முருகன் App
மாவைப் பிள்ளைத்தமிழ்
மு. கந்தையா
காப்புப்பருவம்2 / 11
மாவைப் பிள்ளைத்தமிழ் · மு. கந்தையா

காப்புப்பருவம்

1திருமால்✓
பாவனா தீதப் பழம்பொருளை நாடவோர்
பன்றியாய்ச் சென்றி டந்து
பகர்வரிய தொண்டினா லன்றிநம் மாணவைப்
பரிசினா லொருவகை யினும்
ஆவதீ தன்றெனு மளப்பரிய வுண்மைக்கொ
ரளவுகோ லான நெடுமால்
அடியிரண் டிட்டுமுன் னுலகையு மளந்திட்ட
அவனருள் வேண்டி நிற்பாம்
தேவனா மொருசிவன் செங்கரத் துற்றருகு
தேவியுமை வதன நோக்கிச்
செங்கைக ளெடுத்தெறிந் தானந்த மெய்துமித்
தெய்விகக் குழவி பின்னாட்
காவனா யகனெனக் காக்குமங் கலமெனக்
கண்ணோடி நின்ற தேவர்
கன்னியர் பரிந்திடக் காண்பினிய மாவைவளர்
கந்தனைக் காக்க வென்றே.
2சிவபெருமான்✓
பேசுபிர பஞ்சமே மெய்பிரமம் பொய்யெனும்
பேதைலோ காய னோடு
பிரமமே மெய்வெறும் பொய்த்தோற்ற முலகெனும்
பேதவே தாந்தி நிற்கத்
தேசுபெறு சிவனுமெய் சிவனையறி காறுமச்
சிவனருளி வுலகு மெய்யென்
சித்தாந்த சைவநெறி வித்தாகி விளைவான
சிவனருள் போற்றி செய்வாம்
மூசுகர நீட்டியம் முதுகங்கை புனிதநீர்
முன்னவ னெடுத்து வார்ப்ப
முற்றத் திருந்தன்னை முகிழ்கருணை நீராட்டி
முச்சிநீ ரூதி யொற்றி
வீசுபுகை யூட்டிவெண் பொடிதிமிர்ந் தணிசெய்து
மேவுமிறை பிறைநி லவினில்
மெல்லென நிமிர்த்தழகு பார்த்திட விளங்கிவளர்
வேலனைக் காக்க வென்றே.
3உமாதேவியார்✓
ஐந்தொழி னிகழ்த்தவுறு மையற் கபின்னமா
யவனருட் பிரவா கமா
யச்சத்தி தத்வமுத லானபிரு திவிகா
றமைந்ததாத் விகங்க ளெல்லாஞ்
சொந்தமா யங்கங்கு வந்துவந் தின்பமே
துய்த்திடத் தலைய ளிக்குஞ்
சுத்தமங் களசொருப சித்தநிகழ் திருவான
தேவியருள் சிந்தை செய்வாம்
தொந்திவிழ வோடிவரு மைங்கரத் தும்பியைத்
துண்ணென வெருண்டு நோக்கித்
துள்ளித் துடித்தழத் தொட்டில் துளங்கிடத்
தும்பிமுக னோட்டெ டுக்கத்
தந்தையவ ணணையவுற் றிந்தநிலை காணெனத்
தாய்பரிந் தேற்ற ணைக்குந்
தனியிளம் பாலனாய்ச் சால்பினிய மாவைவளர்
சாமியைக் காக்க வென்றே.
4சித்திவிநாயகர்✓
மீதுலவு கார்முகில் மின்னுற் றொளிர்வதென
வெண்கோ டிலங்கி யொளிர
மேவுமம் முகிலினடு முழுமதி யணைந்ததென
மெய்யுருப் பண்பி வற்றால்
ஓதுல கெனப்பெரிய மோதக மணைத்தருளு
மொருதுதிக் கையி னோடு
மோவாது வந்துலவு முயற்சித்தி வேழமதை
யுள்ளத் திருத்தி யுணர்வாம்
தாதுமலி சோலைநுழை சந்திரற் கண்டுவிண்
சார் 'ரஷிய மதிய' மொன்று
தருமிசைத் தங்கிக் கிடந்ததென் றோடியணை
தருமமரர் சிறுவர் மாடே
போதுலவு கிளையெலாம் புடையலைய வேறியணை
பூசுரர் சிறுவ ரவர்மெய்ப்
பொன்னொளி படிந்தழகு மன்னுமெழில் மாவைவளர்
போதனைக் காக்க வென்றே.
5பிரமதேவர்✓
வாழியீ ரேழுலகு மற்றுள்ள புவனமும்
வந்துவந் துற்ப விக்கும்
வகைவேறு பட்டபல் லுயிர்கட்கு முலகுடல்
மாறிமா றிப்ப டைத்தே
ஊழிதோ றூழிநிக ழொருபெருஞ் செயலினா
லுடலுறுப் புள்ள மெல்லாம்
ஒக்கச் சிவந்தசெந் தாமரையி லுறைபிரம
னொண்மலர்த் தாள்ப ரவுவாம்
ஏழிசைக் கந்தருவ ரிசைபாட நாரதர்
யாழ்மீட்ட வின்ப மெய்தும்
எழுகோடி முனிவரர் பல்லாண்டு பாடவோ
ரெண்கோடி பூத மாட
ஆழியா னறுகெடுத் தாசீர் வதித்துய்ய
ஆணிப்பொன் மஞ்ச மேற்றி
அரமகளிர் கோதாட்ட வணிகிளரு மாவைவள
ரண்ணலைக் காக்க வென்றே.
6ஆறுமுகசுவாமி✓
நீடுகொடி மீதெழ நிவந்தகுடை நிரையெழ
நெடுந்தே ரிழிந்து நிமிர்வான்
நித்தில விதானமெழ நின்றசன மொய்த்தெழ
நிரந்தமலர் மழையு மெழவே
கோடுதுடி குமுறநற் குடமுழவு குமுறமுற்
கொட்டுமே ளங்கு முறமேற்
கொள்ளுபர வசமெழக் குலைகுலையு மன்பெழக்
கும்பிடும் வாய்ப்பு மெழுமா
றாடுபத் மீதெழ வடிப்புழுதி வானெழந
லம்மைநல மிம்மை யெழுநின்
றாடியணி மாவையர சாண்டினி தமர்ந்துமகி
ழாறுமுக சாமி காக்க
தேடுமறை யொலியெழுத் தெய்வவர கரவெழுத்
திருமறை முழக்க மெழுமெய்த்
தெய்வவொளி திசையெழச் சேர்ந்தினிய மாவைவளர்
சேந்தனைச் சிந்தை யுறவே.
7வைரவப் பெருமான்✓
சுட்டறி விறந்தசிவன் மட்டறு மறக்கருணை
சூழிருட் காளமுகி லாய்ச்
சுருளிருட் பத்தியொடு தெருளுமின் னுருமினொடு
தோன்றித் திகழ்ந்த தென்ன
வட்டித்த சடையினொடு நெட்டித்த சூலமொடு
வளரிரவு வந்து லாவி
வஞ்சக நெஞ்சதிர்ந் தஞ்சிட வுரப்பிவரு
வயிரவற் போற்றி செய்வாம்
வெட்டிப் பிளந்ததென வட்டப் பலாக்கனி
வெடித்தொழுகு மிரச மோடு
வெள்ளிலைக் கொடிவளர வள்ளிலைக் கதலிரச
மேவிக் கலந்து பாய்ந்து
முட்டச் செழித்துவளர் மட்டக் கருப்பரச
மோடுற் றலைந்து பெருகும்
மூர்த்திகல மோடினிய தீர்த்தமுறு மாவைவளர்
முருகனைக் காக்க வென்றே.
8இலக்குமி தேவி✓
வடமொழித் திரிபொப்ப மாஇஷ்ட புரமதே
மாவிட்ட புரம தாகி
மருவிலக் குமிநயந் தென்றுமுறை புரமெனும்
வாய்மைதன் னால்நி கழவே
இடமுடைய வுலகெலா மின்பசா தனமான
வெவையெவையு மேற்ப நல்கி
இம்மைக்கு வாழ்வளித் தம்மைக் கறங்கூட்டு
மிந்திரை பதம்ப ணிகுவாம்
மடவரல் மாருதப் புரவீக வல்லிமறை
வல்லசா மிக்கு ருக்கள்
மந்த்ரமறி மாமேதை விஸ்வநா தக்கிழாஅர்
மற்றுமுளர் பக்தி லயமாய்க்
குடதிசைக் கோபுர மெழுந்தோங்கி வானவர்
குறைவினவி யணைய நிற்குங்
கோயிலின் மேவிநமர் குறைவினவி மாவைவளர்
குமரனைக் காக்க வென்றே.
9சரஸ்வதி தேவி✓
உற்பவித் தெழுகவிதை யுயிர்துவனி வக்ரோக்தி
யுருவகமி ரீதி யலமற்
றொருதனரு ளேயரு ளுறாதவ ரியற்றுகவி
யுயிரற்ற வுடலா மெனக்
கற்பனைச் சிகரமாங் காளிதா சக்கவி
கவிச்சக்ர வர்த்தி கம்பன்
கருத்திற் கலந்துயிர்க் கவிதைவடி வாயுருள்
கனிந்தூற்று மமுத வாணி
தற்பர விநாயகன் தம்பியென் றணைதலுந்
தன்னமுகை நீங்கி யன்னோன்
தாழ்துதிக் கையினுதி சற்றே யெழுந்துவளை
தகைமைகண் டுண்ம கிழ்ந்தே
அற்புதப் பொற்சிரிப் பகடுடை படச்சிரித்
தானந்த வெள்ள நீந்தும்
அழகினிள முளையென்ன வருள்பொலியு மாவைவள
ரையனைக் காக்க வினிதே.
10நவக்கிரக மூர்த்திகள்✓
ஓதவுறு பன்னிரண் டுயர்லக்ன வகைதோறு
முச்சபகை நீச மாகி
யுலகுயிர் வாழ்விலுறு மொவ்வோ ரவஸ்தையினு
மோவாது தாக்கி நின்றே
மூதறிவி னாற்கணித முற்றுமுணர் முனிவர்த
முயற்சிக்கு மப்பா லவாய்
முன்னுறு வினைப்பயன் முகந்தளி நவக்கிரக
மூர்த்திகளை முன்னி நிற்பாம்
ஏதமுகி லான்பால னின்னுமோ கண்விழியா
னினியமுலை தானு முண்ணா
னென்னுற்ற தோவெனலு மிருபெரு மருத்துவ
ரெழுந்தோடி நாடி பார்க்கத்
தீதறிய வேட்டினிற் திகழ்கிரக நிலைகண்டு
தெசாபுத்தி பிரம னெண்ணத்
திருதிரு விழித்தவர் திகைக்கச் சிரித்துவளர்
தேவனைக் காக்க வென்றே.
11சண்டீஸ்வரர்✓
சீவனுட் பொலிகின்ற திருவருளை நேர்கண்டு
செம்மையன் புய்த்து வருவோர்
சிவபூசை கைவருஞ் சீலத்தர் சிவமான
சிவவிளைவு மன்ன வற்கே
யாவதென வாவின்க ணன்புய்த் தரன்கணு
மடித்தொண்டு பூண்ட நெறியே
ஆன்பா லுவந்தரு ளரன்பா லிருந்தருளு
மண்ணல்சண் டீசர் காக்க
பாவமொன் றறியாத பச்சிளம் பாலர்தம்
பாவையிற் சுவாமி கண்டு
பருமணற் கோயிலிற் றிருவிழா வணியெழுப்
பகார்வாழை மடல்வ ளைத்த
மாவலர் மலர்த்தண்டி தோளேற்றி மாண்டகர
மாமேளங் கொட்டி யார்த்து
வாயொலி விளைத்தினிய நாயன மிசைத்துவரு
மாவைவளர் வேல வனையே.