முருகன் App
குறுக்குத்துறை குமரன் பிள்ளைத்தமிழ்
வித்துவான் தி. சு. ஆறுமுகம்
சிறுதேர்ப்பருவம்11 / 11
குறுக்குத்துறை குமரன் பிள்ளைத்தமிழ் · வித்துவான் தி. சு. ஆறுமுகம்

சிறுதேர்ப்பருவம்

96(பதினான்கு சீராசிரிய விருத்தம்)✓
தாரணியைச் சூழ்ந்தலை சாகரங்கள் தம்மையே
சக்கரங்க ளெனவ மைத்துத்
தடமாரும் புவிதனைத் தங்குமிட மாமடித்
தட்டெனவே கொண்டு பனியே
சேரணியி மயமெனுஞ் சிலம்புமுத லாயபல்
திகிரிகளைக் கால்க ளாக்கிச்
செப்பமுடன் மேலேழு லோகங்கள் தம்மைமேல்த்
தட்டுகளென் றேய மைத்துத்
தேரணிசெய் கொடுங்கைக ளாகஎண் டிசைகளைச்
சேண்விசும்பை மூடு துணியாய்ச)
சுவர்க்கமது சிகரமாய்த் தொன்மறைகள் புரவியாய்த்
திசைமுகனும் வலவ னாகச்
சீரணியுந் தேரெனச் செய்துவிளை யாடிடுஞ்
செல்வதே ருருட்டி யருளே
சோலைசூழ் திருவுரு மாமலையின் வேலவ
சிறுதே ருருட்டி யருளே.
97✓
புவியார்ந்த பற்பல புண்ணியத லங்களிற்
போட்டுமொரு பயனு மில்லாப்
புன்னுடலி னஸ்தியைப் புகர்மாற்றிக் கருநிற
மாக்கியக ருப்பன் றுறையும்
குவியார்ந்து வருமதைக் குருத்துவிடச் செய்துசீர்
கொண்டதிருக் குறுக்குத் துறையும்
குருத்துக்கள் தமையெலாங் கோலமல ராக்கியே
கோப்புடன்வி ரித்துச் சிந்தும்
சவியார்ந்த சிந்துபூந் துறையுஞ்சேர்ந் திலங்கிடுந்
தண்பொருநைக் கரையெ லாம்நீ
சாருநவ வீரர்கள் தம்மோடு கூடியே
தனித்தே ருருட்டி யருளே
செவியாறி ரண்டனே சேவலணி கந்தனே
சிறுதே ருருட்டி யருளே
தெய்வீகத் திருவுரு மாமலையின் வேலவ
சிறுதே ருருட்டி யருளே.
✓
நாத்திரியு மாறெலாம் நல்லவர்போல் பலவாறு
நவின்றுபா மரரை யேய்த்து
நாசவினை செய்துவாழ் மோசமிகு மாக்களின்
நயவஞ்சந் தானு ருளவும்
ஆத்தியணி செல்வனின் அனல்விழியில் வந்தவா
அழுக்காறு கொண்டு பிறர்மேல்
அல்லலிழைத் தேயவ ரழியுமா றாக்கிவிடும்
அற்பரா ணவமு ருளவும்
ஈத்தினிது வாழ்சுக மெண்ணாமற் பொருளையே
என்றென்று மீட்டி நொந்துன்
இணையடிகள் சிறிதுமே யெண்ணாம லலைந்திடும்
இழிஞர்பே தமையு ருளவும்
சீர்த்தியணி மைந்தனே சேவலுறு கந்தனே
சிறுதே ருருட்டி யருளே
தெய்வீகத் திருவுரு மாமலையின் வேலவா
சிறுதே ருருட்டி யருளே.
99✓
அலைமோதி வெள்ளமே அளவற்றுச் சாடினும்
அணுவேனுஞ் சேத மின்றி
அசையாது நிற்குமழி யாப்பிள்ளை யார்கோவி
லணித்தாய அகன்ம ருங்கும்
தலைமோதிக் கல்லினாற் சாவுண்டு பேயாகித்
தனைக்கொன்ற வணிகன் றனையே
தந்திரமு டன்கொன்று தன்பழி தீர்நீலி
தங்கியுள அகன்ம ருங்கும்
இலைமீதி லேதுயில் நிலைகொண்ட மாதவன்
இடையரக முள்ளு ழைந்தே
இட்டம்போல் பால்வெண்ணெ யெடுத்துண்ட கிருட்டிணன்
எழிற்கோவி லகன்ம ருங்கும்
சிலைமோதிச் சீதையைச் சேர்ராமன் மருகனே
சிறுதே ருருட்டி யருளே
தெய்வீகத் திருவுரு மாமலையின் வேலவா
சிறுதே ருருட்டி யருளே.
100✓
மலைபோன்று குவிந்துள மணல்மேடு தன்னிலும்
மாஞ்சோலை மருங்கி னூடும்
மாண்பாருங் காவடி மண்டபமும் யாதவர்
மண்டபமும் வணிகர் மடமும்
கலைபோன்று வெள்ளாடு குதித்தலையும் சோலைசூழ்
கவின்நரசை யன்ப தியிலும்
கடலார்ந்த வெள்ளமுங் காணில்நீ மேவிடக்
காண்மேலக் கோவின் மருங்கும்
வலைபோன்று நிழல்தரும் வான்தடவு மருதமார்
வளமிக்க வீதி களிலும்
வானவரும் போற்றிடு வடிவேல வாகுகா
வாகுதே ருருட்டி யருளே
சிலைபோன்று நிற்பினும் ஜீவனுள தெய்வமே
சிறுதே ருருட்டி யருளே
தெய்வீகத் திருவுரு மாமலையின் செல்வனே
சிறுதே ருருட்டி யருளே.
101✓
கோழி தனைப்புகழ் வாயா லதன்சிறு
குஞ்சைப் புகழ்கில னெனவோதுங்
கொய்யாப் புகழடர் பொய்யா மொழிதனைக்
குறுகி வனமுறு மெயினன்போல்
பூமி யடர்கரம் போகுந் துறையொரு
பாடல் தனைப்பெறு மூட்டையனே
பேசுந் துடியுள ஈசா வுனதடி
பேணா துலகினி லுழல்வேனோ
ஆழி யடர்புவி சூழ வலம்வரும்
ஆறு முகனெனும் பேரிறைவா
அண்ணல் நினையர ணென்றே அலையெனை
யாளுங் கடனுனக் கிலையோசொல்
ஊழி தனிலுமுன் போலும் நிலைபெறும்
உயர்செய் திருவுரு மாமலையில்
உவப்பாய் நிலைபெறு தவப்பா லககுக
உருட்டி யருளுக சிறுதேரே.
102✓
அழுதால் வருபய னுளதோ முனருளம்
அறியச் செய்துள வினையெண்ணி
அகமே கசிந்திடத் தினமே வருந்தினும்
ஆகும் பயனெது முண்டாமோ
தொழுதாற் பயனுள தெனவே துணிவுடன்
துகள்தீர் சேவடி பணிவேனே
துரையே யான்படு துயரே நீக்கியுன்
சுகமா ரடிநிழல் தருவாயே
பழுதா யுனைப்பழிப் பவனே யாயினும்
பால னெனவினு மறியாயோ
பரமே யுறைகுரு பரனே முருகனே
பணியார் திருவுள வடிவேலா
உழுதார் மனமிகக் குளிரப் பயனளி
உயர்செய் திருவுரு மாமலையில்
உவப்பாய் நிலைபெறு தவப்பா லககுக
உருட்டி யருளுக சிறுதேரே.
103✓
கருவாய் மறுபடி வரவே விரும்பிலன்
கலங்கும் படியெனை விடுப்பாயோ
கனியே நினையல தினியே கதியிலை
கசடன் புரிபிழை எடுப்பாயோ
பெருவாய் நரகினில் புகுவே னெனினுமுன்
புனிதத் திருவடி மறவேனே
பெரிதா யணைப்பினும் வெகுவா யடிப்பினும்
பிரியே னுனைவிடுத் தகலேனே
சிறுவா யுடன்பெரு விரிவார் சிறகுறு
சிகிவா கனமிசை வருவோனே
செகமே பதறிட மிகவே குரலிடுஞ்
சிவலைச் சேவலங் கொடியோனே
திருவா வடுதுறை அறவோர் பணியினில்
திகழுந் திருவுரு மாமலையில்
திடமாய் நிலைபெறு வடிவே லவகுக
திறமா யுருட்டுக சிறுதேரே.
104✓
களமார்ந் துனையெதிர் வளமார் பதுமனைக்
கடிதே பிளந்திடும் வடிவேலா
கரியோ டொருகுறச் சிறுமி மருவிய
கமழ்சேர் தெரியலு முறுமார்பா
குளமார்ந் திடுவிழி வழியே சிவந்தரக்
குதித்தே வருசுடர்ப் பொறியோனே
குகனே உனையடுப் பவருந் துயருறல்
குணமோ உனக்கிது சரிதானோ
வளமார்ந் திடுமலை முகடு களிலுறை
வடிவார்ந் திடுமுயர் முருகோனே
வறியேன் புகலெது மறியே னிகலது
புரியா தருளரி மருகோனே
உளமார்ந் துணைப்புகழ் வளவா வடுதுறைக்
குரிய திருவுரு மாமலையில்
உவப்பாய் நிலைபெறு தவப்பா லககுக
உருட்டி யருளுக சிறுதேரே.
105✓
மழையார்ந் துலகினில் வளமார்ந் திடத்தமிழ்
மறையோங் கிடப்புக ழோங்கிடவே
மனித ரனைவருஞ் சமமே யெனுமொரு
மகிமை யுணர்ந்திகல் மாறிடவே
நுழையார்ந் திடுகலை பலவு முயர்ந்திட
நுவல்கல் வியும்புவி நிறைந்திடவே
நிலமீ தரசுகள் பகையே மறந்துநல்
லுறவோ டுயர்பணி புரிந்திடவே
விழையார்ந் துளமொடு நலிவார்க் கிரங்கிடும்
விநயர் நலமுடன் வாழ்ந்திடவே
விளைவே நிறைந்திட வறுமை மறைந்திட
விமலர் புகலுரை பயன்பெறவே
உழையார்ந் திடுகுற இளமா தணைபவ
உயர்செய் திருவுரு மாமலையில்
உவப்பாய் நிலைபெறு தவப்பா லககுக
உருட்டி யருளுக சிறுதேரே.
106வேறு✓
துகளறுசீர் தண்குறுக்குத் துறைவாழுங்
குமரனெனுஞ் சுடர்வே லன்மேல்
இகழறுமெய்க் காதலினா லிப்பிள்ளைத்
தமிழ்த்தனையே இயம்பி னான்நற்
புகழுறுசீர் திருநெல்லைப் பொற்பதிவாழ்
போதமிலாப் புலவ னிந்நூல்
திகழுறுமென் றெண்ணமுடன் சிவதாசன்
ஆறுமுகன் தெரிந்த வாறே