மாவைப் பிள்ளைத்தமிழ்
மு. கந்தையா
சிறுபறைப்பருவம்10 / 11
மாவைப் பிள்ளைத்தமிழ் · மு. கந்தையா
சிறுபறைப்பருவம்
89✓
அறைநீர்ப் பெருஞ்சலதி யாகாச மெட்டிடு
மலைக்கர முழக்க மிக்கங்
கயலுறு சிமிந்திவினை யாலையுறு மெந்திர
முழக்கமொடு மாறேற் பநின்
னிறைநீர்ப் பெருந்தலைமை யெண்ணாத காரசுர
ரேற்றபோர் முரச யிர்த்தவ்
விமையவர் குழாமலைந் தெங்குமடை வின்மைகண்
டித்தல மணைந்து சாருங்
குறைதீர் வரப்பெறு குறிப்பினிற் செந்நின்று
கொட்டுகை கூம்பி யொற்றக்
குணலையிடு தாளவிசை கூடுமொத் திசையொலிக்
கோலதுந் துபிக்கு மாறாச்
சிறைநீர்ப் பெருங்கேணி சேர்மாவை யரசநீ
சிறுபறை முழக்கி யருளே
சிங்கமுக னைப்பொருத துங்கவடி வேல்வீர
சிறுபறை முழக்கி யருளே.
90✓
தம்பொருள் பெற்றுண்டு தம்மெதிர் தருக்குவார்
தாங்குவார் தரணி யில்யார்
தண்ணீர் குடித்துத் தடித்துத் திணிந்துதிமிர்
சாலவெதி ரேறி நின்று
வெம்புவ லிடிப்பொறி மிகுத்ததிர் முழக்கமொடு
விண்டலம் வெருவ வார்த்து
வீம்புபுகல் காளமுகில் விபரீத நிலைகண்டு
மெய்பனித் துடலு ருத்தங்
கம்பரங் கொளவெழுந் தாவேச முற்றலைந்
தலைக்கர மடித்து ரப்பி
யாழிவிளை வீரநிக ழணிமாவை கோயில்கொளு
மண்ணல்செவ் வண்ண வடிவேல்
செம்பொருட் சிவமருள் செழுங்கருணை யரசநீ
சிறுபறை முழக்கி யருளே
சிங்கமுக னைப்பொருத துங்கவடி வேல்வீர
சிறுபறை முழக்கி யருளே.
91✓
முத்தமிழ் முழக்கமுற முதுமறை முழக்கமுற
மூவுலகு முய்ய வருளும்
மூவரெம் பெருமக்கள் மொழிசைவ நீதியொடு
மூவாத வேத நீதி
தத்தமில் முழக்குறச் சைவஹர ஹரவொலி
தழைத்தெழு முழக்க மோங்கித்
தண்கடல் முழக்கினொடு சார்முகில் முழக்கமுந்
தன்கீழ்ப் படுத்தி மீப்போய்
நித்தமு மொலித்துமிகு நிகர்வரிய மாவைவளர்
நின்மலா னந்த வாழ்வே
நின்திருப் புகழ்பாடு நேயமிகு மன்பர்த
நெஞ்சுற முழங்கு முவகைத்
தித்திமி திமித்திமி தெளித்திடச் செல்வநீ
சிறுபறை முழக்கி யருளே
சிங்கமுக னைப்பொருத துங்கவடி வேல்வீர
சிறுபறை முழக்கி யருளே.
92✓
மந்தா கினிப்புனல் மகிழ்ந்தாடி யரமகளிர்
மணற்றிடல் மஞ்ச மேறி
மஞ்சணி விதானவழி விஞ்சியெழு காரகில்
வண்புகையி தென்று வாசக்
கொந்தார் மலர்க்குழல் விரலுளர்ந் தைதுறக்
கோதிச் சரிந்தி ருப்பக்
கோச்செல்வி கஜவல்லி குமரன்மண வணிபரங்
குன்றத் தமைந்த தம்ம!
வந்தார மயனிட்ட மங்கல விதானமும்
வாய்ந்ததவ ணேகு மென்ன
மாதேவர் முரசறைய மாண்புறு சிமிந்திவெண்
வளர்தூரம மோங்கு மாவைச்
செந்தா மரைப்பொலி திருக்கைவடி வேலழக
சிறுபறை முழக்கி யருளே
சிங்கமுக னைப்பொருத துங்கவடி வேல்வீர
சிறுபறை முழக்கி யருளே.
93✓
நவநாக ரீகப் பெரும்பூத நடனமிட
நாடுபதி லயமு றுத்தும்
நாப்பறை முழக்கியெழு நயவஞ் சகக்கோல
நாத்திகந் தலைப னிப்ப
அவமான துறவுநெறி யாத்மீக மென்றுலகை
யாட்டுவோ ராட்ட நிற்க
ஆங்கார முற்றெழு மகம்பிரம் மாஸ்மிகள்த
மாவேக மோய்ந்து மடியத்
தவமான சிவநெறி தனக்கூ றிளைத்துவரு
சமத்துவப் புதுப்பு ரட்சிச்
சகோதரத் துவம்பேசு சமயப்ர சங்கிகள்
தம்வா யடங்கி யோயச்
சிவமான சிவமருள் செழுங்கருணை யரசநீ
சிறுபறை முழக்கி யருளே
சிங்கமுக னைப்பொருத துங்கவடி வேல்வீர
சிறுபறை முழக்கி யருளே.
94✓
கெண்டையஞ் சங்கிலி கிணுங்கிணென் னொலிபதக்
கிளர்நடைக் கொற்ற மிளிருங்
கீழ்க்கடைக் கண்ணிணை கிளர்செவிக் கூர்மையொடு
கேழில்சீ ராச னத்துப்
புண்டரத் தொளிநுதற் பொலிமுகச் சாரதியர்
புகல்குறிப் பிசைவி னொன்றப்
பூங்குஞ்ச மலையவாய் பொலிநுரையு மலையவலை
பொருசனக் கூட்ட நீந்திக்
கண்டகண் கவர்மலர்க் கார்த்திகைச் சப்பறங்
காணவிழை விரைவி னணையுங்
கட்டவண் டிப்புண்ட காளையிணை வெருவிவெடி
வாலெடுத் தூடு பாயத்
தெண்டனிடு மடியர்குழு சிவசிவ வெடுத்துயச்
சிறுபறை முழக்கி யருளே
சிங்கமுக னைப்பொருத துங்கவடி வேல்வீர
சிறுபறை முழக்கி யருளே.
95வேறு✓
தேவுல கத்திறை மேவு மகண்மைகொள்
தெய்வத யானைமணஞ்
செப்பிடு மரசென வப்பெரு மமரர்கள்
திசைதிசை நாடிவர
நாவுல வின்னசை நவில்கவி வாணரு
நலிவுறு மார்த்திகரும்
நாமுறு கொடைவள நலமுர செனவொலி
நாடின ரோடிவரப்
பூவுல கினிலுறு போர்வெறி யூக்கிடு
புன்னெறி யசுரகுலம்
பொன்றிட வென்றொலி பொலிமுர செனமகிழ்
பூதல ராடிவர
மூவுல கத்தினு முண்மை முழங்க
முழக்குக சிறுபறையே
முன்னுறு தும்பி முகத்திறை தம்பி
முழக்குக சிறுபறையே.
96✓
வெம்மைகொ ளினனுறு மண்டல மிடிபட
விண்முக டுதிராமே
மீதண் டத்துள வேதண் டத்தொகை
வெடிபட வதிராமே
கொம்மைநெ டுங்குவ டனையதொர் சிறுபறை
குதுகல நிறைவொளிரக்
கோலுகு றுந்தடி சால வழுந்துபு
குறியிசை குமுகுமெனச்
செம்மல ரகவிதழ் சிவணுறு சிறுவிரல்
சேப்புற நோவாமே
செம்பவ ளம்புரை சிறுநக கண்வழி
செந்நீர் குமுறாமே
மும்மையு நாமுய மும்முறை மெல்ல
முழக்குக சிறுபறையே
முன்னுறு தும்பி முகத்திறை தம்பி
முழக்குக சிறுபறையே.
97✓
கட்டுச தங்கை கலின்கலி னெனவொளிர்
காலினை தாளலயங்
காண விரைந்திரு கண்ணிமை துள்ளவொர்
காவடி தோளேற்றி
விட்டுவி ளங்கொளி பட்டு வனைந்தணி
மேவு மிடுப்பொடிய
மெல்ல வளைந்து சரிந்து குதித்தெழு
வித்தக வாடல்வழித்
தட்டுமி சைப்பொலி தண்ணுமை வலவர்கள்
தலையசை விலயமுறச்
சார்வுறு ரசிக குழாமு மசைந்தொலி
தழைவுறு கரகோஷ
முட்டுமு ழக்கிடை விட்டுமு ழங்க
முழக்குக சிறுபறையே
முன்னுறு தும்பி முகத்திறை தம்பி
முழக்குக சிறுபறையே.
98வேறு✓
நடநவி லெம்மிறை புடைதனி லளவறு நாதமெழுந்
நன்றுமு ழக்கினி லொன்றிடு பாணா சுரனெங்கே
குடமுழ வொன்று பரித்திறை சந்நிதி கொளநின்றே
கொட்டிமு ழக்கிடு கோமுனி நந்தீ சனுமெங்கே
இடமுள வுலகினி லடையவெ ழும்பர நாதவொலி
எங்கு முழக்கிட விங்குனை யொப்பதொ ரிறைவரியார்
கடவுளர் முடியணி கடவுள் முழக்குக சிறுபறையே
கந்தக டம்பணி யெந்தை முழக்குக சிறுபறையே.
99✓
நான்மறை முழவினை நாக்கடிப் பிட்டறை நான்முகனார்
ஞால முறத்தரு நாதமெ லாமொரு மாவையிவண்
வான்மறை முடிவுறை வான்பொருள் நீயறை சிறுபறையின்
மங்கல முதிரொலி பொங்கிட வதிர்வுறு மெதிரொலியே
மான்மறை வள்ளி மகிழ்ந்தணை சுந்தர வாழ்முதலே
வள்ள லருள்பொழி வெள்ள மலைத்தெழு கதிர்காமக்
கான்மறை யிறவுளர் கடவுள் முழக்குக சிறுபறையே
கந்தக டம்பணி யெந்தை முழக்குக சிறுபறையே.