முருகன் App
மாவைப் பிள்ளைத்தமிழ்
மு. கந்தையா
அம்புலிப்பருவம்8 / 11
மாவைப் பிள்ளைத்தமிழ் · மு. கந்தையா

அம்புலிப்பருவம்

67✓
சிவபரம் பொருள்தமது சிரமிசைக் கோடலாற்
செம்மான் மருங்கு றுதலாற்
றிருமருவு கார்த்திகைப் பெருநேய முறுதலாற்
றேவவுல காண்டு றுதலால்
நவமான வமிர்தொழுக நானில மளித்தலால்
நங்கையர் மனங்க வர்தலால்
நாளொன்று மேனியும் பொழுதொன்று வண்ணமும்
நானிலங் காண வுறலால்
தவநெறிப் பெருவாழ்வு சாரவரு நம்பரன்
தன்னிக ரெனக்க ருதியோ
சந்தமலி செந்தா மரைப்பொலி திருக்கைபுரி
சைகையா லுனைய ழைத்தான்
அவமேது மிலையெங்க ளாதிவடி வேலனுட
னம்புலீ யாட வாவே
அழகொளிர மாவைவள ரானந்த வள்ளலுட
னம்புலீ யாட வாவே.
68✓
அண்டத் துறைந்தபடி பிண்டத்து முறைதலா
லாகாச மேவி வரலால்
அசுரர் தமக்கொரு குலப்பகைமை மேவலா
லராப்பகையு மொன்றுண் மையாற்
கண்டங் கறுத்தமர ரெண்டங்கு மொருபரன்
கட்பொறி யெனப்பெ றுதலாற்
கலையா னிரம்பியொளிர் காட்சியத னாற்றெய்வ
கங்கைநண் புறுசேர்க் கையால்
துண்டங்கொள் கார்மயி லினைப்பொருவு தூமுகில்
தோன்றிமீ தூர்ந்து வரலால்
தோன்றலிவன் மதியநீ தன்னொப்பை யென்பது
துணிந்துகொல் லுனைய ழைத்தான்
அண்டங் கடந்தபொரு ளாதிவடி வேலனுட
னம்புலீ யாட வாவே
அழகொளிர மாவைவள ரானந்த வள்ளலுட
னம்புலீ யாட வாவே.
69✓
நீரோடு கார்முகில் சுருள்முகில் புகர்முகில்
நீலமுகில் நிகர்வெண்முகில்
நிரையோட வங்கவற் றூடுநீ தவழ்செவ்வி
நிலமிசை யிருந்து நோக்கி
ஊரோடு மகிழ்வா லொளித்துவிளை யாடுதியெ
னொருபெருங் கற்ப னையமைத்
தொப்பனை யியற்றுதன் தாயர்முன் றானையு
ளொளித்துவிளை யாடு மொருதன்
சீரோடு மொப்புமை குறித்துனை யழைத்தனன்
செல்வன் குழந்தை யையன்
சிற்பமுறு கற்பனை சிறந்தொளிர் சங்கநற்
செந்தமிழ்ப் புலவ னுமிவன்
ஆரோடு மெண்ணலைந மாதிவடி வேலனுட
னம்புலீ யாட வாவே
அழகொளிர மாவைவள ரானந்த வள்ளலுட
னம்புலீ யாட வாவே.
70✓
ஒப்பருமொர் புவனத்தி னோதுமோ ரண்டத்தி
னொருபுடை யிருத்தி மதிநீ
யுணர்வரிய புவனப் பெருந்தொகை யனைத்துந்த
னோருரோ மத்து டையனெஞ்
செப்பரிய சீர்த்தித் திருக்கைவடி வேலவன்
சேருநின தொளிறி லவுதான்
செவ்வே ளிவன்வதன நிலவினோ டொப்பிடின்
தேரிரவி முன்மின் மினி
எப்பரிசு நோக்கிலா னேதோவொர் கருணையா
லேமமுற் றுனைய ழைத்தான்
எந்தையிவன் தந்தைபோ லென்றுமே தன்பெருமை
யெண்ணாத கண்ணி யன்காண்
அப்பரி சுணர்ந்துநம தாதிவடி வேலனுட
னம்புலீ யாட வாவே
அழகொளிர மாவைவள ரானந்த வள்ளலுட
னம்புலீ யாட வாவே.
71✓
நத்தங் கொளுந்துத்த நற்கட லிடைத்தோன்று
நல்லமிர்தி னோடு தோன்றும்
நண்பினால் நீபெற்ற நவவமிர்து வெறுமனே
நற்பயிர்க் குடல்வ ளர்க்குஞ்
சித்தந் திருந்திடுஞ் சீரன்பர் மெய்யுணர்
தியானச் சமாதி நிலையிற்
றித்தித் தருந்துமிவ னருளமிர்த திவலையோ
சென்றுசென் றுயிர்த ளிர்ப்ப
மெத்துபல் லூழிக்கு மேலூழி மேனில
மிசைப்பொலிந் திருக்க நல்கும்
வேறுபா டதேனும் வேண்டுதல் கேவலம்
விளையாட்டு வேட்கை யேகாண்
அத்தன்மை தேர்ந்தெங்க ளாதிவடி வேலனுட
னம்புலீ யாட வாவே
அழகொளிர மாவைவள ரானந்த வள்ளலுட
னம்புலீ யாட வாவே.
72✓
இரவியொளி தன்னிலோ ரேகதே சந்தன்னை
யிரவலாய்ப் பெற்று நீயு
மேதோவொ ரொளியுள்ள முதலென்றொ ளிர்தியா
லிறுமாப்பும் வேற டைதியால்
உரவுபகி ரண்டமு மொருங்கே விளக்குமிவ
னுலவாத பேரொளி யதாஅன்
றுனக்கிரவ லீந்தானு மோங்கியொளிர் கின்றதிவ
னொளியிலொரு சிறுது ளியினால்
பரவுமறை முனிவர்க்கு மெட்டாப் பராபரன்
பாரணைந் தெளியை நின்னைப்
பரிவுற வழைத்துமகி ழுருமையுங் கருதாது
பராமுகம் பண்ணல் கண்டாய்
அரவமிசை மயில்கடவு மாதிவடி வேலனுட
னம்புலீ யாட வாவே
அழகொளிர மாவைவள ரானந்த வள்ளலுட
னம்புலீ யாட வாவே.
73✓
மேற்றிசைக் குண்டர்கள் மெய்யே யுனைப்பற்ற
மேவுமிந் நாள்க ளெல்லாம்
மெத்துவிஞ் ஞானத்து விந்தைப் புணர்ப்பினால்
விண்ணேறு பூட்ணி கங்கள்
நாற்றிசை யினுநூக்கி நம்மதே சந்த்ரனென
நாளுநாட் போட்டி முற்றி
நஞ்சொழு கணுக்குண்டு கொண்டுன்னை நாடியொரு
நாசவமர் மூள நின்றார்
வேற்றுமைகொ ளிவர்தமணு வாற்றல்பரி சோதனையில்
வெந்துநீ மாளு தலுமாம்
மேவிவன் தனையுறின் மெய்ப்பாது காப்புமாம்
மேலைநெறி வீடு முளதாம்
ஆற்றவு முணர்ந்தெங்க ளாதிவடி வேலனுட
னம்புலீ யாட வாவே
அழகொளிர மாவைவள ரானந்த வள்ளலுட
னம்புலீ யாட வாவே.
74✓
காரசுர னமுதுணக் கண்சாடை யிட்டுநீ
காட்டிக் கொடுத்த தோஷங்
கரவில்குரு மனையைக் கலந்திட்ட தோஷமொடு
கையேற்ற கன்னி யர்க்குள்
ஏருடைய விருபர்பாற் கண்ணோடி யேனையரை
யின்னற் படுத்த தோஷம்
இத்தகைய தோஷங்க ளெங்ஙன் தொலைப்பைநீ
யின்பசுக நிலைய மாகி
மாருதப் புரவல்லி மாணகுல முனியினையர்
மாறாத தோஷ மாற்றும்
மாவையிதி னணைதியேல் வள்ளலிவன் நண்பினால்
மாறுமுன் தோஷ முழுதும்
ஆருமுனை மெச்சுவர்ந மாதிவடி வேலனுட
னம்புலீ யாட வாவே
அழகொளிர மாவைவள ரானந்த வள்ளலுட
னம்புலீ யாட வாவே.
75✓
கதித்துற விரைந்துநீ கையோடு பிடிபட்ட
கள்வனென நைய வடருங்
காரரா விங்கிவன் கலாபமயில் கண்ணெதிர்க்
காணவு நிலாதொ டுங்குஞ்
சதுர்த்திநிற் காண்பவன் சண்டாள னாமெனச்
சாபமுற வந்த வசையுஞ்
சாமியிசை வெள்ளமுன் னசந்தவத் துகளெனத்
தன்னிற் கரைந்து மறையும்
மதித்திவ னணைந்திவன் மகிழ்வுறப் பெறுதியேல்
மாதவ முனக்கு வேறென்
மதியெனும் பெயர்பெற்று மதியா திருந்திடின்
மதிமோ சமாம றிதிநீ
அதிர்த்தெழச் சூரடர்ந்த மாதிவடி வேலனுட
னம்புலீ யாட வாவே
அழகொளிர மாவைவள ரானந்த வள்ளலுட
னம்புலீ யாட வாவே.
76✓
ஏனிந்த மதியின்ன மிங்குற்றி லானென்ன
எம்மையன் வெகுளு மளவில்
இங்குனது முன்றில்வரு மிந்த்ரனை ராவத
மெடுத்துமே லோச்சு கைகண்
டூனபகை யரவமென் றுன்னியோ வித்தலத்
துறுகுலை செறிந்த தாலம்
ஊறுசெய் பலதலைகொ ளசுரரென் றுட்கியோ
உபக்கிரக மென்ற பெயரில்
வானத்து லாவிடும் வம்புமதி நண்பிலோ
வருகிரக சம்மே ளனம்
மருவுதனை யின்றியமை யாதென்ற வகையிலோ
வரவுதாழ்த் தனன்வ ருவனென்
றானவகை யாற்றினந மாதிவடி வேலனுட
னம்புலீ யாட வாவே
அழகொளிர மாவைவள ரானந்த வள்ளலுட
னம்புலீ யாட வாவே.
77✓
சாபத்தி னாலுடல் தளர்ந்தறி வழிந்துநீ
தஞ்சமுன் புகுத வெந்தை
தந்தைதன் தலைமீ துனக்கிடந் தந்ததுந்
தக்கன்மக வேள்வி புக்குக்
கோபத்து மிக்கமரர் குலைகுலைந் திடவருஉங்
கோரமார் வீர பத்ரர்
குப்புறத் தள்ளியுன் குடர்குழம் பத்தேய்த்த
கொடுமையுங் காணி னொரநு
தாபத்தி னாலவர் தலையளித் திடுவதுஞ்
சாருமவ லேப நோக்கின்
தண்டிப் பதுஞ்சரத முக்ரசா சனனான
சாமியிவன் வெகுளி னொருபே
ராபத் துனக்குநம தாதிவடி வேலனுட
னம்புலீ யாட வாவே
அழகொளிர மாவைவள ரானந்த வள்ளலுட
னம்புலீ யாட வாவே.