முருகன் App
மாவைப் பிள்ளைத்தமிழ்
மு. கந்தையா
செங்கீரைப்பருவம்3 / 11
மாவைப் பிள்ளைத்தமிழ் · மு. கந்தையா

செங்கீரைப்பருவம்

12✓
வெண்ணிலா வழுததுளி முத்துற் றுருண்டலைய
மெல்லணை யமர்ந்த தென்ன
வியர்த்துளி பனித்தலைய மேவுமுக மண்டல
மெடுத்துநே ரணைய நின்றே
உண்ணிலா வுவகையுறு மன்னையர் விடுப்புகட்
‘கும்’மெனத் தலைய சைத்தங்
குள்ளமுறு தெள்ளமுத மொருகடை யிதழ்ப்புறத்
தோவா தொழுக்கி மிளிருங்
கண்ணிலா வின்பக் கடைக்கணுகு கருணையங்
கடலினு ளமிழ்ந்து கோடி
கற்பாந்த முற்றுக் கனத்துத் திணிந்தநமர்
கன்மவினை கழுவி யுய்யத்
தெண்ணிலா வணியுஞ் சிவன்றரு மிளங்குழவி
செங்கீரை யாடி யருளே
தெய்வநிகழ் மாவையிற் சைவமகிழ் தேசிகா
செங்கீரை யாடி யருளே.
13✓
நீராட்டி யன்னையர் நிறையவெண் ணீறட்டி
நிகரிலொப் பனையி யற்றி
நேர்பார்த்து வாயுறிக் கண்ணூறு தீரவொளி
நெற்றியிற் றிலக மிட்டுப்
பாராட்டி விடுதலும் பார்மிசை தவழ்ந்தன்னை
பட்டாடை மடியி னேறிப்
பருமுலை சுவைத்தசுவை பற்றாதெ னக்கொலொரு
பாதவிர லுஞ்சு வைத்துப்
பேராட்டி யிமையவர் பெருமாட்டி தன்னயற்
பிரியாத பெருமா னொடும்
பெரும்புளுகு புளுகிமிகு பூராய மாகவே
பேசரிய பெருமை பேசிச்
சீராட்டி மகிழ்வுறுந் தேடரிய செல்வமே
செங்கீரை யாடி யருளே
தெய்வநிகழ் மாவையிற் சைவமகிழ் தேசிகா
செங்கீரை யாடி யருளே.
14✓
நேயமிகு மன்பலைய நேர்நின்று கைநீட்டி
நின்தந்தை வருக வெனலும்
நெட்டித் துடல்பாய்ச்சி நிறையுவகை வெள்ளத்து
நீந்துமா நீந்தி யுன்னித்
தாயபத மலர்களுஞ் சரிபண்டி வட்டமுந்
தனிப்புழுதி யாடி யோய்ந்து
சாய்ந்திரு முழந்தாள் மடித்துத் தவழ்ந்தவன்
தருகரம் பற்றி யேறிச்
சேயவுத யாசலந் தோன்றுசெங் கதிரெனச்
சிவன்றோள் விளங்க லொன்றோ
தெய்வநிறை சந்நிதிச் செந்நின்று கைநீட்டித்
திருவருட் டிறங்க ளுன்னித்
தேயமன மழியுமவர் செங்கைக்கு மெட்டுநீ
செங்கீரை யாடி யருளே
தெய்வநிகழ் மாவையிற் சைவமகிழ் தேசிகா
செங்கீரை யாடி யருளே.
15✓
ஆர்வமோ டுனதடிக ளணிமுடி மிசைச்சேர்த்தி
யங்கப்ர தக்ஷண மாக
அணியுடல் புரட்டிநின் றாலயஞ் சுற்றிவந்
தையமுக நேர்நி மிர்ந்துச்
சோர்வொழுகு முடல்வழிச் சோதிவியர் വொழுகிடத்
தூயவுள மார்வ மொழுகத்
துயர்வரு மிளைப்பிற் சுகானுபவ மொழுகத்
துதிப்பவர் வதன நோக்கிச்
சீர்வன ரனிச்சசெந் தூவிதிக ழணைமிசைச்
சிறியதிரு வுடல்பு ரட்டித்
திருமுக மெடுத்துத் திகழ்ந்தெதிர் செந்நின்று
செம்மையருள் நல்கு கருணை
சேர்வுறு குறிப்பிற் சிரித்துநிகழ் செல்வமே
செங்கீரை யாடி யருளே
தெய்வநிகழ் மாவையிற் சைவமகிழ் தேசிகா
செங்கீரை யாடி யருளே
16✓
நீற்றினொளிர் புண்டரக் கீற்றினொடு மொக்குமென
நிலவொளிப் பட்ட மாட
நெற்றியிற் சுட்டியுஞ் சுழியமு மசைந்தாட
நிறைந்தபுன் முறுவ லாட
ஆற்றமகி ழடியருள மன்பாட அருளாட
ஆனந்த வெள்ள மாட
ஆத்துமம் நிழலாட அங்கமுள வெங்கணும்
அற்புதப் புளக மாடத்
தோற்றுநமை யொருகோடி சென்மங் கடந்துந்
துரந்துவரு தொந்த மாடத்
தூயவரு ளொளியிற் சுகித்துக் கிடக்குமொரு
சுத்தநிலை நினைவி லாடத்
தேற்றமுறு கண்ணருவி சேர்ந்தாட நங்குமர
செங்கீரை யாடி யருளே
தெய்வநிகழ் மாவையிற் சைவமகிழ் தேசிகா
செங்கீரை யாடி யருளே.
17வேறு✓
முற்பட் டுனது கருணைவெள்ளம்
முற்றும் முகந்து கொண்டேறி
மோனக் குகையுட் கருவிருந்து
முக்தா னந்தங் கொழித்தலையச்
சொற்செட் டினுக்குட் பொருட்கனிவு
தேக்கித் தெவிட்டக் கவிதைபொழி
தூயோன் குமர குருபரன்வாய்த்
தொன்மைப் புலமை நலந்துய்ப்பான்
எற்பட் டிலங்க வெடுத்தருளு
மெழின்மா முகநே ரெடுத்தாடி
எளியோம் புன்சொற் றிறமுங்கேட்
டிரங்கு மேழை பங்காளா
தற்கெட் டிருப்போர் தனிக்குரவா
தலைவா செங்கோ செங்கீரை
சைவம் வளர மாவைவளர்
சாமீ செங்கோ செங்கீரை.
18✓
சொல்லார் செறிவுட் பொருள்குழைந்து
சுவையுங் கனிந்து தேனிப்பத்
துலங்கு மாத்மத் துடிப்பினிசை
துன்னுஞ் சந்த மலையெறிந்து
பல்லா ரதிர்ச்சி படவிசைக்கும்
பக்தன் பகழிக் கூத்தனருட்
பாகைப் பிழிந்து பதப்படுத்திப்
படைக்கும் பிள்ளைக் கவிசுவைத்த
நல்லார் வத்தால் நம்மொழியும்
நயப்பான் நகைமா முகமெடுத்து
நலங்கொள் காட்சி யளித்தருளும்
ஞானச் சுடரோய் நானிலத்திற்
செல்லார் பொழிற்சீர் திகழ்மாவைத்
தேவே செங்கோ செங்கீரை
சைவம் வளர மாவைவளர்
சாமீ செங்கோ செங்கீரை.
19✓
நீரார் சடிலச் சிவன்தோன்றி
நெற்றிக் கண்ணுந் தோன்றிடவும்
நிலைபே ராது நின்றவன்றன்
நிறைவார் கருணை முழுக்காடித்
தாரா வளமெல் லாந்தந்த
தன்மா னஞ்சால் தமிழ்ப்புலவன்
தனிமா முருக தத்துவத்தைத்
தகைசால் முருகில் வடித்தெடுத்து
நாரார் புலமை மெருகொளிர
நாட்டுங் கலைஞன் நக்கீரன்
நலமார் ஞானப் புதுச்சுவைதோய்
நல்ல தமிழ்த்தேன் புதிதுண்ணுந்
தாரார் கடம்ப தமிழ்க்குரவ
தலைவா செங்கோ செங்கீரை
சைவம் வளர மாவைவளர்
சாமீ செங்கோ செங்கீரை.
20வேறு✓
வீடுத வும்வெளி யாகிய தில்லையின்
மேவுறு பொற்சபையில்
வியாக்கிர பாத பதஞ்சலி முனிவரர்
வேண்டுறு பாதமெடுத்
தோடுபு குந்து நிறைந்து மலர்ந்தொளி
ருள்ள மளாவிமிகு
முடலுறு மண்டல மெத்தனை யத்தனை
யூடு மொளிர்வரவே
கோடுவி யன்றுடி கொக்கரை சர்চ্চரி
குடமுழ வணிவீணை
கொம்பொடு தாரை குலம்படு காகள
குழலிசை குமுறிடநின்
றாடுசி வன்றரு மீடில்ப ரம்பொரு
ளாடுக செங்கீரை
அன்புறு மாவையி லின்புறு சிவமணி
யாடுக செங்கீரை.
21✓
நாற்றிசை காற்று நலிந்திடு கொட்பினி
னல்லக(ண்) ணீரொழுக
நாடுசி மிந்திவெண் டூசுதி கழ்ந்து
நடுக்கமு முற்றுடலிற்
றாற்றும டல்விரி தால மசைந்து
சரிந்து வளைந்தாடிச்
சார்வுற வொன்றனை யொன்று தழீஇநிமிர்
சால்புற வெந்தைபிரான்
நீற்று விளங்குடல் நீர்வழி கண்ணொடு
நேயமு றத்தழுவி
நின்று சரிந்து நிமிர்ந்து நடம்புரி
நின்மல னடியர்செய
லாற்றுறு மாவையி லடியவர் மனமணி
யாடுக செங்கீரை
அன்புறு மாவையி லின்புறு சிவமணி
யாடுக செங்கீரை.
22✓
தோடுகொள் பலவகை பொன்னரி மாமலர்
தொகுமொரு செண்டொளிரச்
சுந்தர வர்ண மியைந்து சிறந்திடு
தோகை மயிற்கலபக்
காடுகொ லெனவரு காவடி யினநிரை
கண்டுக ளிப்பேறிக்
காவுறு மென்சினை கோபுர நாசிகை
கார்மயி லினமேறிக்
கோடுவி யன்றுடி கொட்டிடு மேளமுன்
குறியிசை தவறாமே
கொண்டலர் சிறையொடு குதுகல நிறைவொடு
குதிகுதி குதியென்ன
ஆடுந டம்பயில் மாவையி லருமணி
யாடுக செங்கீரை
அன்புறு மாவையி லின்புறு சிவமணி
யாடுக செங்கீரை.