குமரகோயில் அருள்மிகு வேலாயுதப் பெருமாள் பிள்ளைத்தமிழ்
சா. வேலப்பன்
செங்கீரைப்பருவம்3 / 11
குமரகோயில் அருள்மிகு வேலாயுதப் பெருமாள் பிள்ளைத்தமிழ் · சா. வேலப்பன்
செங்கீரைப்பருவம்
11பதினான்குசீர் ஆசிரிய விருத்தம்✓
ஞாயிறும் திங்களும் ஞாலமும் பிறவும்
நலமாய்க் கறங்க விசைதந்தே
நன்றதன் அச்சினில் நலமுடன் இயக்கி
நல்லூண் ஈந்தே உயிர்கட்கு
மாயிருள் ஆணவ மறைப்பினை யகற்றி
மனத்தில் ஞான ஒளியேற்றி
மறைபொருள் விளக்கியே மறுமையை விலக்கி
மாந்தர்க் காகும் ஆசையெனும்
நோயினை அகற்றிடும் நுதல்விழிச் செல்வா
நோன்பார் வள்ளி தனையெண்ணி
நெடிதொளிர் வேளியாம் மலையதை நாடும்
நெடுவே லாயுதப் பெருமாளே
தாயினை மிஞ்சிடும் தண்ணருள் குமரா
தானா டிடுக செங்கீரை!
தனிவளக் குமரகோ யில்தனில் உறையும்
தவமா டிடுக செங்கீரை!
12✓
உள்ளம தேகி உயிருடன் ஒன்றி
ஒளித்தே இயக்கும் எம்மானே
உன்னுடைச் செயலை உணரவல் லேமோ
உருகும் இதயம் ஈவோனே
கள்ளம தறியாக் கன்னியாம் வள்ளிக்
கரத்தைத் தாங்கும் கடம்போனே
கார்குழல் தெய்வ யானையோ டமரும்
கந்தா கடம்பா கற்பகமே
வெள்ளம தணைக்க வாவியில் தோன்றும்
விசாகா விமலா சர்வனனே
விளங்குறு மீன்கள் விரும்பியே வளர்க்க
விண்ணவர் துன்பம் துடைத்தோனே
வள்ளலெம் விரகா வடிவுறு குமரா
வனப்பா டுகவே செங்கீரை!
வளமிகு குமர கோயிலின் தலைவா
வந்தா டுகவே செங்கீரை!
13✓
அடியவர் ஓதும் அருமறை கேட்கும்
அணிசெவி தனிலே குண்டலமும்
அரிதிரு மாலின் இருதிரு மக்கள்
அணைந்திடு மார்பில் மாலைகளும்
பிடியல ணிந்த பீடரை தன்னில்
பெருக்கொலி பொற்பூண் கிண்கிணியும்
பிரியமாய்த் தண்டை சிலம்பொடு சதங்கை
பிழையறு வெண்டை யணிகளுடன்
முடியதில் முத்து முடியதைச் சூடி
முருகனே வந்து முகங்காட்டி
முழந்தா ளிட்டு முளரியாம் திருக்கை
முன்பதாய் மகிழ்ந்தே ஊன்றியுமே
வடிவழ கோடு வந்தருள் கூட்டி
வனப்புட னாடாய் செங்கீரை!
வளமிகு குமர கோயிலின் தலைவா
வந்துட னாடாய் செங்கீரை!
14✓
கன்னித் தமிழின் கவின்சார் நாஞ்சில்
கடல்தன் முத்தின் களிசிரிப்பும்,
காரிகை நல்லார் காட்டும் முறுவல்
கலந்தே கலக்கும் கடுஞ்சிரிப்பும்
நன்னீர்ப் பொய்கை நற்றா மரையின்
நளினச் சிரிப்பும் நாடெங்கும்
நறுமலர் முல்லை நகைக்கும் நகையும்
நதிபாய்ந் தார்க்கும் நற்சிரிப்பும்
பின்னல் ஒழித்த பெரிதாம் கருணைப்
பெரியார் சிந்தும் புன்சிரிப்பும்
பிறவுயிர் காத்துச் சிறப்பாய் வாழ்வோர்
பெய்யும் சிரிப்புங் கண்டிங்கே
கன்னல் சுவையே கருதும் அமுதே
களித்தா டிடுக செங்கீரை!
கதிதரு குமர கோயிற் குமரா
கவினா டிடுக செங்கீரை!
15✓
ஓங்குபு கழ்பெறும் ஒப்பறு பரங்கிரி
உறைபவ ஆடுக செங்கீரை
ஒருகனி யஃதினால் பழனியில் மேவிய
ஒளியே ஆடுக செங்கீரை
தீங்கறச் செந்திலின் திரைகட லமர்ந்திடு
தீரனே ஆடுக செங்கீரை
திருவுடை ஏரகம் ஒருபொரு ளுரைத்துமே
திகழ்ந்தவர் ஆடுக செங்கீரை
ஏங்கிடும் அடியவர் இதயமே குளிர்ந்திட
எழில்மிகு குன்றுகள் தோறமர்ந்தே
எமக்கினி தாகவே இன்னருள் செய்திடும்
இறைவனே ஆடுக செங்கீரை
தீங்குலைப் பழமுதிர் சோலையின் தலைவனே
திருவுடன் ஆடுக செங்கீரை!
திருப்பதிக் குமரகோ யிற்கும ரேசனே
தேவனே ஆடுக செங்கீரை!
16பன்னிருசீர் ஆசிரிய விருத்தம்✓
அலைபாய்ந் தொளித்த அரக்கனையும்
அறுத்தாட் கொண்ட அதைநினைந்தோ,
அறுசீர் உருவாய்ச் சரவணத்தில்
அழகாய் ஆன திறங்குறித்தோ,
மலைச்சேய் அணைக்க ஒருருவாம்
மகனாய் ஒளிர்ந்த தனைநினைந்தோ
மதுரக் காதல் வள்ளிதனை
மணக்கக் கொண்ட உருக்கண்டோ,
கலைத்தாய்க் கணவன் சிரங்குட்டி
காவல் வைத்த துளங்கொண்டோ,
கறைக்கண் டனுமே களிகூர்ந்த
கருவாம் பிரணவப் பொருள்நினைந்தோ
இலைவேல் விடுத்தே இடர்களையும்
எம்மான் ஆடாய் செங்கீரை!
இணையில் லாத வேள்விமலை
இளையோய் ஆடாய் செங்கீரை!
17✓
புன்மை காட்டும் புல னைந்தைப்
புறத்தே தள்ளும் விறல்கொண்டோர்
பிணியாம் ஆறாம் உட்பகையைப்
பிரித்தே ஓட்டும் பெரியோர்கள்
இன்மை தனையே இலதாக்கும்
இணையில் தவத்தோர் அறுதொழிலோர்
இறைவன் புகழை எஞ்ஞான்றும்
ஏற்றித் திரியும் இதயத்தோர்
நன்மை அறவோர் இணக்கமதை
நாளும் போற்றும் நல்லோர்கள்
நலமாம் அடியார்த் தொண்டதையும்
நாதன் தொண்டும் புரிவோர்கள்
வன்மைப் பக்திப் பெருக்கோடு
வாழ்ந்தார் ஆடாய் செங்கீரை!
வளரும் குமர கோயிலுறை
வரதா ஆடாய் செங்கீரை!
18✓
யாமே செய்தோம்' என்போர்கள்
யாண்டும் உளரே, இந்நிலத்தில்
எமக்கோர் செயலும் உளதோகாண்
இதனை யறிய வல்லேமோ
தாமே செய்தாற் போலாக்கித்
தனித்தே நின்று கடவியெங்கள்
தலைநின் றார்க்கும் வினையொழித்துத்
தருவாய் அருளைத் தற்பரனே
பூமே லயனின் சிரங்குட்டிப்
பொறிகள் கலங்கச் செய்தவனே
புகழ்சார் பகழிக் கூத்தனிடர்
போக்கப் பிள்ளைத் தமிழ்கொண்டோய்
ஈமே வுஞ்செம் மாலையணி
இறையா டிடுக செங்கீரை!
இனிய குமர கோயிலுறை
இதமா டிடுக செங்கீரை!
19✓
அரனார் அரவம் அசைந்தாட
அம்பாள் உமையும் அகமகிழ
ஆனை முகத்தன் குதித்தாட
அமரர் துள்ளி இசைபாட
சரவ ணத்தாய் அறுவருமே
சண்முகத் தைக் கண்டாட
சதங்கை தண்டைக் கழலுடனே
'சலசல' வென்றே ஆர்த்தாட
உரவார் சூரன் உயிர்கொண்ட
உறுவேல் துள்ளி உவந்தாட
உவகை கொண்டே மயிலாட
உயரே சேவற் கொடியாட
கரத்தை ஊன்றிக் கழுத்தசைத்துக்
கதியா டிடுக செங்கீரை!
கவினார் குமர கோயிலுறை
களிப்பா டிடுக செங்கீரை!
20✓
மானின் மருளல் குதிகண்டு
மறப்போர் வேடன் மயங்கிடவும்
மருங்கே வந்த மனையாளும்
"மான்தான் சிறப்போ, நானிலையோ"
தேனின் மொழியில் அவள்கூறித்
திரும்பி ஊடி நின்றிடவும்,
திகைத்த வேடன் இன்சொல்லால்
"தீர்வாய் கோபம்" எனக்குழைய
மீனின் கண்ணாள் மனம்மாறி
மிடுக்காய்ச் சிரிப்பொன் றுதிர்த்திடவும்
மகிழ்ந்தே அவனும் துள்ளியதால்
மோதி வீழ்த்த தேனடையைக்
கானின் ஆறாய்த் தேன்பாய்தல்
கண்டா டிடுக செங்கீரை!
கவினார் குமர கோயிலுறை
களிப்பா டிடுக செங்கீரை!