குறுக்குத்துறை குமரன் பிள்ளைத்தமிழ்
வித்துவான் தி. சு. ஆறுமுகம்
தாலப்பருவம்4 / 11
குறுக்குத்துறை குமரன் பிள்ளைத்தமிழ் · வித்துவான் தி. சு. ஆறுமுகம்
தாலப்பருவம்
26✓
உளமா ரன்புட னுனையே ஆடக
வுயர்பொன் தொட்டிலிற் றான்கிடத்தி
உவந்தே யாமிவண் தாலாட் டிடவினும்
உறங்கா தேனழு கின்றாயோ
வளமார் மேதிகள் வதியார் கயத்திடை
வந்தே நீலமும் மேய்ந்தலைய
வாகார் மீன்பல மருண்டே துள்ளியும்
வானில் பாய்ந்துதி ரும்பிவிழ
நளமார் பாசிலை நடுவண் வீழ்ந்தொரு
நலிவார் வெண்கயல் தான்துடிக்க
நாடும் ஓதிமப் பேடொன் றன்னதை
நலமா யாட்டியு றங்கவிடும்
வளமார் பேரெழிற் குறுக்குத் துறையுறை
வயவா தாலல தாலேலோ
வண்ணக் குறமகள் நண்ணுந் திருவுரு
வள்ளால் தாலல தாலேலோ.
27✓
தரணி நாயகன் தந்தை முற்றுமித்
தரணி நாயகி தாயலவோ
தனய னன்னவர்க் காயு நின்னுளந்
தயங்கக் காரண மேதுளதோ
தரணி முழுவதுந் தாய்மா மன்முனந்
தாங்கி யுண்டதை யெண்ணினையோ
தார மெனஅவன் பெண்கள் நீகொளத்
தரணி சீதனம் நினக்கன்றோ
அரணி யத்தவ னேகி வாடியும்
ஆடு மாடுகள் பின்சென்றும்
அல்லற் படுபவ னன்றோ இஃதுநீ
அறிந்தே தாலல தாலேலோ
பரணி யடுத்தவர் பரிவாய்ப் போற்றிய
பாலா தாலல தாலேலோ
பாங்கார் தொல்பதி குறுக்குத் துறையுறை
பவனே தாலல தாலேலோ.
28✓
ஒருகால் தொட்டிலை யெட்டி யுதைத்திட
ஒருகா லைக்கரம் பற்றியதன்
உருவார் பெருவிர லுன்வாய் தன்னுற
உவந்து குதப்பிநீ தாலேலோ
அருகால் நெஞ்சும கிழ்ந்தோ னைங்கரன்
ஆனை முகத்தவ னோடிகலி
அகல விகடமும் புரிந்த சோர்வற
அன்பே தாலல தாலேலோ
பெருகால் கள்பல பொழிய நீர்பொழி
பொருநைச் செல்வனே தாலேலோ
பிறையைச் சூடிய இறைவர்க் கோதிய
பெரும தாலல தாலேலோ
மறுகார் மங்கலக் குறுக்குத் துறையுறை
மன்னா தாலல தாலேலோ
வண்ணக் குறமகள் நண்ணுந் திருவுரு
வள்ளால் தாலல தாலேலோ.
29✓
சங்க மமர்ந்திடுந் தகைசா லெழுமு
சதுர ரன்றொரு நாட்கூடிச்
சடையோன் செய்தருள் தரமா ரகப்பொருள்
தனக்கே ஒவ்வொரு வுரையெழுதித்
துங்க முடையதெம் முரையே யெனவவர்
சொல்லித் தமதுளு மிகல்புரிந்து
துய்யோ னருளிய வாறுன் றுணைதனைத்
தேடி வந்திட அன்னவர்தம்
பங்க மொழிந்திட வாய்பே சாமலே
பரமாம் மெய்யுரை காட்டியருள்
பரமே வணிகனின் பால னெனவரு
பவனே தாலல தாலேலோ
வங்க முறுபொரு நைசேர் திருவுரு
மலைவே லாயுத தாலேலோ
வண்ணக் குறமகள் நண்ணுந் திருவுரு
வள்ளால் தாலல தாலேலோ.
30✓
பாசார் தாமரை யிலையின் மீதொரு
பசுமண் டுகமுந் தான்பதுங்கிப்
பாங்கார் குவளையி லாடோர் தும்பியைப்
பற்றி விழுங்கிடப் பக்கமொரு
தேசார் வெண்ணிற நாரை கண்டதைத்
தேட்ட மோடுவி ரைந்துகவ்வத்
தேடி யலையொரு வேடன் நாரையைச்
சுட்டு வீழ்த்தியெ டுத்தேக
மாசார் தாரணி மீதோ ருயிரினை
மற்றோ ருயிர்பிடித் துண்டலையும்
மகிமை யீதென மகிழும் மாந்தருன்
மலரார் சேவடி தொழவந்தார்
ஆசா ரவருறும் ஆனந் தந்தனை
அறியா துறங்குநீ தாலேலோ
அளியார் காவுயர் குறுக்குத் துறையுறை
ஐயா தாலல தாலேலோ.
31✓
கண்ணே மணியே தாலேலோ
கரும்பே தேனே தாலேலோ
கண்ணின் சுடரே தாலேலோ
கற்பகத் தருவே தாலேலோ
விண்ணோர் முதல்வா தாலேலோ
வியனார் தமிழே தாலேலோ
வேலா யுதனே தாலேலோ
வேடர் மருகா தாலேலோ
மண்ணோர்க் கிறைவா தாலேலோ
மயில்வா கனனே தாலேலோ
மாலின் மருகா தாலேலோ
வளர்சே வலனே தாலேலோ
பண்ணார் கிளிகள் பயில்சோலை
படருங் குறுக்குத் துறைவாழும்
பால குமரா தாலேலோ
பரம குருவே தாலேலோ.
32✓
தேடக் கிடையாத் திரவியமே
தின்னத் தெவிட்டாத் தேன்பாகே
தொட்டால் மணக்கும் சவ்வாதே
சொன்னா லினிக்கும் திருப்பெயரே
நாடக் கிடையாப் பரம்பொருளே
நலிவோர்க் கென்றும் நன்மருந்தே
நால்வே தத்தி னுட்பொருளே
நாவல் லோரின் நற்றுணையே
வேடக் குமரி மணவாளா
வேழக் குமரித் திருநாதா
வினைதீர்த் தருளும் வேளாளா
விரும்பும் அடியார்க் குயர்தோழா
பாடக் குயில்கள் பயில்சோலை
படருங் குறுக்குத் துறைவாழும்
பால குமரா தாலேலோ
பரம குருவே தாலேலோ.
✓
சுனைகள் முற்றுந் தாமரையே
சோலை யெங்குந் தாமரையே
சூழக் கரையிற் குருகாரே
தூய்மை யில்லார் குறுகாரே
வினைகள் தீர்க்குந் திருவடிவேல்
வியனார் தாமரைத் திருவடியே
விண்ணிற் றிரளுங் கரும்புயலே
விளையும் செந்நெல் கரும்பயலே
33✓
மனைகள் தோறும் மங்கலனே
மாதர் கற்பே மன்கலனே
மக்க ளுள்ளந் தண்ணளியே
மலர்கள் மேவும் பண்ணளியே
பனைகள் சூழும் பசுஞ்சோலை
படருங் குறுக்குத் துறைவாழும்
பால குமரா தாலேலோ
பரம குருவே தாலேலோ.
34✓
நாடிப் புனத்தே வேடுவனாய்
நங்கை வள்ளி தனைவிரும்பி
நளின மென்வா யைக்கிளறி
நடுவே வேங்கை மரமாகிக்
கூடிக் குலவிக் குமரனெனுங்
கோலம் மாறிக் கிழமாகிக்
கொம்புத் தேனுந் தினைமாவுங்
கொடுக்க வுண்டு விக்கலொடும்
ஆடிச் சென்று சுனைநீரில்
அவளை யிழுத்து நீவிழுந்தே
ஆடும் ஆட்டத் தயர்வொழிய
அன்பே தாலே தாலேலோ
பாடிக் களிக்கும் பைங்கிளிகள்
பகிலுங் குறுக்குத் துறைவாழும்
பால முருகா தாலேலோ
பரம குருவே தாலேலோ.
35✓
தந்தை மார்பிற் காலூன்றித்
தடந்தோ ளேறி யன்னவர்தம்
தலையார் கங்கை நீர்மொண்டு
தடங்கைத் தீயைப் பெய்தணைத்தும்
சிந்தை யன்பால் தொண்டரிடும்
சிரமா ரருகம் புல்லெடுத்துச்
செவ்வி யிளமான் வாய்கொடுத்தும்
சிறிய பிறையாங் குணில்கொண்டு
தொந்தொ மென்று தமருகத்தின்
தொனியைக் கிளப்பிக் களிகூர்ந்தும்
தோணி யாகப் பிறைமதியைத்
தூய கங்கை தனில்விடுத்தும்
சந்த மோடு நீயாடுஞ்
சலிப்பே தீரத் தாலேலோ
சவியார் குறுக்குத் துறைவாழும்
சண்மு காநீ தாலேலோ.