொன்னின் முடிசார் தலையாறும்
புகழ்சார் விழிகள் மூவாறும்
பிரணவப் பொருளைப் பேசுமொரு
பெருமை மிளிரும் திருவாயும்
உன்னும் அடியார் குறைகேட்கும்
ஓரா றிரட்டைத் திருச்செவியும்
ஓங்கி ஒளிரும் நாசியதும்
உறுதிண் புயங்கள் ஈராறும்
தன்னே ரில்லாத் தனிக்கடம்ப
தாரைத் தரித்த திருக்கழுத்தும்
தரள மாலை தவழ்மார்பும்
தரணி காக்கும் கரங்களுடன்
பொன்னேர் முளரித் தாள்கொண்டோய்
உருட்டி யருளாய் சிறுதேரே!
பொய்யாக் குமர கோயிலனே
உருட்டி யருளாய் சிறுதேரே!
94✓
பிறப்பும் இறப்பும் அறியாத
பெரிதாங் குணங்கள் குறியாத
பிரிந்து சென்று புகுவதற்குப்
பிறிதோர் இடமே இல்லாத
சிறப்பில் சினமே புரியாத
சீறி அழிக்கத் தெரியாத
சிறிதும் துன்பம் பொழியாத
செறுநர் எவரும் அழியாத
மறப்பும் நினைப்பும் அடையாத
மறைக்க மறையே கிடையாத
மருளாம் காசும் அற்றவனாய்
மாயை உடம்பை ஏற்றவனாய்
உறக்கம் இலாத முருகோனே
உருட்டி யருளாய் சிறுதேரே!
ஓங்கும் குமர கோயிலனே
உருட்டி யருளாய் சிறுதேரே!
95✓
நிறைவாம் தவத்து நாரதரும்
நிலைக்கும் வேள்வி தனைச்செய்ய
நிசிரர் அஞ்சும் கிடாவொன்று
நிமிடம் தோன்றி நின்றார்த்து
பறையாய் முழங்கிப் பாய்ந்துவர
பதறி ஓட எல்லாரும்
பலம்சார் வீர வாகுவினால்
பணியச் செய்தே அதனையுமோர்
மறைகள் போற்றும் வாகனமாய்
முறையாய்க் கொண்ட மால்மருகா
மாந்தர் புரியும் சிறுமையினை
மாற்றி யருளும் வேல்முருகா
குறைகள் தீர்க்கும் குமரேசா
உருட்டி யருளாய் சிறுதேரே!
குமர கோயில் குருபரனே
உருட்டி யருளாய் சிறுதேரே!
96பதினான்குசீர் ஆசிரிய விருத்தம்✓
உலகம் பற்பல உருள்சக் கரமதாய்,
உயர்ந்து பரந்த வான்வெளியை
ஒளிரும் நீலநல் தேராய்க் கொண்டுநீ
ஓட்டி இயக்கும் அஞ்ஞான்றே
அலகில் உடம்பினை அணிதேர் ஆக்கியே
அதில்சார் ஆன்மா தனிலேறி
அஃதின் பொறிகளும் அந்தக் கரணமும்
அடவிப் புலியாய் அதைவாட்ட
கலகப் புலன்வழி கடவித் தேரினைக்
கன்மம் மாயை தனையுட்டிக்
கரிய ஆணவம் கழித்தே கதியினைக்
காட்ட காயத் தேரோட்டும்
உலப்பை யறுத்திடும் உயர்வே லாயுதா
உருட்டி யருளாய் சிறுதேரே!
உறுவேல் துணைதரும் குமர கோயிலாய்
உருட்டி யருளாய் சிறுதேரே!
97பதினான்குசீர் ஆசிரிய விருத்தம்✓
ஆணவக் கருவுறை அழுந்திக் கிடந்தஎம்
அழுக்கை யகற்றத் தனுதந்தே
அதந்துணை யாகவே கரணம் புவனமும்
அதிகப் போகம் அளித்திட்டே
வேணநல் லறிவுடன் வேட்கைச் செயல்களை
விதவி தமாக எமக்கீந்து
வினைகளைப் பெருக்கியே விருப்பைச் சுருக்கியே
விளக்கி அறிவை வினைதாண்டிப்
பேணவே உன்றனைப் பெருஞ்சீர் தந்துமே
பிறவி தீய்க்க வழிகாட்டிப்
பித்தரைப் போல்எமைப் பத்தர் ஆக்கியே
பெருவாழ் வதனைப் பெருக்கமனக்
கோணம தகற்றிடும் குமர கோயிலின்
குகனே உருட்டாய் சிறுதேரே!
கொண்டனி தந்தவழ் குமரி நாடதின்
குரவா உருட்டாய் சிறுதேரே!
98பதினான்குசீர் ஆசிரிய விருத்தம்✓
நீலக் கடலதில் நீந்தும் மீனினம்
நெடிதாம் திரைகுதித் தோடிவரும்
நீரார் நதியதன் நடுவே பாயவும்
நீண்ட ஆறதன் சினைவாளை
சாலப் பயந்துமே சட்டென் றார்த்துமே
சடுதி செழுங்கரை அதுபாய
சாந்தப் பசுவது விசக்கென் றெழுந்துமே
சவியார் பழனமே பாய்ந்திடவும்
ஓலம் இட்டுமே ஓடிக் குருகினம்
ஓங்கும் தழைமரம் மோதிடவே
உறையுங் குரங்கினம் உயரப் பாய்ந்திட
உடையும் தேனடைச் சாறொழுகிக்
கோலம் கொழியொரு குமர கோயிலின்
குகனே உருட்டுக சிறுதேரே!
கொண்டல் நிதம்வரும் குமரி நாடதின்
குரவா உருட்டுக சிறுதேரே!
99பதினான்குசீர் ஆசிரிய விருத்தம்✓
கூறும் அடியார் கூட்டமும் குடும்பம்
குலையா தோங்கிடக் குலம்வாழக்
குறுக்கும் எண்ணம் குடிபெயர்ந்தோடக்
குளிர்ந்து தழைத்திடக் குவலயமும்
நீறும் நின்தாள் நினைவதும் நிறைவாய்
நிலைத்து நின்றுமே வாழ்ந்திடவும்
நின்தண் ணருள்பாய் பன்னலக் கோயில்
நிலத்தில் என்றுமே ஒளிர்ந்திடவும்
பேறும் புகழும் பெற்றுமே வாழ
பிணிகள் நீக்கியே சுகங்காணப்
பெற்றோர் மற்றோர் பெருவுல கத்தில்
பெருமை வாழ்வது வாழ்ந்திடவும்
ஏறும் மயிலில் எழுந்தருள் செய்தே
எம்மான் உருட்டுக சிறுதேரே!
ஏர்சார் குமர கோயிலின் குகனே
எந்தாய் உருட்டுக சிறுதேரே!
100பதினான்குசீர் ஆசிரிய விருத்தம்✓
கானமே வளர்கொடி கன்னி வள்ளியும்
கவினார் தெய்வநல் யானையொடு
கடுவினை யகற்றிடும் கடிவேல் வாழியே
கதியார் மயிலதும் வாழியவே
வானவர் வணங்கிடும் வனப்பார் சேவடி
வளமார் மார்பொடு திருநுதலும்
வாரிவ ழங்கிடும் வள்ளல் திருக்கரம்
வாழ்க என்றுமே வாழியவே
கூனலு ளத்தவர் குறைகள் தீர்த்திடும்
குளிர்கண் ஆறிரண் டும்வாழ்க
குவலயம் எங்குமே பவத்தை அறுத்திடும்
குறுந கைபுரி முகம்வாழ்க
ஊனம் தொழித்திடும் உயர்வே லாயுதா
உருட்டி யருளுக சிறுதேரே!
உறுதுணை குமரகோ யில்வாழ் குமரனே
உருட்டி யருளுக சிறுதேரே!