முருகன் App
குறுக்குத்துறை குமரன் பிள்ளைத்தமிழ்
வித்துவான் தி. சு. ஆறுமுகம்
காப்புப்பருவம்2 / 11
குறுக்குத்துறை குமரன் பிள்ளைத்தமிழ் · வித்துவான் தி. சு. ஆறுமுகம்

காப்புப்பருவம்

6திருமால்✓
பூதங்கு நான்முகன் பெருமிதத் தோடன்று
பொற்கயிலை புகுந்து மூலப்
பிரணவ மறியாது பொறிகலங்கி நின்றிடப்
பிடித்தவனைச் சென்னி குட்டிக்
காதங்குக் கிள்ளியே காவலிடு வேலவன்
கடைவாய்நீ ரொழுகு பாலன்
காமலியுந் திருவுரு மாமலைவாழ் சேயவன்
கந்தனெனுங் குழவி தனையே
மாதங்கு மார்பினன் மழைமுகில் நிறத்தவன்
மாமுனிவர் பாற்பி ழைத்து
மாசிலா ஐயவிஜயர் மண்மீது வந்துழலு
மாறருள் செய்த தூயன்
சேதங்கு சிவனடி தேடியுங் காணாத
செங்கண்ண னாய திருமால்
தீதொன்றும் நேராது தினங்காக்கு மாறவன்
திருவடிக ளேது திப்பாம்.
7சந்தி விநாயகர்✓
கானிலுறு வள்ளியெனும் காதலார் மான்மகளைக்
கடிமணஞ் செயவி ழைந்து
காட்டாத வடிவெலாங் காட்டித்தன் முன்னவன்
கருணையால் வென்ற கோவை
ஊனிலவும் வேலணி யுன்னதனைத் தந்தைக்கும்
உபதேசஞ் செய்த குருவை
உருவாருந் திருவுரு மாமலையின் நாதனாய்
ஒளிர்சேயைக் காக்க வென்றே
மாநிலமென் பதுதனது மாதாபி தாவென
மாண்புட ணுணர்ந்து மன்னார்
மலரடிகள் வலம்வந்து வணங்கியோர் நொடிதனில்
மாங்கனி யடைந்த பாலன்
தேனிலவு மோதகச் செங்கையன் அருகுசேர்
திருமுடிய னைங்க ரத்தன்
திருநெல்லை சந்திவி நாயகனின் சீரடி
சிரமீது கொள்வ மாதோ.
8நெல்லையப்பர்✓
நெஞ்சமதை யோர்நிலை நிறுத்தாமற் கீரனும்
நியமமதில் தவறி நின்ற
நேரமதி லோர்பூதம் நாடிச்சி றையிட்டு
நீராடு மாற தேச
தஞ்சமென அன்னவன் சாற்றுமுரு கேற்றங்குச்
சார்பூதம் கொன்று மஃதால்
தளைப்பட்ட ஆயிரவர் தமைமீட்டி யருளிய
சண்முகனைக் காக்க வென்றே
கஞ்சனொடு மாயனுங் காணாத மேலவன்
கணுவரை யுதித்த முத்தன்
காயவிடு சாலியைக் கடுமழைப் பெருக்கினிற்
காத்துலற அருள்பு ரிந்தோன்
பஞ்சனைய சீரடிப் பாவையாய் காந்திமதி
பாகமுறு பரம நாதன்
பழனஞ்சூழ் திருநெல்லைப் பதிநெல்லை யப்பனின்
பாதமலர் சிந்தை செய்வாம்.
9காந்திமதி✓
புழைதங்கு நெடுங்கரப் பிள்ளையாம் யானைக்குப்
பின்வந்த சிறிய பிள்ளை
பேரானை யென்னுமயி ராவதம் பெறுயானை
பின்தொடரு மிளைய களிறு
மழைதங்கு திருவுரு மாமலையில் மேவிய
மயிலேறு தூய காளை
மானீன்ற மான்மிசை மையலுறு வேடுவ
மதலைதனைக் காக்க வென்றே
கழைதங்கு முத்தருளங் களிநடங் கொளுமாறு
கவின்பெறு தூய முத்தும்
கருநீல மணியெனுங் கண்டனிடப் பாகமே
காணலுறு நீல மணியும்
உழைதங்கு பவளநிற ஓங்கற்பாற் றாவியணை
உயர்பசுங் கொடியு மாகி
உலகீன்றுங் கன்னியாய் ஒளிர்காந்தி மதிபாதம்
உரிமையுடன் சிந்தை செய்வாம்.
10இலக்குமி✓
மாங்கனிக் காகமுனம் மாதாபி தாவிட்டு
மலைதேடிச் சென்ற ஆண்டி
மண்டையோட் டினையேந்திப் பலியேற்று வாழுமாண்டி
மகனாய சிறிய ஆண்டி
தீங்கனி யெனவள்ளி நாயகியை நாரதன்
செப்புமுரை கேட்டு மயங்கித்
திணறிடும் மூதாண்டி தானெனவே மாறிய
சேயவனைக் காக்க வென்றே
சேங்கமல நாண்மலர் சேர்நங்கை பாற்கடல்
தோன்றியநற் பேடை யன்னம்
திண்டாடு மேழையர் சேமிப்பி லின்றியவர்
சிந்தையுறு செல்வ மங்கை
பூங்கணை யனங்கனைப் பெற்றதிரு மாதுகலை
பெற்றவரை யிகலுந் தேவி
புயல்வண்ணன் மார்புறை பொன்மக ளிலக்குமி
பொன்னடியை வாழ்த்து கிற்பாம்.
11நான் முகன்✓
உந்திக் கமலந் தனதகமாய்
உறைந்தே யுலகைப் படைப்பவனும்
ஓதி மப்புள் ளுடையவனும்
ஒருநான் குசிரங் கொண்டவனும்
சந்தி ரனைச்சூ டரன்முடியைச்
சற்றும் அறியாப் பொய்யவனும்
சகல கலையாள் நாதனுமாம்
சதுர்வே தனையே போற்றிடுவோம்
தந்திக் கருமைத் தம்பியுமாய்த்
தந்திக் கினிய நம்பியுமாய்த்
தந்தைக் குயர்ந்த தேசிகனாய்த்
தாசர்க் கெளிய தாசனுமாய்
மந்தி குலவும் மாம்பொழில்சூழ்
மல்லல் குறுக்குத் துறைமேவும்
மயிலோன் சேவற் கொடிகொண்ட
மதலை தன்னைக் காத்திடவே.
12கலைமகள்✓
ஆய கலைகள் நான்கினோடும்
ஆறு பத்துக் குந்தலைவி
அயனின் திருநா அமர்தேவி
அணிசேர் வெண்டா மரையன்னம்
மாய வுலகில் மாந்தரகம்
மண்டு மிருள்தீர் பெருஞ்சோதி
மாண்பார் தூய கலைமகளை
வாழ்த்தி வாழ்த்தி வணங்குதுமே
தூய தமிழின் தனித்தெய்வம்
துகள்தீர் தெய்வம் பரதெய்வம்
சிவனின் நுதற்கண் சோதியெனத்
துள்ளிக் குதித்தே வருதெய்வம்
சேய வடிவ முறுதெய்வம்
செகத்துக் கெல்லாம் பெருந்தெய்வம்
திருவார் குறுக்குத் துறைதெய்வம்
சேயோன் தன்னைக் காத்திடவே.
13கார்த்திகைப் பெண்கள்✓
ஏந்தி யெடுத்துச் சீராட்டி
இணைசேர் நகிலின் பாலூட்டி
இதழார் நளினத் தொட்டிலிலே
இனிதாய்க் கிடத்தித் தாலாட்டிக்
காந்தி விளங்கும் மகவாறைக்
கங்கை தனிலோர் பொய்கையிலே
கருத்தாய் வளர்த்த இருமூன்று
கார்த்தி கைப்பெண் ணடிபணிவாம்
சாந்தி திகழும் ஒராறு
சவியார் முகத்தன் பெருமுத்தன்
சரண மடைந்தார்க் கருள்புரியும்
சத்தா மிருமுன் றக்கரத்தன்
மாந்தித் தேனை மதிமயங்கும்
வரிவண் டினங்கள் முரல்சோலை
வளமார் குறுக்குத் துறைமேவும்
வடிவே லவனைக் காத்திடவே.
14சக்திவேல்✓
தொடரும் வினைகள் தீர்த்திடவே
துள்ளி வருங்கூர் வடிவேலை
சூரன் மயக்கம் தொலைத்தாங்குத்
தோகை மயிலாக் கிடும்வேலை
படரும் வரையந் தாருகனின்
பண்டி கிழித்த பணிவேலை
பாவை சக்தி யருள் வேலைப்
பணிந்து பணிந்து போற்றுவமே
சுடரும் பாலன் ஆறுமுகன்
சோதி ரூபன் வடிவழகன்
துய்யன் மெய்யன் நறுங்கடம்பன்
துடிசேர் முருகன் மால்மருகன்
அடருஞ் சோலைப் பசுஞ்சினையில்
அலரோ டளியும் முகிலுந்தூங்
கணிசேர் குறுக்குத் துறைமேவும்
அயிலோன் தன்னைக் காத்திடவே.
15முருகனடியார்✓
சங்கத் தலைவன் நக்கீரன்
சந்தப் புகழ்பா டருணகிரி
சாரும் புராணக் கச்சியப்பன்
சதுர்வே தியன்ப பகழிக்கூத்தன்
துங்கக் கலிசெய் குமரகுரு
தொண்டன் வீர வாகெனுமித்
தூயர் தொடர்பா வலர்பாதம்
தொழுது தொழுது வாழ்த்துவமே
பங்கப் பழனத் துழுசாலில்
பணில் நிரைகள் குவிமுத்தால்
பகல்போ லிரவில் ஒளிவளரும்
பதியாம் நெல்லைக் கழகுதரும்
புங்கத் திருவா றாம்பொருநை
பொன்னைக் கொழிக்குங் கரைமேவும்
பொழிலார் குறுக்குத் துறையான்நற்
புனிதன் றனையே புரந்திடவே.