முருகன் App
குறுக்குத்துறை குமரன் பிள்ளைத்தமிழ்
வித்துவான் தி. சு. ஆறுமுகம்
முத்தப்பருவம்6 / 11
குறுக்குத்துறை குமரன் பிள்ளைத்தமிழ் · வித்துவான் தி. சு. ஆறுமுகம்

முத்தப்பருவம்

46✓
மெத்தார் வமுடன் நின்தாயர்
மீனாம் அறுவர் தாமூட்டும்
முலையின் தீம்பா லல்லாது
மேவு திசைக ளெண்பாலும்
சத்தாய் விளங்கும் மலைமாதின்
சவியார் நகில்நின் றெழுபாலும்
சாற்றுஞ் சுரவான் மடிசேருஞ்
சளிப்புங் கைப்பும் அறுபாலும்
வத்தாத் தமிழின் ஐம்பாலும்
வளமார் மறையின் நாற்பாலும்
வள்ள லளித்த முப்பாலும்
மணக்கு முன்றன் திருவாயால்
முத்தாய்ச் சொரிந்தே யிருபாலும்
மிளிரும் பொருநை யொருபால்வாழ்
முருகா முத்தம் தந்தருளே
முதல்வா முத்தம் தந்தருளே.
47✓
தேனார் முல்லை சிரிப்பதுடன்
தினையுஞ் சிரிக்கும் புனத்திடையே
சென்றே சேடி மார்களுடன்
சிரித்தே பேசிக் குரலெழுப்பி
மானார் வள்ளி கவண்வீச
மங்கை யவள்தன் இன்குரலால்
மருங்கார் புட்கள் மருளாமல்
மலர மலரத் தாம்சிரிக்கும்
கானார் காட்சி தனைக்கண்டு
கரமே கொட்டி நீசிரித்த
கனியாங் கொவ்வை யிதழாலே
கனிவாய் முத்தம் தந்தருளே
மேனா டெங்கும் ஒளிசிறக்கும்
மேன்மைக் குறுக்குத் துறைவாழும்
முருகா முத்தம் தந்தருளே
முதல்வா முத்தம் தந்தருளே.
48✓
வாலைக் குமரி மடிதனிலே
வாகா யமர்ந்தே அருகிருக்கும்
வாம பாகன் திருமார்பில்
வளமா ரடிகள் கொண்டுதைத்து
பாலைப் பொழியும் ஒருநகிலைப்
பவளச் செவ்வா யாற்சுவைத்துத்
படமார் மற்றொன் றின்நுனியைப்
பற்றி விரலா லேநெருடச்
சேலைப் பழிக்குந் திருவிழியால்
சிறிதே பொய்யாய்ச் சினங்காட்டித்
திடுக்கிட் டேநீ முகமாறிச்
சிணங்கிப் பிதுக்கு மிதழ்குவித்து
மேலைக் காகும் வழிகாட்டும்
முருகா முத்தம் தந்தருளே
மேலாங் குறுக்குத் துறைதங்கும்
மெய்யே முத்தம் தந்தருளே.
49✓
வருகின் றானே தமிழ்ப்புலவன்
வாரி வழங்க நேர்ந்திடுமே
வறுமை பின்னர் நமையணுக
வாடி யுழல்வோ மென்றெண்ணி
அருகிற் புலவன் வருமுன்னே
அகமும் புறமும் அடைத்துவைக்கும்
அமணன் போன்று முடிநிற்கும்
அரும்பா முகைகள் தம்மோடும்
உருகிப் புலவர் நிலைகாணின்
உள்ளத் துடனே முகமலர்ந்தே
உதவுங் குமணன் போலளியை
உவந்தே ஏற்கும் விரிநளினம்
முருகிப் பொலியும் நீர்நிலைகள்
மேவுங் குறுக்குத் துறைவாழும்
முருகா முத்தம் தந்தருளே
முதல்வா முத்தம் தந்தருளே.
50✓
புகலிப் பிள்ளை யெனத்தோன்றிப்
புரைதீர் ஞானப் பாலருந்திப்
புனிதன் தோடார் செவியரனைப்
போற்றிச் சைவம் தனைவளர்த்தும்
இகலிப் பேணா அமணரிடும்
எரியுங் கடந்து வாதுவென்றும்
எளியன் கூனன் பாண்டியனை
இணைத்தே சைவத் திடைதிருப்பி
நகலில் லாத பூம்பாவை
நலமா ருடலம் பெறச்செய்தும்
நயந்தாண் பனையைப் பெண்ணாக்கி
நல்லோர் துதிக்க வாழ்பிள்ளாய்
முகலி மான பிணியறுக்கும்
மொய்ம்பார் பொருநைத் துறைவாழும்
முருகா முத்தம் தந்தருளே
முதல்வா முத்தம் தந்தருளே.
51✓
மேக மோடு திங்க ளீயும்
முத்தி னுக்குண் டாம்விலை
மீன மிப்பி சங்கு நத்தின்
முத்தி னுக்குண் டாம்விலை
பூத மோடு வாழை செந்நெல்
மூங்கி லிக்கு தாமரை
பொருந்து நித்தி லந்த னக்கும்
பேச லுண்டு மாம்விலை
நாக மோடு டும்பி டங்கர்
நல்கு முத்திற் காம்விலை
நாகம் பன்றி ஆவின் தந்தம்
நல்கு மார மாம்விலை
ஏக னேநின் முத்தினுக்கு
யார்ம திப்ப ரேவிலை
ஏர்கு றுக்குத் துறைக டம்ப
இனிய முத்தம் தருகவே.
52✓
ஆட கப்பொன் னால மைந்த
அன்ன வூசல் தொட்டிலில்
அண்ண லேநீ யாடு கின்ற
அந்த நேர மைங்கரன்
நாட அங்கு நீகை யாட்டி
நகைமு கந்தான் காட்டிட
நாலு வாயி னால ணைத்து
நன்கு முத்த மவந்தர
நீட வன்கை நீபி டித்து
நெருடிக் காதைக் கிள்ளியே
நோவு கொண்டுபிளிறு மந்த
நேயன் கோலங் கண்டுநீ
கூட வேந கைக்குஞ் செம்மைக்
கொவ்வை வாய்கு வித்துமே
கோல மார்கு றுக்குத் துறைய
கொஞ்சி முத்தம் தருகவே.
53✓
பூது றந்து சனக மன்னன்
புதல்வி யாகித் தசரதன்
பொன்ம னைப்பு குந்து நாதன்
பின்னர் காடு சென்றுதன்
மீது மோகங் கொள்ளி லங்கை
வேந்த னுள்ளும் நாட்டிலும்
மேவித் துன்ப முற்ற பாரி
மீட்க வென்று வானரம்
சேது கட்டச் சென்று சுற்றஞ்
சேரப் பத்து சென்னியைச்
செருவில் வென்று வாகை கொண்ட
சீத ரன்றன் மருகனே
கோது மேவாக் குறுக்குத் துறைய
குமர முத்தந் தருகவே
கொவ்வை யாமி தழ்கு வித்துக்
கொஞ்சி முத்தம் தருகவே.
54✓
மாசு கொண்ட நெஞ்சன் யானுன்
மீது காதல் கொண்டிலேன்
மாண்பு மிக்குன் கோவிற் காலை
மாலை சுற்ற வந்திலேன்
தூசு நீக்கு முன்றன் செய்ய
துய்ய பாதம் நாடிலேன்
தொண்ட ரோடு கூடி நின்றுன்
துதிக னிந்து பாடிலேன்
ஆசு மிக்க என்னை யும்நீ
ஆட்கொண் டன்பு பாய்ச்சியே
அன்னை தன்னின் பரிவு காட்டும்
அருளை யெங்ஙன் பேசுவேன்
மூசு வண்டு சேர்கு றுக்குத்
துறைய முத்தம் தருகவே
மேவு மன்பர் பாவ மோட்டும்
முருக முத்தம் தருகவே.
55✓
வண்ப லாவை மந்தி கீற
வழிந்து பொங்கு தேறலும்
வண்ணக் கிள்ளை கொத்த வாழை
வாய்ப முத்தின் நறவமும்
திண்ப லால ணிற்க டிக்கச்
சிதறு மாவின் பிரசமும்
தேன்க ரும்பை மேதி தின்னச்
சிந்து கின்ற பிழியுடன்
கண்ப டாத நளின மல்லி
குவளை மீது திண்வரால்
கடிய வேக மோடு பாயக்
கசியுந் தேனிற் கலந்திட
எண்ப டும்போ தேயி னிக்கும்
ஏர்கு றுக்குத் துறையுறும்
ஏந்த லேவா யூறல் சிந்த
இனிது முத்தம் தருகவே.