முருகன் App
குறுக்குத்துறை குமரன் பிள்ளைத்தமிழ்
வித்துவான் தி. சு. ஆறுமுகம்
காப்பு1 / 11
குறுக்குத்துறை குமரன் பிள்ளைத்தமிழ் · வித்துவான் தி. சு. ஆறுமுகம்

காப்பு

கணபதி காப்பு✓
காராரும் மெய்யன் கணபதிபொற் றாட்பணிந்து
சீரார்பிள் ளைத்தமிழும் செப்புவேன் — நீரருந்
திண்பொருநை சூழுந் திருவுரு மாமலையன்
விண்புகழுன் வேலவன் மீது .
2கலைமகள் காப்பு✓
குறுக்குத் துறைவாழ் குமரனைப் பிள்ளை
உருக்காட்டி யித்தமிழ்யா னோதப் — பெருக்காருங்
கல்விக் கிறைவி கலைமகள் தன்னருளை
நல்விதமா யீவாள் நயந்து.
3தமிழ்ப்புலவர் காப்பு✓
நக்கீர ராதி நலமார் தமிழ்ப்புலவர்
எக்கேடுஞ் சூழா தெனைக்காப்பர் — சொக்காரும்
வேலவன் மீது வியனார் தமிழுரைக்கும்
பாலக னென்பால் பரிந்து.
4அவையடக்கம்✓
முத்துக் குமார சாமிமிசை
மொய்ம்பார் குமர குருபரனும்
முருகார் சேயூர் முருகனுக்கு
முனைந்தே வீர ராகவனும்
கத்துங் கடல்சூழ் செந்திலுக்குக்
கவிஞன் பகழிக் கூத்தனும்வேற்
கந்தன் திருவி டைக்கழிமேல்
கலையார் மீ.சு.பிள்ளையரும்
தெத்தும் பாலாற் றணிகரைசேர்
திருவி ரிஞ்சை முருகனுக்குத்
திறனார் மார்க்க சகாயனெனுந்
தேவ னவனுந் திருமலைவாழ்
சத்துக் குமரன் மீதுபண்டா
ரத்தை யாவும் பக்தியுடன்
சாற்றிப் பிள்ளைத் தமிழினிதாய்ச்
சகமேற் கொண்டார் பெரும்புகழே.
புகழ்சேர் தூய பாவலர் தம்
பெருமை யறியா தன்னவர் போல்
பிள்ளைக் கவியான் பாடுவது
பெரிதும் நகைப்பிற் கிடமாமே
இகழ்சேர்ந் திடினு மெதுவரினும்
எண்ணா திந்தத் தமிழ்க்கூறல்
இகலார் புலியின் வரிமான
எளிய பூஞை யிடலொக்கும்
அகழ்சேர் பொருநை யணிகரைபால்
அழகார் பதியாம் நெல்வேலி
யணித்தாங் குறுக்குத் துறைதங்கி
அன்பர்க் கருளுந் திருக்குமரன்
திகழ்சேர் சேயோன் புகழ்பேசும்
திறமார் பனுவ லிதுநோக்கிச்
சிறியே னெளிமை பாராது
தெளிவா ரறிஞர் கொள்வாரே.