முருகன் App
குறுக்குத்துறை குமரன் பிள்ளைத்தமிழ்
வித்துவான் தி. சு. ஆறுமுகம்
சிற்றிற்பருவம்9 / 11
குறுக்குத்துறை குமரன் பிள்ளைத்தமிழ் · வித்துவான் தி. சு. ஆறுமுகம்

சிற்றிற்பருவம்

76✓
விளைத்தே செந்நெல் வளந்தருஞ்செய்
வியனார் களியால் சுவரெழுப்பி
விதமாய் அறைகள் பலவாக்கி
விரித்தே யறலை யவையுள்ளே
இழைத்தே கோலம் மலர்த்தாதால்
எழிலா யெங்கும் வேணபொருள்
யாவுஞ் சேர்த்திங் கில்லமைத்தே
இணைந்தா டிடவே சிறுமியர்யாம்
கிளைத்தே நின்று கனிபழுத்துங்
கிறங்கி வருவார் மயல்தீர்த்தும்
கிளர்ந்தே படரால் நிழல்தனிலே
கூடி நின்றோம் கண்பாராய்
வளைத்தே பாயுந் தண்பொருநை
வளமார் குறுக்குத் துறைவாழும்
வள்ளால் சிற்றில் சிதையேலே
வடிவேல் சிற்றில் சிதையேலே.
77✓
அணிசேர் தெங்கங் குரும்பைகளால்
அட்டி யுள்ளே யடுப்பமைத்தங்(கு)
அறுத்தே கண்ட தென்னோட்டை
யதன்மேல் தூதைக் கலமாக்கிக்
கனிசேர் மலர்வாய் தேனெடுத்துக்
கலந்தே யளவா யுலையேற்றிக்
காசு நீக்கிப் பருமனைக்
களைந்தே வல்சி யெனப்புகட்டி
மணிசேர் பாளைக் கமுகினின்று
வெடித்தே யுதிரும் மணிபொறுக்கி
மலர்கள் தழைகள் கறியாக்கி
மாண்பா யடுதல் பாராயோ
திணிசேர் தோளா மனமிரங்காய்
சிறியேம் சிற்றில் சிதையேலே
தேசார் குறுக்குத் துறைவாழுந்
தேவே சிற்றில் சிதையேலே.
78✓
சரவண பவனே தாள்பணிந்தோம்
சவிநிறை சிற்றில் சிதையேலே
மயிலொளி பவனே தாள்பணிந்தோம்
சமைத்திடு மன்னம் சிதையேலே
பரிபுர பவனே பதம்பணிந்தோம்
படியுறு சிற்றில் சிதையேலே
பவமொழி பவனே பதம்பணிந்தோம்
பனிமலர்க் கறிகள் சிதையேலே
சிரவண மேற்பாய் எம்மொழிநீ
திகழொளி பவனே சிதையேலே
சிறுமியர் புரிந்த தவறேதோ
திரிபுர பவனே சிதையேலே
குரவணி பெரியோய் மறைசொல்லுங்
குழவியே சிற்றில் சிதையேலே
குடியெனக் குறுக்குத் துறைவாழுங்
குமரனே சிற்றில் சிதையேலே.
79✓
கந்தா சந்தா சிதையேலே
கண்ணே மன்னே சிதையேலே
கங்கை மைந்தா சிதையேலே
கவினார் முருகே சிதையேலே
நந்தா விளக்கே சிதையேலே
நலமார் தேவே சிதையேலே
நாதா போதா சிதையேலே
நளினப் பாதா சிதையேலே
சிந்தா மணியே சிதையேலே
சேவற் கொடியாய் சிதையேலே
சேயா தூயா சிதையேலே
சிகிவா கனனே சிதையேலே
செந்தார் மார்பா சிதையேலே
செய்சூழ் குறுக்குத் துறைவாழும்
செல்வா சிற்றில் சிதையேலே
சிறியேம் சிற்றில் சிதையேலே.
80✓
சிதைப்ப தெனநீ எண்ணிடுங்கால்
சிறியே மில்தான் கிடைத்ததுவோ
செகத்தே சிதைக்க வேண்டுபவர்
தெரிவாய் கணக்கி லடங்காரே
வதைப்ப தொன்றே பிறவுயிரை
வரமாய்க் கொண்டு திரிபவரை
வாய்மை மறந்து கோட்சொல்லி
வம்பு புரிந்தே அலைவாரை
உதைப்ப தென்றே எளியார்மேல்
ஓடி வழக்கிற் கிழுப்பாரை
உன்பேர் சொல்லி யேமாற்றி
உலகில் வாழும் பெரியாரை
இதைப்போன் றாரைச் சிதையாமல்
எமதில் சிதைப்பா யோமுருகா?
எழிலார் குறுக்குத் துறைவாழும்
இறைவா சிற்றில் சிதையேலே.
81✓
உருகா யோநீ உளம்விரும்பின்
உவப்பா யெம்பா லுடனமர்ந்தே
உண்டு மகிழ்வாய் சிற்றிலிதை
உலையா தருள்செய் தேகிடுவாய்
முருகா சிறியர் யாம்பெரிதும்
முயன்று செய்த பலபண்டம்
முன்னா லுனக்கே படைக்கின்றோம்
முயலா தேயெம் மில்சிதைக்க
ஒருகா லுண்ணின் மறுகாலும்
உண்டா வுண்டா எனக்கேட்பாய்
உனக்கல் லாது யார்க்கிவைதாம்
உவந்தே யளிப்போம் ஏற்றிடுவாய்
திருகா வளஞ்சேர் ஆவடுதண்
துறையார் குறுக்குத் துறைவாழும்
செல்வா சிற்றில் சிதையேலே
சேயேம் சிற்றில் சிதையேலே.
82✓
மாங்காய் விரும்பி வருஞ்சிறுவர்
மரமேல் கற்கள் பலவீச
மரமார் மந்திக் குழுமலைந்து
மண்டி யடித்தே விழுந்தோடி
ஆங்கார் தெங்கின் முடிதாவ
அலறிக் காய்ந்த நெற்றொன்றே
அடியி லொருமாங் கிளையினிலே
அடர்தேன் கூட்டை நோக்கிவிழப்
பாங்கார் கிளையொன் றதுகண்டு
பதறிக் குறுக்கே விரைந்தேற்றுப்
படர்தேன் கூடு சிதையாமல்
பரிவாய்க் காக்கும் வளநாடா
நீங்கா வளஞ்சேர் தண்பொருநை
நீர்சூழ் குறுக்குத் துறைவாழும்
நேயா சிற்றில் சிதையேலே
நிமலா சிற்றில் சிதையேலே.
83✓
முந்தித் தவமே புரிந்துன்னை
முயன்று பெற்றுக் காப்பாற்றி
முகமே தூக்கிச் செங்கீரை
மொழிந்தே ஆடத் தாலாட்டிக்
குந்திக் கரத்தால் சப்பாணி
கொட்டச் செய்து முத்திமிட்டுக்
கூவி யழைத்து வருகவெனக்
கொஞ்சி குலவி யெடுத்தணைத்தே
அந்திப் பொழுதைக் கடந்துவரும்
அம்பு லிகாட்டிப் பின்னருனை
ஆடி நீவா எனமறுகில்
அனுப்புந் தாயர் தமைவிடுத்து
நொந்திங் குன்னைக் குறைகூறல்
நேர்மை யாமோ உணர்ந்திதனை
நீர்சூழ் குறுக்குத் துறைவாழும்
நிமலா சிற்றில் சிதையேலே.
84✓
நின்னைக் குறையே கூறுவதால்
நேரும் பயனிங் குண்டாமோ
நெருப்பின் வழியே தோன்றியவுன்
நெஞ்சம் சிறிதுங் குளிர்ந்திடுமோ
அன்னை வயிற்றில் பிறந்திருந்தால்
அறிவாய் நீயெம் அருமைதனை
அப்பன் நுதற்கண் வந்ததனால்
அரிவை யாரின்சீர் அறிந்திலைநீ
பின்னை யேனும் பெண்களைநீ
பெண்டாய்க் கொள்ளின் புரிந்திருப்பாய்
பிடியைப் பிணையை மணந்துளநீ
பெண்ணி னருமை யாதுகண்டாய்
தென்னை யோங்கித் தலைகனக்குந்
திருவார் குறுக்குத் துறைவாழும்
செல்வா சிற்றில் சிதையேலே
சிறியேம் சிற்றில் சிதையேலே.
85✓
ஏதோ சினந்து சிறுமதியால்
இகழ்ந்தோ மிதனை யெண்ணாதே
இணையா ரடிகள் நோகாவோ
இங்ஙன் தரையை நீயுழுதால்
போதோ டன்பு பொழிந்தென்றும்
போற்றத் தகுமுன் பொற்பாதம்
புழுதி யளை ந்தே வருந்துவதைப்
பெற்றோர் கண்டால் சகிப்பாரோ
தீதோ டிடவே சென்றடியார்
சிந்தை மயக்கம் சிதைத்திடுநின்
திருவா ரடிகள் எம்குடிலைச்
சிதைத்தல் நீதி யன்றுகண்டாய்
மூதோர் புகழுந் தண்பொருநை
முழங்கும் குறுக்குத் துறைவாழும்
முருகா சிற்றில் சிதையேலே
முதல்வா சிற்றில் சிதையேலே.