முருகன் App
குறுக்குத்துறை குமரன் பிள்ளைத்தமிழ்
வித்துவான் தி. சு. ஆறுமுகம்
வருகைப்பருவம்7 / 11
குறுக்குத்துறை குமரன் பிள்ளைத்தமிழ் · வித்துவான் தி. சு. ஆறுமுகம்

வருகைப்பருவம்

56✓
உருகும் அடியா ருள்ளமதில்
ஊறும் நறுந்தே னேவருக
உறுவார் பிறவிக் கடல்கடத்தும்
உறுதிப் புணையே நீவருக
பெருகு தமிழின் பயன்வருக
பேரா னந்தக் கடல்வருக
புவனம் விளக்கு மொளிவருக
பிள்ளாய் வருக புனமாது
பருகு மெழிலே வருகசிவப்
பழமே வருக ஞானவொளி
பரப்புஞ் சுடரே வருகசிவை
பாலா வருக ஆறுமுக
முருகா வருக என்னாளும்
முகிலார் குறுக்குத் துறைவாழும்
முதல்வா வருக பிரணவமும்
மொழிவோய் வருக வந்தருளே.
57✓
கந்தா வருக கண்ணுதலின்
கண்ணே வருக ஒளிவளரும்
கண்ணின் மணியே நீவருக
கவினார் மயின்மீ தேவருக
நந்தா விளக்கே வருகவுனை
நாடு மெங்கள் மனவிருளை
நலியச் செய்யும் கதிர்வருக
நாதா மெய்ப்போ தாவருக
சிந்தா மணியே நீவருக
சிரித்தே மயக்குஞ் சேய்வருக
தேனார் குதலை மொழியாலே
திணற வைப்போ னேவருக
மந்தா கினியென் வண்பொருநை
வளமார் குறுக்குத் துறைவாழும்
மதலாய் வருக வந்தருளே
மன்னே வருக வந்தருளே.
58✓
வாவென் றடியார் அழைத்திடுங்கால்
வாரா திருக்க வழக்குண்டோ
வாரா திருப்பின் நின்சிகையை
வாரி முடியேன் பூச்சூட்டேன்
ஓவென் றலறி யழுதாலும்
உனையான் பாரேன் மையெழுதேன்
ஒளியார் பணிகள் பூட்டேனே
ஒக்க லேற்றேன் உளமுருகத்
தாவென் றேநீ புலம்படினும்
தருவே னோயான் பாலமுதம்
தண்ணா ரமுத மதிகாட்டித்
தணியே னேயுன் அழுகைதனை
மாவென் றுஞ்சேர் திருவுருமா
மலைவாழ் கண்ணே வந்தருளே
மங்கை வள்ளி மகிழ்மார்பா
மயின்மீ தேறி வந்தருளே.
59✓
வருந்தி யுன்னை யானழைக்க
வாரா திருக்கும் வகையென்னே
வள்ளிக் குறத்தி பின்சென்ற
வம்ப னென்றே பழித்தேனோ
பொருந்தி வாழா மல்மாமன்
பிள்ளை பதுமன் தனைக்குட்டிப்
பிடித்தே சிறையிட் டாயெனவே
பேசி யுனைநான் வதைத்தேனோ
அருந்தீ யேந்து மப்பனுக்கே
ஆசா னென்றே யிகழ்ந்தேனோ
ஆண்டிப் பயலென் றுலகறிய
அலர்சொல் கூறித் தூற்றினனோ
செருந்தி மண்டுந் தண்பொருநை
சேருங் குறுக்குத் துறைவாழும்
செல்வா வருக வந்தருளே
சேயே வருக வந்தருளே.
60✓
அயிலு மொளியைக் கான்றிவர
அரிமால் நெஞ்சங் கனிந்துவர
அடியார் துதிகள் பாடிவர
ஆனை முகத்தோ னாடிவர
மயிலுந் தோகை விரித்துவர
மாண்பார் சேவல் கூவிவர
மறையோன் வேதம் முழக்கிவர
மகவான் கவரி வீசிவர
பயிலு மொன்பான் வீரர்களும்
பாங்கர் விருது கூறிவர
பாவை யிருவோர் பக்கமுற
பால்வெண் யானை மிசைவருவாய்
தொயிலுந் தாருங் கமழ்மார்பா
துதிசேர் குறுக்குத் துறைவாழும்
துரையே வருக வந்தருளே
சுடரே வருக வந்தருளே.
61✓
மாக நாயகனுன் மாம னந்தரணி
மாது மாமியுனக் கன்னவர்
மாரி யேழிலடி நான்கை யேவியுமிம்
மண்ணை நன்குவள மாக்கியும்
ஏக மாகமுறை யேதம் மோர்மருகன்
என்று போட்டியுட னுதவலால்
ஏரின் மாவுழவர் ஏறு போன்றுமுழைத்
தேற்ற மோடு பயிர் செய்வதால்
பூக மாமெனவே கன்ன லைநெல்லைப்
பேணிக் கன்னலென மாந்தரும்
பேத லித்தணுகு மாறு மீறிவளர்
பூவ ளம்பெருகு நாடனே
போக பூமியென லாங்கு றுக்குத்துறை
புண்ணி யாவருக வருகவே
போத நாதனிரு மாது நாதனெனும்
பிள்ளை யேவருக வருகவே.
62✓
ஆறு மாமுகனை கூறு மேழைமொழி
ஐய! நின்செவிக்கொண் டில்லையோ
ஆறி ரண்டுவிழி கொண்டு மென்றனிடர்
ஆண்ட வாஅறிய வில்லையோ
ஏறு மாமயிற்கு மார னேஅயிலை
ஏந்து நாதனெனு மேந்தலே
ஏக னேயடியர் மோக லோபமவை
ஏக வேயருளைச் செய்பவா
மீறு பேரழகி வேட மாதுதனை
மேவி யேபுனமுஞ் சென்றவா
மிக்க பேதையனென் பக்கம் நீயருளி
மேவ ஏனினமுந் தாமதம்
ஆறு தண்பொருநை சேர்கு றுக்குத்துறை
அண்ண லேவருக வருகவே
அந்த மார்முருக சுந்த ராவருக
ஐய னேவருக வருகவே.
63✓
நேமி யானபுவி மீதி லேநதிகள்
வேறு வேறுதிசை யோடினும்
நீடு மாழிதனிற் கூட வேமுடிவில்
நேரு மேயதனைப் போலவே
பூமி மீதுபல சாமி யாமெனினும்
பூச னைமுழுதும் நின்னிடம்
போய டைந்திடுமன் றோவி தேபுதுமை
யல்ல வேவளலார் சொல்லரோ
யாமி ராப்பகலுங் கூடி நின்னடியை
ஏற்றி டாமலய லார்மதம்
ஏகி வேறிறையின் பாதம் நாடிடினும்
யாவு மேபொறுத்து வருகவே
காமி கப்படரும் சீர்கு றுக்குத்துறை
கந்த னேவருக வருகவே
காடு போகிவடி வேடு மாகியலை
காளை யேவருக வருகவே.
64✓
சைவ மேயுலகிற் சார நேகசம
யங்க ளுள்முதன்மை யாவதாம்
சங்க ரன்றனையே யெங்க ணும்நிறைப
ராப ரன் முதல்வ னென்பராம்
பைவ ளைத்தலையும் பாம்பு சூடியவன்
பரவு மாகுருநீ யாதலால்
பாலன் தானெனினும் பன்னு தேவதையுள்
பான்மை யேறியவ னாகுவை
கைவ ளைத்துணையே கந்த னேவருக
காவ லாவருக என்றுயான்
காத லாற்கனியக் கூவி டுஞ்சமயம்
காது மந்தமுறல் ஏன் நபம்
தைவ ரும்மருதஞ் சூழ்கு றுக்குத்துறை
சண்முக காவருக வருகவே
சந்த னக்களபக் கந்த மாரகலச்
சரவ ணாவருக வருகவே.
65✓
நார மோடுமன தாரப் பேரருளை
நாடி யோடிவரும் மேலவர்
நாத னேயுனது பாத மாமலரை
நாழி லாதுதொட நீயவர்
பார மேதொலைய நீறு வாணுதலிற்
பாலித் தேயவரை மாசிலாப்
பாக ராக்கிமலம் மூன்று நீக்கியவர்
பாலுட் காமமுத லாய்வை
தூர வேவிலகு மாறு பேரருளைச்
சோனை போன்றுபொழிந் தாட்கொளும்
தூய்மை யேநினைந்து தேடி யானடைந்து
சூழ்ந்து ளேன்வருக வருகவே
கார டாதுபொழி சீர்கு றுக்குத்துறை
கந்த னேவருக வருகவே
காடு போகிவடி வேடு மாகியலை
காளை யேவருக வருகவே.