முருகன் App
மாவைப் பிள்ளைத்தமிழ்
மு. கந்தையா
சிற்றிற்பருவம்9 / 11
மாவைப் பிள்ளைத்தமிழ் · மு. கந்தையா

சிற்றிற்பருவம்

78✓
தங்கத் திருநாண் பொலிசிகழி
தயங்கு நவமா மணிச்சுட்டி
தருமஎம் படைநன் மணிக்குதம்பை
சாலுங் குதலைச் சாறொழுகி
யெங்கும் பரக்குஞ் சிறுபண்டி
யிடையே துவள்பொன் னுபவீத
மெழிலா ரரைஞாண் மணிச்சதங்கை
யிவையொன் றுக்கொன் றாயிரமாப்
பொங்குஞ் சோதி தெருவளைந்த
புழுதிக் கொளிர்பொன் னிறம்பயப்பப்
பொலிபுன் முறுவற் குறும்பலரப்
போந்திங் கணையும் புண்ணியமே
திங்கள் வதனச் செழுங்கருணைத்
தேவே சிற்றில் சிதையேலே
தேவர் பரவும் மாவைவளர்
செல்வா சிற்றில் சிதையேலே.
79✓
நனையார் தாழை மடலவிழ்ந்த
நறுஞ்சோ றின்பூங் கறிகளொடு
நறுநீர்க் குட்டத் துறுதவளை
நன்மென் சினைநீர்ப் பாயசமும்
முனையா ரூரிக் குலமுழுது
முழுதுங் கோலம் படவமைத்த
முற்றந் திகழும் மணற்சிற்றில்
முதுகோ மயத்தி னணிநீவி
மனைமா சகற்றி நியமமொடு
மகமா தீர்த்தம் மகிழ்ந்தாடி
மருவும் விருந்தோ டுடனுண்ண
வருநம் மன்பர்க் கமைத்திருந்தோம்
தினையா ரமுதுண் செழுங்கருணைத்
தேவே சிற்றில் சிதையேலே
தேவர் பரவும் மாவைவளர்
செல்வா சிற்றில் சிதையேலே.
80✓
காடும் மலையுங் கருதேல்நீ
கடலின் கரையுந் தனியணுகேல்
கடியார் பகைகன் னிப்பகையுங்
கடுஞ்சூர்ப் பகையு முளமுறையே
ஆடி யமாவா சைக்கொருபே
ராடம் பரமாய்க் கடல்காண
ஐய னொடுயா முனைச்சீராய்
அழைத்துச் செல்தும் அமைதியெனக்
கோடி முறைநிற் குரைத்திடுமெங்
கோமாட் டிக்கென் கூறுதும்யாம்
குமரா அளியேம் குறிக்கொள்நீ
குணமார் குன்றப் பெருமுனிவர்
தேடும் பொருளே செழுங்கருணைத்
தேவே சிற்றில் சிதையேலே
தேவர் பரவும் மாவைவளர்
செல்வா சிற்றில் சிதையேலே.
81✓
கண்ணார் கோவிற் கவின்மாவைக்
கலைமுத் தமிழ்மா மன்றத்துக்
கணக்கா யன்மா மகன்கீரன்
கபிலர் பரண ரெனப்புலவோ
ரெண்ணா ரச்சம் பெருகவுனை
யெதிர்பார்த் திருந்தா ரகஸ்தியனு
மேதோ கேட்க வணைந்திருந்தா
னேங்கு மவர்தங் குறைதவிர்ப்ப
விண்ணோ ரரசே போதுகநீ
வீணே வெயிலத் தலையற்க
விருப்பிற் கந்த புராணநயம்
விரிப்பார்க் கருளி யவணமர்க
தெண்ணீர் முத்தே செழுங்கருணைத்
தேவே சிற்றில் சிதையேலே
தேவர் பரவும் மாவைவளர்
செல்வா சிற்றில் சிதையேலே.
82✓
மாயே யப்பே ருலகனைத்தும்
மட்டித் தாடி மலைமடந்தை
வளமார் பல்வே றுயிர்த்தொகைக்கும்
வாழ்வாம் போகப் புத்தமுதந்
தாயாய் மகிழ்ந்து சமைத்தடுக்குந்
தனிப்பே ரண்டக் கலசமெலாஞ்
சங்கா ரப்பேர் விளையாட்டிற்
றட்டி யழிக்குந் நின்தந்தை
நீயே விதையும் முளையுமொன்றே
நியத மெனினும் யாமச்சீர்
நிகரில் மலையா ளலங்கண்டாய்
நேரா தைய நினக்கிதுதான்
சேயே முருகா செழுங்கருணைத்
தேவே சிற்றில் சிதையேலே
தேவர் பரவும் மாவைவளர்
செல்வா சிற்றில் சிதையேலே.
83✓
நேய முருக நெய்யுருக்கி
நினைவு முறுகத் திரிமுறுக்கி
நேர்ந்து நினாவி யாமன்று
நிறைமா விளக்கிற் சுடர்கொளுவ
மாய மொடுபின் மறைந்துமணி
வாயா லூதிப் பலகாலும்
மருவுஞ் சுடர்நீ யணைத்தணைத்து
மாறி மாறிக் கொளுத்திக்கை
யோயும் படிசெய் குறும்பெனத்து
முன்றாய்க் கெனினும் புகன்றேமோ
ஊரார் புகலுங் குறைமுறைக
ளொன்றே னும்யா முரைத்தேமோ
சேய வடிவேற் செழுங்கருணைத்
தேவே சிற்றில் சிதையேலே
தேவர் பரவும் மாவைவளர்
செல்வா சிற்றில் சிதையேலே.
84✓
வருமா வந்து குழைந்தெம்பால்
வனப்பார் சிற்றில் வளநோக்கி
மாயச் சிறுபுன் முறுவலொளி
வண்ணக் குறும்பின் நிழல்படர
ஒருகா லுன்பொற் பதமசைய
வொருகா தம்போய் மீளுமெம
துயிர்நீ யகலி னொளியிழந்த
வுலகா யிருளும் போலுமுளம்
இருபே ரின்னற் கிடைத்தயங்கி
யினைகே முனைநா மென்செய்ய
எழிலார் சிற்றின் மிசைத்தீண்டா
தெம்மோ டிருக்கிற் பழுதாமோ
தெருளார் தெருளே செழுங்கருணைத்
தேவே சிற்றில் சிதையேலே
தேவர் பரவும் மாவைவளர்
செல்வா சிற்றில் சிதையேலே.
85✓
மற்றிங் குன்பால் நமக்கேது
மாறு பாடும் மறுப்புமினி
மருவுன் சீலப் புகழ்கருதா
வாழ்நா ளென்ப தெமக்கிலைகாண்
சிற்றிற் பற்றுந் தந்தாய்நீ
தேடி யழிக்க வந்தாய்நீ
சிறியேம் பற்றிங் கழியுமுனஞ்
சிற்றி லழிந்தாற் செயலென்னாம்
பற்றிங் கெனைத்து மொழித்துனது
பண்பா ராடல் மகிழ்ந்திருக்கும்
பரிசிங் கெமக்கு முன்னருளிப்
பின்னீ வந்தாற் பிழையாமோ
தெற்றென் றருளுஞ் செழுங்கருணைத்
தேவே சிற்றில் சிதையேலே
தேவர் பரவும் மாவைவளர்
செல்வா சிற்றில் சிதையேலே.
86வேறு✓
மதிதவழு மாடநிகழ் மாயக்கை யெல்லையின்
மாயயாக் கையினை மேவி
மருவுமல் வாயினில் மாபூதர் தமைநுங்கி
வளர்புலவ கான வெல்லை
அதிரவரு மலைசூழு மாமிர துறைக்கணூற்
றான்றபெரு மாவி னுருவா
மண்ணலஞ் சூரனோ டாடுவிளை யாடலே
ஐயநின் னாற்ற லொக்குங்
கதிரைமலை வள்ளியொடு காதல்விளை யாடலுங்
கருதுநின் றலைமை யொக்குங்
கண்ணியப் பெருமவெங் கையிடுஞ் சிற்றிலிற்
காலிடுத லழகி தன்றாற்
செதிலரவ பகையூர் செழுங்கருணை மூர்த்தியெந்
தேவநீ சிற்றில் சிதையேல்
தேவர்தொழு மாவையின் மேவிவளர் செம்பொருட்
செல்வநீ சிற்றில் சிதையேல்.
87✓
கோடிகரை நின்றருள் கூர்பிரண வத்தோணி
கொண்டுகா சாத்து றைப்பாற்
கோச்செல்வி மாருதப் புரவல்லி குதுகலப்
பணிகொள்ள மாவை மேவிச்
சேடியல் கந்தவன நற்பதி சிறந்தொளிர்
சித்தாந்த செல்வ நல்கித்
திகழ்புலவ கானத் தமிழ்தலைமை தாங்கிமகிழ்
தேவரையு முய்ய வாண்டு
நாடியணை கோணநா யகிக்கருளு நாள்நோக்கி
நவசந் நிதிக்கண் வைகி
ஞாலமறி சர்வபலப் பிரதான மூர்த்தியாய்
நம்மியாழ்ப் பாண முழுதுந்
தேடியரு ணல்குஞ் செழுங்கருணை மூர்த்தியெந்
தேவநீ சிற்றில் சிதையேல்
தேவர்தொழு மாவையின் மேவிவளர் செம்பொருட்
செல்வநீ சிற்றில் சிதையேல்.
88✓
தூமலி சுடர்த்தோகை யொளிவட்ட முற்படத்
தோன்றிடத் தூவி தோன்றத்
தூயவொலி நாதமொடு பிந்துவுந் தன்வடிவு
தோற்றமொரு சுத்த மாயா
மாமயி லுகைத்தேறு மாணடி யிரண்டுமிம்
மாநிலந் தோய வந்து
மண்மகிழ் சிற்றில்விளை யாடுமெம் பாலுற்ற
வான்கருணை நம்ம ளவதோ
பூமலியு மானிடப் புன்மைமலி யேழையேம்
புத்திபோ தரவி லாமே
போற்றா துரைத்திடும் புன்மொழி யனைத்தும்
பொறுத்தருள் புண்ய முதலே
தேமலி கடம்பணி செழுங்கருணை மூர்த்தியெந்
தேவநீ சிற்றில் சிதையேல்
தேவர்தொழு மாவையின் மேவிவளர் செம்பொருட்
செல்வநீ சிற்றில் சிதையேல்.